என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஆலய வழிபாடு, 6.30 மணிக்கு பங்கு மக்களின் பிரார்த்தனை மற்றும் ஜெப பாடல்கள் பாடப்பட்டன.

    இரவு 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிபட்டம் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி மறையுரையும் ஆற்றினர். கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புனித சூசையப்பர், புனித பாத்திமா அன்னை, புனித லூர்து அன்னை, புனித சகாய மாதா அன்பியங்கள் பாடல் குழுவினர் மற்றும் அஞ்சுகிராமம் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவில் அன்பியங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் காலை திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவில் கொடிபட்டம் அர்ச்சிப்பு நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் 8-ம் நாளில் அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புதுநன்மை பெறுவோர் சிறப்பிக்கிறார்கள். தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் நடக்கிறது. குருமட அதிபர் மெரிஸ் லியோ மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி சேதுக்குவாய்த்தான் பங்குதந்தை ராயப்பன் தலைமையில் நடக்கிறது. பவனியை அடுத்து துரைகுடியிருப்பு பங்குதந்தை ஆலிபன் மறையுரையாற்றுகிறார்.

    9-ம் நாள் விழாவில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். இதற்கு அழகப்பபுரம் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். தெற்கு கருங்குளம் அருட்பணியாளர் வில்பிரட் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆராதனை, தொடர்ந்து புனித அன்னம்மாள் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. பங்கு இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர் பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள் ராஜன், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    தங்கச்சி மடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 477-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய 3 மதத்தையும் குறிக்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு பகுதி கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆலய திருவிழாவில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் தங்கச்சி மடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 477-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முதல்நாளான நேற்று ஆலயம் முன்பு சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியை ராமநாதபுரம் மறை வட்ட அதிபர் அருள் ஆனந்த் கொடியேற்றி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின், விழாக் குழுதலைவர் பூபதி ஆரோக்கியராஜன் மற்றும் கிராம தலைவர்கள் அந்தோணி சந்தியாகு, அந்தோணி செபஸ்தியான், முஸ்லிம் ஜமாத் தலைவர் ரப்பானி, ஜமாத் நிர்வாகி பசீர், இந்து சமுதாய நிர்வாகிகள் கோவிந்தன், நாகேந்திரன் உள்பட மும்மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    திருச்சி புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் டி.யூஜின் திருப்பலிக்கு தலைமை தாங்கி, ஜெபம் செய்து கொடியேற்றி வைத்தார்.
    திருச்சி பெரியமிளகு பாறையில் அரசு மருத்துவ கல்லூரி அருகில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் 43-ம் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் டி.யூஜின் திருப்பலிக்கு தலைமை தாங்கி, ஜெபம் செய்து கொடியேற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருத்தல பங்கு தந்தை ஏ.வின்சென்ட் ஜோசப், திருச்சி தமிழ் இலக்கிய கழக அருட்தந்தை ஜோசப் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி பாடல், மறையுரை நடந்தது. விழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. நவநாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், நவநாள் ஜெபமும், பாடல் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடக்கிறது.முக்கிய விழாவான தேர்பவனி, வருகிற 25-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினம் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, திருச்சி மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை இன்னாசிமுத்து உள்ளிட்ட இறைமக்கள் கலந்துகொள்கிறார்கள்.
    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு வடவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் திருவிழா கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறையுரை நற்கருணை ஆசீர், இரவு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    24-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    அதைத்தொடர்ந்து பரலோக அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னை தேர்பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்குமேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு தீர்வு வந்தது போல, இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவித்ததினால் மனிதனின் பாவ வியாதிகளுக்கு தீர்வு வந்து விட்டது என்பதை குறித்துதான் இயேசு முடிந்தது என்று சொல்வதாக கூறப்படுகிறது.
    சிலுவையில் தொங்கிய இயேசு 7 வார்த்தைகளை கூறுகிறார். அந்த வார்த்தைகளில் 5, 6, 7-ம் வார்த்தைகளாக என்ன கூறினார் என்று தியானிப்போம்.

