என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தவறு இருப்பது தெரிந்தால் காணிக்கையை கொடுக்காதீர்கள். பாவங்களை சரிக்கட்டிவிட்டு வந்த பிறகு செலுத்தும் காணிக்கைதான் இறைவனால் ஏற்கப்படக் கூடியது.
    எல்லா மனிதரின் நடத்தையிலும் வித்தியாசங்கள் உண்டு. சிலர் கிடைக்கும் நேரத்தில் ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதியை மறந்து செயல்படுவார்கள். சிலர் மனசாட்சியின்படி செயல்பட முயற்சிப்பார்கள். சிலர் உழைப்பைத் தாண்டி வரும் வருவாயை இறைநீதிப்படி தவிர்த்துவிடுவார்கள்.

    ஆக ஒரு மனிதன், இயல்பு நிலை, மனசாட்சியின் நிலை, ஆன்மிக நிலை என்ற 3 நிலைப்பாடுகளில் ஒன்றை பின்பற்றுகிறான்.

    ஆனால் சிலர் ஆன்மிக நிலையை தாங்கள் அடைந்துவிட்டதாக கருதிக்கொண்டு இயல்பு நிலையில் நீடிக்கிறார்கள். அந்தந்த சந்தர்ப்பங்களில் சாதி மத சார்பு நிலைப்பாட்டை எடுப்பது, திட்டுபவரை பதிலுக்கு பழிப்பது, சமநிலைப்பாடு உடையவர்களை பொறாமையால் பகைப்பது என்று பல்வேறு இயல்பு குணாதிசயங்களோடு வாழ்ந்தாலும், ஆன்மிகத்தில் திளைத்துக் கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் கிறிஸ்தவத்தில் அநேகம்.

    சரீர பாவங்கள், உள்ளத்தில் இருந்து செய்யப்படும் பாவங்கள், ஜென்ம சுபாவங்கள் (இயல்பு நிலை) மூலம் செய்யும் பாவங்கள் ஆகிய 3 விதமான பாவங் களுக்கு பிராயச்சித்தம் தேடிவிட்டு, அவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான இறைவனின் பலத்தைப் பெறுவதுதான் ரட்சிப்பின் முழு அம்சமாகும்.

    இதுவரை செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது தொடர்பான உபதேசங்கள்தான் ஒருவரை ரட்சிப்பின் திசையை நோக்கிக் காட்டுவதாக அமையும். அதில்தான் கிறிஸ்தவ மார்க்கம் தனித்து நிற்கிறது. பாவங்களை, தீமைகளை செய்யாதே என்று எல்லா மார்க்கங்களுமே கூறுகின்றன. ஆனாலும் ஏற்கனவே செய்த பாவங்களில் இருந்து மீட்கப் படுவதோடு, அந்த பாவங்களை மீண்டும் செய்யாமலிருக்கும் வழிகளை கிறிஸ்தவம்தான் காட்டுகிறது.

    பாவங்களைத் தீர்க்க பலியிடுதல், பரிகாரங்களைச் செய்தல் என மற்ற மார்க்கங்களில் பல்வேறு வழிகளும், உபதேசங்களும் காட்டப்பட்டாலும், அந்தப் பாவங்களை அந்த மார்க்கத்தார் மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான பலத்தை அந்த மார்க்கம் தருவதில்லை.

    ஆக பாவமுள்ள மனிதன், என்றுமே பாவமற்ற வாழ்க்கை நிலையை அதாவது உண்மையான ஆன்மிக நிலையை அடைவதற்கான வழிகாட்டியாக கிறிஸ்தவம் அமைந்துள்ளது.

    கிறிஸ்தவத்தை பின்பற்ற முடியாத நிலையில் இருந்தால்கூட, ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் புகுத்தியுள்ள மனசாட்சியின் நிலையைக் கடைபிடிப்பதும் இறைவன் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே வேதத்தில் காட்டப்பட்டுள்ளது (ரோமர் 2:14,15).

