search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது

    ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஆலய வழிபாடு, 6.30 மணிக்கு பங்கு மக்களின் பிரார்த்தனை மற்றும் ஜெப பாடல்கள் பாடப்பட்டன.

    இரவு 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிபட்டம் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி மறையுரையும் ஆற்றினர். கொடியேற்றத்தின் போது ஆலய நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புனித சூசையப்பர், புனித பாத்திமா அன்னை, புனித லூர்து அன்னை, புனித சகாய மாதா அன்பியங்கள் பாடல் குழுவினர் மற்றும் அஞ்சுகிராமம் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவில் அன்பியங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் காலை திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவில் கொடிபட்டம் அர்ச்சிப்பு நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் 8-ம் நாளில் அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, புதுநன்மை பெறுவோர் சிறப்பிக்கிறார்கள். தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் நடக்கிறது. குருமட அதிபர் மெரிஸ் லியோ மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி சேதுக்குவாய்த்தான் பங்குதந்தை ராயப்பன் தலைமையில் நடக்கிறது. பவனியை அடுத்து துரைகுடியிருப்பு பங்குதந்தை ஆலிபன் மறையுரையாற்றுகிறார்.

    9-ம் நாள் விழாவில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். இதற்கு அழகப்பபுரம் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ் தலைமை தாங்குகிறார். தெற்கு கருங்குளம் அருட்பணியாளர் வில்பிரட் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் மாலை ஆராதனை, தொடர்ந்து புனித அன்னம்மாள் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. பங்கு இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர் பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள் ராஜன், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×