search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    அன்பின் வெளிப்பாடே பொறுமை

    ‘ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே’ என்று சங்கீதம் 37:7-ல் சொல்லப்பட்டுள்ளது.
    ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து சுவையான காபி ஒன்றை குடித்து தூக்கத்தை கலைத்தேன். சுவற்றில் உள்ள கடிகாரம் ஏழு மணி என்று ஒலித்தது. ஒரு நாளின் முழு பரபரப்பும், பிரச்சினைகளின் ஆரம்பமும் அந்த நேரத்திலிருந்து தான் தொடங்கும். ஆதலால் ஒவ்வொரு நாளும் அந்த காலை பரபரப்பு கடந்துவிட்டால் நன்றாக இருக்குமே என நினைப்பதுண்டு.

    பிள்ளைகள் காலை 7.15 மணியாகியும் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள். எட்டு மணிக்கு பள்ளிக்கு புறப்பட்டு விட்டால் தான் சரியாக இருக்கும். எனக்கு பொறுமை இழக்க ஆரம்பித்தது. மெதுவாக அது கோபமாக மாறி கடுமையாக வசையாக திசைமாறியது. வீட்டிலிருந்த‌ அமைதியும் நிம்மதியும் சட்டென காணாமல் போய்விட்டன.

    வீட்டிலிருந்த அனைவருக்கும் எரிச்ச‌ல், கோபம், பதற்றம், அவசரம், மறதி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் வந்து போயின. ஒரு வழியாக வீட்டை விட்டுக் கிளம்பி, வண்டியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக காரோட்டி பள்ளிக்கூடம் சென்று சேர்ந்த போது, பத்து நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

    பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் வண்டி எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே தடுப்புகள். வழியில் எழுந்த எரிச்ச‌லும் கோபமும் ஒருபுறம் இருக்க, நேரத்துக்கு செல்லவில்லையென்றால் சம்பளம் வேற பிடித்துவிடுவார்கள் எனும் சிந்தனை மனதில் இன்னொரு பக்கம் இருந்தது.

    நிம்மதி இழந்தவனாக அலுவலகத்தில் சேரும் போது எக்ஸ்பிரஸ் வண்டி போல கடிகார முள் பத்து தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த போது தான் காலை ஏழு மணிக்கு விட்ட மூச்சு மறுபடியும் கிடைத்தது.

    அருகில் இருப்பவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “ஏன் இவ்வளவு பதற்றம்?, பொறுமை கடலினும் பெரிது”.

    நீதிமொழிகள் 16:32 இவ்வாறு கூறுகிறது: “வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்”.

    கடவுளிடம் நாம் உலக பிரகாரமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கே ஜெபம் பண்ணுகிறோம். ஆனால் பொறுமை வேண்டும் என்று ஜெபம் செய்தது உண்டா?

    பொறுமை இழந்தால் கோபம் பிறக்கும். எல்லா கொடிய பாவங்களுக்கும் அந்த கோபம் காரணமாக இருக்கிறது. அப்படியானால் நாம் முதலாவதாக பொறுமை உள்ளவர் களாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா?

    வாழ்க்கையில் நாம் திட்டமிட்டபடி அல்லது மனதில் நினைத்தது போல எல்லாம் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் சில குறுக்கீடுகள் வந்தால் பொறுமை இழக்கிறோம்.

    இயேசுவின் சீட‌ர்கள் குறுக்கீடுகளை விரும்பாததால் குழந்தைகளை இயேசுவிடம் செல்ல அனுமதிக்கவில்லை என்கிறது மத்தேயு 19:14. ஆனால் இயேசுவோ ‘சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வர‌ விடுங்கள், தடுக்காதீர்கள்’ என்று சொல்கிறார்.

    சிரமம் இல்லாத வாழ்க்கையும், நினைத்ததை உடனடியாக சாதித்து விட வேண்டும் என்ற எண்ணமும் எல்லோருக்கும் மேலோங்கி இருக்கிறது. பொறுமையுடன் காத்திருக்க யாரும் விரும்புவதில்லை.

    எரிச்சல் அடைவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், சாலை நெரிசல், சுவையில்லாத உணவு, வெயில் கொடூரம், தாமதமான வாகனம், இனிப்பு குறைந்த டீ, நண்பனின் கிண்டல், காத்திருப்பு என சொல்லி கொண்டே போகலாம்.

    கடவுள் கொடுத்த விவேகம் தான் நாம் பொறுமையுடன் இருக்க கற்றுக்கொடுக்கும். நான் வெறும் ஒரு மனிதன் தான், கடவுள் அல்ல என்றும், மற்றவர்களும் என்னைப் போல தவறு செய்பவர்கள் தான் என்றும் புரிந்து கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

    கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற எண்ணமும் இருந்தால் நமக்குள் பொறுமை தானாகவே வந்து விடும்.

    ‘மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?’ (நீதிமொழிகள் 20:24)

    ‘அன்பு பொறுமையுள்ளது’ என்று பைபிள் சொல்கிறது, அப்படியானால், ‘பொறுமை இல்லையேல் அன்பு இல்லை’ என்பதே பொருளாகும். ஆதலால் அன்பில் இன்னும் ஆழமாக வாழ கற்றுக் கொள்ளுதல் பொறுமையாய் வாழ வழி வகுக்கும்.

    ஒருவருக்கு ஒருவர் பொறுமையில் நிலைத்திருங்கள். ஏன் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றால், ‘நீங்கள் அன்பானவர்கள்’.

    வாழ்க்கையில் பொறுமை உள்ளவர்களாக இருக்க கடவுளைச் சார்ந்திருக்கும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். ‘ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே’ என்று சங்கீதம் 37:7-ல் சொல்லப்பட்டுள்ளது.

    பொறுமையை வீடுகளில் ஆரம்பியுங்கள். வீதிகளில் அதை விரிவுபடுத்துங்கள். வாழ்க்கை அழகானது மனமாற ரசியுங்கள். வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது பொறுமையின்மையால் அதை அழித்து விட வேண்டாம்.

    துலீப் தாமஸ், சென்னை.
    Next Story
    ×