என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    9-ம் திருவிழா அன்று மாலை பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது.
    பணகுடி புனித அமல அன்னை ஆலய திருவிழா பங்கு குரு இருதயராஜ் அடிகள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் காலை ஜெபமாலை, திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    9-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது. அதன்பின் ஆடம்பரமாலை ஆராதனையும், 10-ம் திருவிழா (8-ந்தேதி) அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை அமல அன்னை ஆலய பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனியை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான முறையில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அரவிந்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 3 நாட்கள் நடைபெறும். இந்த 3 நாட்கள் நடைபெறும் தேர் பவனியை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான முறையில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து தேர்பவனி தொடர்பாக சுரேஷ்ராஜன் மனு அளித்தார். அப்போது மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி உள்பட பலர் உடன் வந்தனர்.
    மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’
    இயேசுவின் போதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னுடைய போதனைகளுக்கு இயேசு தேர்ந்தெடுத்த ஆயுதம் கதைகள். கதைகள் மூலமாக வாழ்க்கையைக் குறித்த கேள்விகளையும், ஆன்மீகம், நிலைவாழ்வு குறித்த விளக்கங்களைக் கொடுப்பதையுமே அவர் தன்னுடைய போதனைகளின் பாணியாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அன்றைய வாழ்க்கை சார்ந்த கதைகளாகவே இருந்தன. அவருடைய கதைகளில் உலவும் கதாநாயகனும், வில்லனும் எல்லோரும் கதையைக் கேட்கும் மக்களுக்குப் பரிச்சயமானவர்களாகவே இருந்தார்கள். எனவே அவருடைய கதைகள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்ந்தன.

    பெரும்பாலும் மலைப்பகுதிகளிலோ, ஏரிகளின் ஓரத்திலோ, ஏரியில் படகில் அமர்ந்து கரையில் இருக்கும் மக்களை நோக்கியோ தன்னுடைய போதனையைச் செய்வதையே இயேசு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய எளிய கதைகள் இதுவரை மக்கள் அறிந்திராத சட்டநூல்களின் கடின பாகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவற்றை மிக எளிமையாக விளக்கின.

    அவருடைய போதனையின் முக்கியமான நோக்கம் தெளிவு படுத்துதல். மக்களுக்குப் புரியாத சட்டங்களையும், உண்மைகளையும், தன்னை நோக்கி வீசப்படும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துதல். எது உண்மை எதை கடைபிடிக்கவேண்டும் என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் எடுத்துரைத்தல். இது தான் இயேசுவின் போதனைகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் தூண்டின. இதற்கு முன் வந்த இறைவாக்கினர்கள் பலர் செய்யாத செயல் இது ! எனவே இயேசு அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

    அவற்றிலும் சில போதனைகள் கதைகளின் வழியாகப் பயணித்து புரியாத ஒரு செய்தியை நோக்கிய கேள்விகளை எழுப்பின. எனவே தான் பல வேளைகளில் இயேசுவின் சீடர்களே இயேசு சொன்ன கதைகளுக்கான விளக்கங்களை தனியே இயேசுவிடம் கேட்க நேர்ந்தது.

    அவருடைய கதைகளில் விவசாயிகள், ஏழைகள், தோட்டம் வைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பயணிகள் இவைகளைச் சார்ந்தே இருந்தன. இவையெல்லாம் மக்களுக்குப் பரிச்சயமான களங்கள்.

    இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுத்தார் இயேசு.

    மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து, ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும். அதை விடுத்து பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்று குற்றம் சுமத்தினார்கள்.

    இயேசு அவர்களைப் பார்த்து,‘ஒருவருக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போகிறார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வரும்போது ஒரு ஆடு குறைவு படுகிறது என்றால் அவன் என்ன செய்வான் ? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டானா ? அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா… வழி தவறிப்போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டானா ? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டானா ?’ என்று கேட்டார்.

    ‘வருவான்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

    ‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து. வாருங்கள் என்னோடு மகிழுங்கள் காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்வான் இல்லையா ?’

    ‘ஆமாம். அதற்கென்ன ?’

    ‘அதே போலத் தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’

    இயேசு கதையை முடித்தார்.

    பாவிகளோடு தான் பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை இயேசு விளக்குகையில் கூட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் ஆடு மேய்ப்பது அங்கே வழக்கமான செயல். ஒரு ஆடு காணாமல் போனாலும் மற்ற ஆடுகளை மேய்ப்பன் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு தொலைந்த ஆட்டைத் தேடிப் போவான் என்பது அனைவருக்கும் தெரிந்த செயல், எனவே இயேசு தன்னுடைய பணியை ஒரு மேய்ப்பனுடன் ஒப்பிடுகையில் மக்கள் கூட்டம் புரிந்து கொள்கிறது.
    தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும்
    திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசக்கட்டை மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்றார். மேலும் தொடர்ந்தவர், ஒரு உவமையை (தலைவரும் பணியாளரும் உவமை) கூறி, சீடர்களுக்கு பாடம் புகட்டினார்.