    தாகமாய் இருக்கிறேன் (யோவான்: 19-28) என்று இயேசு சிலுவையிலே 5-ம் வார்த்தையாக பேசுகிறார். இவருக்கு ஏற்பட்ட தாகம் சாதாரணமானதல்ல, ஆத்ம தாகம் என்று கூறப்படுகிறது. இனி எந்த ஒரு மனிதனும் நரக வேதனையை அனுப்பவிக்கக்கூடாது என்றும், அனைவரும் பரலோக இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக உள்ளது என்று சொல்லப்படு கிறது.

    மேலும் தாகமாய் இருந்த இயேசுவுக்கு புளித்த காடியை கொடுக்கிறார்கள். அந்த காடியை அவர் வாங்கியது நம்மீது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்து 6-வது வார்த்தையாக முடிந்தது (யோவான்:19-30) என்று கூறுகிறார். முடிந்தது என்கிற ஒரு வார்த்தையில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

    சிலுவையை குறித்து கடவுள் திட்டமிட்டு முன்அறிவித்திருந்தது எல்லாம் முடிந்தது. வேதாகமம் பழைய ஏற்பாட்டில் அவருடைய பாடுகளை குறித்து சொல்லப்பட்டது எல்லாம் முடிந்தது. இயேசுவின் ஆவி, ஆத்மா, சரீரத்தில் ஏற்பட்ட பாடுகள் எல்லாம் முடிந்தது. இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது. மனுக்குலத்தின் மீட்புக்காக அவர் செய்தது எல்லாம் முடிந்தது என்று சொல்லப்படுகிறது.

    எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு தீர்வு வந்தது போல, இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவித்ததினால் மனிதனின் பாவ வியாதிகளுக்கு தீர்வு வந்து விட்டது என்பதை குறித்துதான் இயேசு முடிந்தது என்று சொல்வதாக கூறப்படுகிறது.

    இப்படி இந்த உலகத்திற்கு இயேசு மனிதனாக அவதரித்து உலகத்தில் உள்ள பாவத்திற்காக தன்னையே சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து இந்த உலகத்திற்கு வந்த காரியம் அனைத்தையும் செய்து, முடிந்தது என்று கூறி விட்டு, கடைசியாக 7-ம் வார்த்தையாக ‘பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ (லூக்கா: 23-46) என்று கூறுகிறார்.

    ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது உயர் அதிகாரிகள் நமக்கு ஒரு வேலையை கொடுத்து அதை செய்ய சொல்லும் போது அந்த வேலையை திறம்பட செய்து முடித்து விட்டு அதிகாரியிடம் ஒப்படைப்போம்.

    அதே போல தான் பிதாவானவர் இயேசுவை இந்த உலகத்திற்கு என்ன நோக்கத்திற்காக அனுப்பினாரோ அந்த நோக்கம் நிறைவேறத்தக்கதாக மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் வாழ்ந்து மனிதனின் பாவங்களுக்காக சிலுவையில் பாடுகளை அனுபவித்து கடைசியாக தன் ஜீவனை (ஆவியை) பிதாவிடத்தில் ஒப்படைக்கிறார். இதைத்தான் சிலுவையில் கடைசி வார்த்தையாக பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று கூறி தன் ஜீவனை விடுகிறார் என்று நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம்.

    ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய பாவங்களுக்காக தன் உயிரையே சிலுவையில் தியாகம் செய்ததை இந்த நாட்களில் நினைவுகூர்ந்து அவருக்கு கீழ்படிந்து இந்த உலகத்தில் நல்ல மனிதர்களாகவும், பாவம் செய்யாதவர்களாகவும் இயேசுவின் வழியில் நடக்க தீர்மானிப்போம். கடவுள் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    சகோ.பிரவின், உடுமலை.
    ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்து விட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.
    ஆண்டவர் ஏசு தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு ஒரு நிபத்தனையை வைக்கிறார். சீடராய் வாழ விரும்புகிறவர் தன்னலாம் துறக்க வேண்டும். சிலுவையை சுமக்க வேண்டும். அவர் அனைவரையும் நோக்கி என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கி கொண்டு என்னை பின்பற்றட்டும் (லூக் 9:23).

    இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம். வாழ்வின் பாதை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்டவர் ஏசு கூறியபொழுது அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு. பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல் மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.

    யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைபோல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்வரை சிலுவை உரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டுமக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி. ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம். சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தியல், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம்தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.

