search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித சவேரியார்
    X
    புனித சவேரியார்

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24- ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற 24- ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா தொடர்பாக பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன் நேற்று பேராலய வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    குமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இங்குள்ள கோட்டார் என்னும் இடத்துக்கு புனித சவேரியார் வந்தார். மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் இணைந்த அவர் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றினார். அதோடு மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். அப்படிப்பட்ட புனித சவேரியாருக்கு இங்கு பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் திருவிழா காவல்துறை சார்பில் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பின்னர் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்க உள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.

    திருவிழா தொடர்பாக கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறினார். மேலும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக உறுதி அளித்தோம். மேலும் திருவிழாவையொட்டி டிசம்பர் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்து உள்ளோம்.

    இதே போல போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனையும் சந்தித்து பேசினோம். அப்போது ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக அவர் கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசி உள்ளோம். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த முறை திருவிழாவில் அனைத்து வழிபாடுகளும் நடக்கும். ஆனால் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. கடந்த ஆண்டு தேர் பவனி ஆலய வளாகத்துக்கு உள்ளேயே நடந்தது. இதனால் புனித சவேரியார் தங்களது வீட்டுக்கு வரவில்லையே என்று மக்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு தேர் பவனி வழக்கம் போல நடக்க வேண்டும் என்று கோரி உள்ளோம். குறைவான ஆட்களுடன் வழக்கமான இடங்களுக்கு தேர் பவனி நடத்த ஆலோசித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உதவி பங்குதந்தை பிராங்கோ பிரான்சிஸ், கோட்டார் வட்டார முதல்வர் சகாய ஆனந்த், பங்கு பேரவை துணை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, பொருளாளர் செலுக்கஸ், துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×