    ‘‘உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீர் உடனே வந்து உணவருந்த அமரும்” என்று உங்களில் எவராவது சொல்வாரா..? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரா? மாறாக, “எனக்கு உணவு ஏற்பாடு செய்யும், உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும், அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்” என்று சொல்வாரல்லவா?

    அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்.”

    சீடர்கள் இயேசுவிடம் தங்களின் நம்பிக்கையை மிகுதியாக்கும்படி கேட்டார்கள். இயேசு கடுகளவு நம்பிக்கை இருந்தால்கூட மரத்தையும், மலையையும் பெயர்க்கமுடியும் என்று அறிவித்தார். எனவே, தம் சீடர்களுக்குத் தேவையானது பணிவும் தாழ்மையுமே என்பதை இந்த உவமையின் வாயிலாக அறிவித்தார்.

    நற்செய்தியின் பணியில் தலைவராகிய இயேசுவும் பணியாளராகவே இருந்தார். திருவிருந்து அளிக்கும்போது இயேசு, “யார் பெரியவர்?, பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

    தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும். நம்பிக்கையுள்ளோரை வழிநடத்தும் மேற்பார்வையாளராக பணிபுரியவேண்டும். அளிக்கப்பட்டப் பணிகளை ஓய்வின்றிச் செய்து முடிக்கவேண்டும். நன்றியையோ, ஓய்வையோ, எதிர்பார்க்காமல் தங்கள் பணியைத் தொடரவேண்டும் என்று இயேசு தம் சீடருக்கு அறிவுரை கூறினார்.

    இவ்வாறே திருத்தூதர் பவுலும், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்று அவரின் கடமையை அறிவித்தார்.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
    பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருப்பலி நடத்தினார். வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.

    மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாதிரியார்கள் மை.பா.சேசுராஜ், அன்டோ, உடையார்பட்டி மைக்கேல், ஆயரின் செயலாளர் மைக்கேல் பிரகாசம், மும்பை டேவிட், மதுரை சேவியர் தயாளன், பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஸ் செல்வ தயாளன், அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம், 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் நடைபெறுகிறது.
    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும், பகல் 1 மணிக்கு அசனமும் நடைபெற்றது.
    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும், பகல் 1 மணிக்கு அசனமும் நடைபெற்றது. விழா வருகிற 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகு, இறைமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் கிலேரியஸ் மந்திரித்து, குருசு (சிலுவை) கொடியை வடக்கூர் தலைவர் சகாய திலகராஜிடமும், புனித சவேரியார் கொடியை தெக்கூர் தலைவர் சவரிமுத்துவிடமும் வழங்கப்பட்டது. கொடியேற்றுத்துக்கான மலர்களை தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் செயலாளர்கள் அந்தோணி சவரிமுத்து, கின்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் பேராலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் திருவிழாவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் திருவிழா நடக்கிறது. 5-வது நாள் திருவிழாவான 28-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத் திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. . ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பக்த சபைகள், சங்கங்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    தேர்ப்பவனியின்போது புனித சவேரியார், மாதா தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24- ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற 24- ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா தொடர்பாக பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன் நேற்று பேராலய வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    குமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இங்குள்ள கோட்டார் என்னும் இடத்துக்கு புனித சவேரியார் வந்தார். மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இணைந்த அவர் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றினார். அதோடு மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். அப்படிப்பட்ட புனித சவேரியாருக்கு இங்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் திருவிழா காவல்துறை சார்பில் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பின்னர் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்க உள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    திருவிழா தொடர்பாக கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறினார். மேலும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக உறுதி அளித்தோம். மேலும் திருவிழாவையொட்டி டிசம்பர் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்து உள்ளோம்.

    இதே போல போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனையும் சந்தித்து பேசினோம். அப்போது ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக அவர் கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசி உள்ளோம். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த முறை திருவிழாவில் அனைத்து வழிபாடுகளும் நடக்கும். ஆனால் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. கடந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. இதனால் புனித சவேரியார் தங்களது வீட்டுக்கு வரவில்லையே என்று மக்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு தேர் பவனி வழக்கம் போல நடக்க வேண்டும் என்று கோரி உள்ளோம். குறைவான ஆட்களுடன் வழக்கமான இடங்களுக்கு தேர் பவனி நடத்த ஆலோசித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உதவி பங்குதந்தை பிராங்கோ பிரான்சிஸ், கோட்டார் வட்டார முதல்வர் சகாய ஆனந்த், பங்கு பேரவை துணை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, பொருளாளர் செலுக்கஸ், துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
    நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவின் இறுதி நாளான நேற்று சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அவரும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