    அதைத்தான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்து விட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.

    இன்று நம்முடைய வாழ்க்கை நம்முடைய ஆணவம், நம்முடைய தேவைகள், நம்முடைய திட்டம் மற்றும் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. அவைகளை சிலுவையில் அறைய வேண்டும். ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும். அதுதான் ஏசுவின் சீடராய் இருப்பதன் பெருமை.

    அருட்தந்தை, தேவதாஸ், கும்பகோணம்.
    எத்தனை நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும், இயேசுவை சார்ந்து வாழ்வோம். நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.
    இஸ்ரயேலின் முதல் அரசன் சவுல். கடவுளால், அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலிடம் பல நல்ல குணங்கள் காணப்பட்டது.

    ஆனால், அரசனான சவுல், ஒரு கட்டத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போகவே, கடவுள், இனியும் சவுல் அரசனாகாதபடி அவரைத் தள்ளி, அவருக்கு பதிலாக தாவீதுவை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்.

    இஸ்ரயேலருக்கும் பெலிஸ்தருக்கும் இடையே நடந்த யுத்தத்தில் சவுலும், அவர் மகன் யோனத்தானும் கொல்லப்பட்டனர்.

    அந்த காலங்களில் போரிலே தோற்கடிக்கப்படும் அரசனின் வாரிசுகளையும் கொல்வது வழக்கம்.

    அவ்வழக்கப்படி யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தும் கொல்லப்படலாம் என்ற பயம் சவுலின் வீட்டில் தொற்றிக்கொள்ளவே, பணிப்பெண் ஒருவர் மேவிபோசேத்தை தூக்கிக்கொண்டு ஓடினாள்.

    ஓடுகிற வழியில் குழந்தையாகிய மேவிபோசேத்தை தவறி கீழே போட்டு விடுகிறாள். விழுந்த குழந்தையின் கால்கள் அடிபட, மேவிபோசேத்து முடவனாகிறான்.

    சவுலுக்குப் பின் அரசனான தாவீது, மேவிபோசேத்திற்கு தினமும் அரச உணவு கிடைக்கும்படிச் செய்தார் என்பது ஒருபக்கமிருந்தாலும், பணிப்பெண் செய்தத் தவறு நாம் யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

    எதற்காக அந்த பணிப்பெண் ஓடினாள்? மேவிபோசேத்து என்னும் அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்காக. எதை தவற விட்டாள்? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய அக்குழந்தையை.

    இந்த பணிப்பெண் மட்டுமல்ல, பல நேரங்களில் நாம் செய்யும் தவறும் இதுவே.

    என் குடும்பம், என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்னும் ஆசையில் எங்கேயோ ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

    ஆனால், அந்த ஓட்டத்தின் நடுவே, கடவுள் நமக்கு அன்பாகத்தந்த குடும்பத்தை, பிள்ளைகளை எல்லாம் மறந்து, மொத்தத்தில் நம் வாழ்க்கையையும் கடவுள் நம்மைப் படைத்த உன்னத நோக்கத்தையும் தொலைத்து விடுகிறோம். அதன் விளைவாக இறுதியில் கடவுளையே மறந்துவிடுகிறோம்.

    இஸ்ரயேலர்கள் இவ்வாறு கடவுளை மறந்த, நன்றியற்ற வாழ்க்கை வாழ்ந்த போதெல்லாம் இறைவாக்கினர் மூலமாக எச்சரிக்கப்பட்டனர். எரேமியா என்னும் இறைவாக்கினர் வழியாக “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரேமியா 2:13) என்கிறார் கடவுள்.

    இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் மூலம் இந்த வசனத்தை எளிதில் விளக்கி விடலாம்.

    ஒருநாள், யூத அதிகாரி ஒருவர் இயேசுவிடம் வந்து, முழங்கால்படியிட்டு, ‘நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

    அதற்கு ‘இயேசு, மோசே கொடுத்த கற்பனைகளைக் கைக்கொள்’ என்கிறார்.

    அதிகாரியும், ‘போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்.

    இயேசு மறுபடியும் அவரைப் பார்த்து, ‘இன்னும் ஒரே ஒரு காரியம் தான், அதைச் செய்தால் நித்திய வாழ்வை பெறலாம். நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று, ஏழைகளுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார்.