    ஆனாலும் சுத்த மனசாட்சியின் இறுதி நிலை காட்டும் மார்க்கமும் கிறிஸ்தவமே. எனவே கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்தவர்கள், பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இடைநடுவில் வேறு மார்க்கத்தில் இருந்து மாறி வந்தவர்கள் எவரென்றாலும், இறைநீதி வாழ்க்கைக்கான தொடக்க நடத்தையைக் குறித்து வேதம் வலியுறுத்துகிறது (மத்.5:2326).

    அந்த வசனங்கள் கூறுவது என்னவென்றால், ‘ஆகையால், நீ பலி பீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

    எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும் படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லு கிறேன்’ என்பதே.

    அதாவது, ஒருவன் கிறிஸ்தவத்துக்கு வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தால், மற்றவருக்கு விரோதமாக செய்திருந்த பாவங்களை பட்டியலிட்டு, அவர்களிடம் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு, அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்துவிட்டு, அதன் பின்னர் இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, கிறிஸ்துவை பின்பற்ற வாருங்கள்.

    அநீதியாக பணம் கொடுத்து வாங்கிய கல்வியிடம், அரசுப் பணி, ஒப்பந்தங்கள் போன்றவற்றை திருப்பிச் செலுத்துங்கள். அநீதியாய்ப் பெற்ற சம்பாத்தியம், சொத்து, நபர்களை விட்டுவிட்டு கிறிஸ்தவத்துக்கு வர முயற்சி செய்து பாருங்கள், கிறிஸ்தவத்தின் தன்மை புரியும்.

    கிறிஸ்தவ பாதையில் நுழைவது இடுக்கமானது என்பதை வேதமும் சொல்கிறது. கடைசி பைசாவை கொடுத்து சரிக்கட்டாதவரை பழைய இயல்பு நிலையில் இருந்து புறப்பட்டு கிறிஸ்தவத்துக்குள் வர முடியாது என்பதை மேற்கூறப்பட்டுள்ள வசனத்தில் இயேசு குறிப்பிட்டுள்ளார்.

    கிறிஸ்தவத்தை பின்பற்றி நடப்பது மற்ற மார்க்கம்போல் எளிதானது அல்ல.

    எனவே இனி தேவாலயத்துக்கு வருகிறவர்கள், இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் பொருளை அபகரித்து இருக்கிறேனா? எனது காணிக்கையில் அநியாயப் பணம் கலந்துள்ளதா? நோகடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாரையாவது அவதூறாக பேசியிருக்கிறேனா? எனது அநீதியான நடத்தையினால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டுள்ளதா? வேறு எந்த வகையிலாவது உலக சட்டங்களையோ, இறைநீதியையோ மீறியிருக்கிறேனா? என்பதைப்பற்றி முதலில் யோசியுங்கள்.

    தவறு இருப்பது தெரிந்தால் காணிக்கையை கொடுக்காதீர்கள். பாவங்களை சரிக்கட்டிவிட்டு வந்த பிறகு செலுத்தும் காணிக்கைதான் இறைவனால் ஏற்கப்படக் கூடியது.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, பொருளாளர் இவாஞ்சலின் பெஸ்கி மறையுரை ஆற்றுகிறார். நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் அமுதவளன் தலைமை தாங்க, அருட்பணியாளர் அமல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை நடக்கிறது. 13-ந்தேதி மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.

    15-ந்தேதி காலை 6 மணிக்கு மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தினவிழா சிறப்புத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் விமல்ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் பிலிப் ஏ.திவ்யன் மறையுரை ஆற்றினார். 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.

    19-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் தார்சியுஸ்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலியும், 8 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பெர்பெச்சுவெல் ஆன்டனி தலைமை தாங்க, அருட்பணியாளர் ரசல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், அதைத்தொடர்ந்து கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆன்டனி பென்சிகர் மறையுரை ஆற்றுகிறார்.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் போர்ஜியா தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆனந்த் மறையுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் வலேரியன் தலைமை தாங்க, அருட்பணியாளர் அருள்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நற்கருணை ஆராதனையும், 5.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது. தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    15-ந்தேதி காலை 7 மணிக்கு அன்னை மரியாளின் விண்ணேற்பு, சுதந்திர தின திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஜான்பீட்டர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜெரி மறையுரை ஆற்றுகிறார். 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார்.