    இரவில் நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள்சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ், பிரான்சீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    சிலுவையிலும் அவர் கர்த்தத்துவம் மாறவில்லை, என்பதை அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் வார்த்தைகள் புலப்படுத்துகிறது (லூக் 23:42).
    கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா 9:6) என்றான். கர்த்தத்துவம் என்பது “ஆளுகை” அல்லது “அரசாட்சியை” குறிக்கும். நம்முடைய ஆண்டவர் இராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

    “இஸ்ரவேலை ஆளப்போகிறவராக” (மீகா 5:2) மீகாவும், “இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோலாக” (எண் 24:17) பிலேயாமும், இயேசுகிறிஸ்துவை முன்னுரைத்தது அவர் தோளின் மீதிருந்த கர்த்தத்துவத்தை (இராஜரீகத்தை) தூரத்திலேயே கண்டதினாலே.

    அவருடைய மானிட வாழ்விலும் அவரின் தோளின் மேலிருந்த கர்த்தத்துவத்தை ஜனங்கள் கண்டார்கள்.

    * கிழக்கிலிருந்து தேடி வந்த சாஸ்திரிகள். (மத் 2:1,2,11).

    * நாத்தான்வேல் (யோவா 1:48,49).

    * எருசலேமின் ஜனங்கள் (யோவா 12:13).

    சிலுவையிலும் அவர் கர்த்தத்துவம் மாறவில்லை, என்பதை அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் வார்த்தைகள் புலப்படுத்துகிறது (லூக் 23:42). அவரை பரிகாசம்பண்ணும்படியாக “நசரேயனாகிய இயேசு யூதருடைய இராஜா” என்று எழுதப்பட்டதும் (யோவா 19:19), அவரின் கர்த்தத்துவம் வெளிப்படும்பொருட்டே.

    உயிர்தெழுந்த கிறிஸ்துவாய் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தினபோது, “ஆண்டவரே இக்காலத்திலா இராஜியத்தை இஸ்ரவேலுக்கு திரும்ப கொடுப்பீர்” (அப் 1:6) என்று கேட்டதும், அவர் தோளின்மீதிருந்த கர்த்தத்துவத்தினிமித்தமே. மகிமையிலும் அவர் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்.

    ஆனால், கர்த்தத்துவத்தை சுமந்த அதே தோள், சாபத்தின் சின்னமாகிய சிலுவையை சுமந்ததை யோவான் 19:17-ல் வாசிகிறோம். சிலுவையை சுமந்தார் என்றால் நம்முடைய துக்கங்களை (ஏசா 53:4), அக்கிரமங்களை (ஏசா 53:11), பாவங்களை (ஏசா 53:120 சிலுவையின் உருவில் சுமந்தார். நாம் அனுபவிக்க வேண்டிய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். “நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்” (1 பேதுரு 2:24). நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கவே அவர் வெளிப்பட்டார் (1 யோ 3:5). உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானார்.

    அவர் சிலுவையை சுமந்தது துக்கத்தோடே அல்ல; தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டே (எபி 12:2). அது எந்த சந்தோஷம் தெரியுமா? நம்மை அவர் தோளின் மீது சுமக்கப்போகிற சந்தோஷம் (லூக் 15:5,6). ஆம், காணாமல் போன ஆட்டை கண்டுபிடித்த மேய்ப்பன் தன் தோளின் மீது ஆட்டை சுமந்து கொண்டு சந்தோஷப்பட்டதுபோல, நம்மை அவரின் கர்த்தத்துவமுள்ள தோளில் உட்கார வைத்து சந்தோஷப்படுகிறார். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக!

    அவர் தோளில் அமர்ந்திருக்கும் நாம் சிலுவையின் உருவில் நம்முடைய பாவங்களை சுமந்த தோளிலுள்ள காயங்களை முத்தம்செய்து, கர்த்தத்துவமுள்ள தோளில் கனிவாய் நம்மை அமரவைக்க கடினசிலுவை சுமந்தவரை நினைவுகூர்ந்து கருத்துடனே தொழுதிடுவோம்! ஆமென்.
    யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.
    லூக்கா 13 : 6..9

    “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

    தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.

    திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?

    இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.

    தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.

    அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.

    இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.

    மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.

    இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.

    இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.

    இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?

    கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.

    அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.

    இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.

    கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.

    அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.

    கனி கொடுத்தால் விண்ணக வாழ்வாகிய மீட்பு.
    கனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.

    நமது வாழ்க்கையை மறு பரிசீலனை செய்வோம். நமது வாழ்க்கை கனிதரும் வாழ்வாய் இருக்கிறதா ? நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா ? நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா ? பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா ? நம்மை நாமே ஆராய்கிறோமா ?

    சிந்திப்போம்.
    கனி தருவதே மரத்தின் பணி.
    கனி தராவிடில் வாழ்வேது இனி.

    ×