    அவர் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தபடியால் இயேசு சொன்ன பதிலைக் கேட்டு, அதனை செய்ய மனதற்றவராய் போய்விட்டார்.

    மற்றொரு நிகழ்வு-

    இயேசு, தான் மிகவும் நேசித்த குடும்பமாகிய- மார்த்தாள், மரியாள், லாசரு என்பவர்களின் வீட்டிற்கு செல்கிறார்.

    இயேசுவுக்கு எதாவது உணவு கொடுக்கவேண்டும் என்னும் பதற்றத்திலேயே மார்த்தாள் இருக்கிறாள்.

    மரியாளோ, இயேசுவின் பாதத்தினருகில் அமர்ந்து, இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

    மரியாள் தனக்கு உதவி செய்யவில்லை என்று வருத்தமடைந்து, இயேசுவிடத்தில் வந்து; ‘ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா?. எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்’ என்கிறாள்.

    ஆனால் இயேசுவோ மார்த்தாளைப் பார்த்து, ‘நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்’ என்கிறார்.

    இயேசு மார்த்தாளுக்குச் சொன்ன பதில்தான் நமக்கான பாடமும் கூட. நாம் இன்று பல்வேறு காரியங்களைக் குறித்து யோசித்து யோசித்து, அந்த செல்வந்தனான யூத அதிகாரி போல, மார்த்தாளைப் போல வாழ்க்கைக்கு மிக முக்கியமான, ஆண்டவரை பற்றிக்கொள்ள மறந்துவிடு கிறோம்.

    அதனால் அந்த பணிப்பெண் குழந்தையை தவறவிட்டதுப்போல நாமும் நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம்.

    இயேசுவின் போதனைகளின் மையமாயிருக்கின்ற மலைப்பிரசங்கத்தில் இப்படி சொல்கிறார்:

    “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”.

    ஆம், எத்தனை நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும், இயேசுவை சார்ந்து வாழ்வோம். நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

    அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்.
    காரைக்கால் காமராஜர் சாலையில் புனித அந்தோணியார் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலியும், மின் அலங்கார பெரிய தேர்பவனியும் நடைபெற்றது.
    காரைக்கால் காமராஜர் சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டுத்திருவிழா கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியை, காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய, துணை பங்குத்தந்தை ஆரோக்கியசகாயராஜ் ஏற்றி வைத்தார். விழாவையொட்டி, தினசரி திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மின் அலங்கார பெரிய தேர்பவனியும், தேவ நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேர், ஆலயத்தை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. விழாவில், திரளான பங்குமக்கள் கலந்துகொண்டனர். 
    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமை தாங்க, வேங்கோடு மறைவட்ட முதல்வர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். தினமும் மாலையில் செபமாலை, திருப்பலி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது. 
    குற்றங்களை மன்னித்தால் நம் உறவுகள் ஏராளமாக தொடர்ந்து மலரும். அளவுக்கு அதிகமாக நன்மைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறும். இது பலருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
    இன்றைய உலகில் உறவுகள் போலியாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இயற்கையாக இயல்பாக இருக்க வேண்டிய உறவுகள், செல்பி கலாசாரத்தால் செயற்கையாகி விட்டது. உணர்வுகள் இல்லாத உலகத்தில் வாழ்கிறோமோ என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது. நமது சிரிப்பு, உணர்வு, உணர்ச்சி போன்ற அனைத்திலும் போலித்தனம் புகுந்து விட்டது. முரண்பாடுகளை நோக்கியே மனிதன் பயணம் செய்கிறான். உறவு என்பது இன்று வெறும் எண்ணிக்கையாகி விட்டது. எல்லாவற்றிலும் சுயநலமே முன்னுக்கு நிறுத்தப்படுகிறது. உறவு என்பது குறுகிய எல்லைகளுக்குள் சுருங்கி போய்விட்டது.

    உறவுகளை சரி செய்வதற்கு இதுவே உகந்த காலம் என்பதை உணர்ந்திடுவோம். எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதைத்து கொண்டிருந்தாலும், குற்றங்களும், குற்றாவாளிகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றார்கள். குற்றம் புரிந்தால் வாழலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் இருந்து மனிதர்கள் விடுபட வேண்டும். ஒவ்வொரு குற்றமும் உலகில் இன்னொரு மனிதரின் உரிமையை உயிரை பறிக்கும் செயல்கள் என்பதை குழந்தை பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுப்போம்.

    வெறும் தனிமனித பாவங்களை மட்டுமல்ல, சமுக பாவங்களைல் இருந்து விடுதலை பெற கடுமையாக உழைப்போம். இலக்குகளை வழுத்துக்கொண்டு உறவுகளை திட்டமிடுவோம். உயரிய லட்சியத்தை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் உழைத்து முன்னேறிக்கொண்டு இருப்போம். நம் முன்னோர் கட்டிக்காத்த தமிழர் மரபுகளில் உண்மையான உறவுகள் ஏராளம் இருந்தன. இதனை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு கடினமாய் உழைத்திடுவோம். எந்திரங்களை அல்ல, இதயங்களை வலுவாக்குவோம். நமக்கு எதிராக தவறுகள் செய்தவர்களை மன்னிப்போம். பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் போது பல நேரங்களில் அவர்களை மறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த மனிதர்களை நினைக்கும் போது புன்முறுவல் செய்ய பழகுவோம். அப்போது நமது முகத்தில், அகத்தில் உள்ள வலிகள் அனைத்தும் மறைந்து போகும்.

    குற்றங்களை மன்னித்தால் நம் உறவுகள் ஏராளமாக தொடர்ந்து மலரும். அளவுக்கு அதிகமாக நன்மைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறும். இது பலருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது.
    வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான்.

    ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த இறைவன் கடைசியாய் ஒருமுறை மக்களை இதயம் கசியக்கசிய அழைக்கின்ற நூல் இது எனலாம்.

    ‘ஓசேயா’ என்பதற்கு ‘மீட்பு’ என்று பொருள். இதில் பதினான்கு அதிகாரங்களும், 197 வசனங்களும், 5175 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அவரது நாற்பது ஆண்டு கால இறைவாக்கு உரைத்தலை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

    அன்பும் நம்பிக்கையும் கலந்த உறவை இறைவன் எதிர்பார்க்கிறார். மணப்பெண்ணான இஸ்ரேலோடு இறைவனுக்கு இருக்கின்ற உடன்படிக்கையாக இந்த நூல் அமைகிறது.

    இறைவனுக்கும், மணப்பெண்ணான இஸ்ரேலுக்கும் இருக்க வேண்டிய அன்பும், நம்பிக்கையும் வலுவிழந்தபோது ஓசேயா இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தார். “இணைபிரியாமல் இருந்த நமது அன்புறவு என்னவாயிற்று?” என்பது அவரது கேள்வியாய் இருந்தது.

    இறைவனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கும் திருமண உறவின் வலிமையையும், வலியையும் புரிந்துகொள்ள, இறைவன் இறைவாக்கினர்களை பல்வேறு கடின சூழ்நிலைகளுக்குள் வழி நடத்துவது வழக்கம்.

    எரேமியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றார் இறைவன். இஸ்ரேல் இல்லாத வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மனைவி இல்லாத எரேமியா புரிந்து கொண்டார்.

    எசேக்கியேலின் மனைவி இறந்து விடுகிறார். ஆனால் எசேக்கியேல் அழக்கூடாது என இறைவன் கூறுகிறார். காதல் மனைவியை இழந்த துக்கம் எவ்வளவு கடினமானது என்பதை எசேக்கியேல் உணர்ந்தார். அதன் மூலம் வழிவிலகும் யூதாவின் செயல் இறைவனை எவ்வளவு கலங்கடித்தது என்பதைப் புரிந்து கொள்கிறார்.

    அதே போல ஓசேயாவுக்கும் ஒரு புதிய படிப்பினையைக் கொடுக்கிறார். அதன்படி ஒரு விலைமாதுவை திருமணம் செய்துகொள்ள இறைவன் அவரிடம் சொல்கிறார். அவரும் அப்படியே செய்கிறார். அவளுடன் அன்பாய் குடும்பம் நடத்துகிறார். அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அதில் ஒன்றேனும் வழிதவறிப் பிறந்த குழந்தையாய் அமைந்து விடுகிறது.

    பின் ஓசேயாவின் மனைவி அவரை விட்டு விட்டு மீண்டும் பழைய விலைமகள் தொழிலுக்கே செல்கிறாள். ஓசேயாவோ அவளை தேடிக்கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வருகிறார். சில காலத்துக்குப் பின் இருவரும் மீண்டும் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

    ஓசேயாவின் மனைவி பாவ வாழ்க்கையில் புரண்டு கிடக்கிறார். ஓசேயா அவளை மணம் முடித்த பின்னும் அவருக்கு உண்மையாய் இருக்கவில்லை. அவளுடைய அன்பு போலித்தனம் மிகுந்ததாய் இருந்தது. மீண்டும் பாவ வழிக்கே திரும்பிய அவளை ஓசேயா மீட்கிறார். இஸ்ரேல் நாட்டை ஓசேயாவின் மனைவியோடு இறைவன் ஒப்பிடுகிறார்.

    ஓசேயாவோ தொடர்ந்து அன்பு செலுத்துகிறார். கண்டிப்பை வெளிப்படுத்தினாலும் மனைவியோடு அன்பாக வாழ்கிறார். இறைவனின் அன்பை இத்துடன் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்.

    ஓசேயாவின் நூல், ஏழு வகையான பாவங்களை பட்டியலிடுகிறது.

    1. தங்கள் திருமண வாழ்க்கையில் மக்கள் உண்மையற்றவர்களாக இருந்தார்கள். இறைவனோடும் அவர்கள் உண்மையான அன்பு வைக்கவில்லை.

    2. இறைவனை மறந்து, அவரிடம் ஆலோசனை கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து வந்தனர். தங்கள் அரசனையும், ஆள்வோர்களையும் தேர்ந்தெடுக்கையில் இறைவனை அவர்கள் நினைக்கவில்லை.

    3. மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கவில்லை. ஒருவரை மற்றவர் குறைகூறியும், புறங்கூறியும் வாழ்ந்து வந்தார்கள்.

    4. பிற இன மக்களின் கடவுள்களை வழிபட்டு வந்தனர்.

    5. தகாத உறவுகளின் பாதையில் நடந்து தங்களுடைய ஆன்மிக வாழ்க்கையைக் கறைபடுத்திக் கொண்டனர்.

    6. இறைவனின் அறிவுரைகளை நிராகரித்து வாழ்ந்தனர்.

    7. நன்றியில்லாத மக்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

    மக்களுடைய அரைவேக்காட்டுத் தனத்தை ஓசேயா தனது உவமைகளின் மூலமும், உரைகள் மூலமும் தொடர்ந்து விளக்குகிறார். ஒருமுறை ‘கேக்’ செய்வதைப் பற்றி சொல்லி அதை விளக்குகிறார். ஒரு புறம் மட்டும் வெந்து போகின்ற கேக்கானது மறு பக்கத்தில் பச்சையாக இருக்கும். அதை யாரும் சாப்பிட முடியாது. அதுபோல இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை பயனற்றதாக இருக்கிறது என்று ஒரு முறை விளக்கினார்.

    வேடனின் வலையில் சிக்கிக்கொண்ட புறாவைப் போல இஸ்ரேல் இருக்கிறது என்று இன்னொரு முறை குறிப்பிட்டார்.

    இஸ்ரேலின் இந்த நிலைமைக்குக் காரணமாக ஓசேயா நான்குவித மக்களைக் குறிப்பிடு கிறார். அதில் கடவுளை அறியாத குருக்கள், போலித் தீர்க்கதரிசிகள், இறைவனின் வழியில் நடக்காத மன்னர்கள், ஏழைகளை ஒடுக்கும் முதலாளிகள். இந்த நாலு வகையினரும் தான் இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

    ஓசேயா நூல் வியப்பான ஒரு ஆன்மிக அனுபவம்.

     - சேவியர்.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 பேராலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் மராட்டிய மாநில மீனவர்கள் சார்பில் உத்தரியமாதாவுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பேராலயத்தில் அதிபர் பிரபாகர் தலைமையில் மராட்டிய மொழியில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய பங்குதந்தை சூசை மாணிக்கம் கொடியை புனிதம் செய்து கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேராலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைத்தெரு, கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயம் முன் திரண்டிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அருட்சகோதரிகள் உள்பட மும்பை, விசாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
    ×