    19-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்க, அருட்பணியாளர் சாம் பெலிக்ஸ் ஆன்டனி மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை நற்கருணை ஆசிர் நடக்கிறது. அருட்பணியாளர் ஜான்குழந்தை தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாயம் மறையுரை ஆற்றுகிறார்.

    இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 20-ந்தேதி காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் அமிர்தராஜ் மறையுரை ஆற்றுகிறார். பகல் 2 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசிர், கொடியிறக்கமும், இரவு 7 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடக்கிறது.
    இந்த நற்செய்தியில் தொண்டு செய்வது எவ்வளவு சிறந்தது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறார். தொண்டு ஒன்றுதான் மனித சமூகத்தை மலர்த்தும் என்பதற்கு இந்த நற்செய்தியை விட வேறு ஒரு சான்று தேவை இல்லை.
    இந்த நற்செய்தியைப் படியுங்கள். சிந்தியுங்கள். தெளிவு பெறுங்கள்.

    அக்காலத்தில் செபதேயு என்பவர் இருந்தார். அவருடைய மனைவி தம் மக்களை அழைத்துக் கொண்டு, இயேசு பிரானிடம் சென்றார். இயேசுவிடம் நெருங்கி வந்த அவர், இயேசுவைப் பார்த்து மிகவும் பணிவோடு நின்றார். இயேசு பெருமான், அவரைப் பார்த்து, ‘உமக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார்.

    செபதேயுவின் மனைவி அவரை நோக்கி, ‘நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உனது அரியணையின் வலப்புறமும், இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்’ என்று வேண்டிக்கொண்டார்.

    இயேசு பெருமான் மறுமொழியாக, ‘நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப் போகும், துன்பமான கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘முடியும்’ என்றார்கள்.

    அவர் அவர்களை நோக்கி, ‘ஆம்! என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது என் செயல் அல்ல. மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ, அவர்களுக்கே அருளப்படும்’ என்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப் பேர்கள், அச்சகோதரர் இருவர் மீது கோபம் கொண்டனர். இயேசு அவர்களை அழைத்து, ‘பிற இனத்தவரின் தலைவர்கள், மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள் மீது, தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள், முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும், தொண்டு ஏற்பதற்கு அல்ல- தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.

    இந்நற்செய்தியைப் படிக்கும்போது, வரலாற்றையும் நினைவில் கொள்வோம்.

    செபதேயுவின் மக்களில் ஒருவர்தான் ‘புனித யாக்கோபு’ என்பவராவார். இவர் இயேசுவோடு நெருங்கி இருந்தவர்.

    குறிப்பாகச் சொல்லப்போனால் சீமோனின் மாமியாரை குணப் படுத்தியபோதும், யாயீரின் இறந்த மகளை, உயிருடன் எழுப்பியபோதும், ‘ஜெத்சமெனி’ என்ற தோட்டத்தில், இயேசு பெருமான் ரத்த வியர்வை வியர்த்தபோதும், இயேசு உருமாற்றம் அடைந்தபோதும் கூடவே இருந்தவர். எல்லாவிதத் துன்பங்களையும் அனுபவித்தவர்.

    இவ்வரலாற்றை நினைவில் கொண்டு, இந்நற்செய்தியின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம்.

    முதலில், செபதேயுவின் மனைவி இயேசு பிரானைப் பார்த்து, நீர் ஆட்சி செய்யும்பொழுது, எம் மக்களில் இருவரில் ஒருவர், உமது அரியணையின் வலப்புறத்திலும், மற்றொருவர் உமது அரியணையின் இடப்புறத்திலும் அமர வேண்டும் என்று ஏன் கேட்டாள் என்பதற்குப், பின்புலம் ஒன்று இருப்பதை இயேசு பிரானே விவரிக்கிறார்.

    ‘பிற இனத்தவரின் தலைவர்கள், மக்களை அடக்கி ஆள்கிறார்கள். உயர்ந்த குடியில் பிறந்த மக்கள், அவர்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். இவற்றை நீங்கள் அறிவீர்கள். ஆகவே அப்படி இருக்கக் கூடாது’ என்கிறார்.

    அதனால்தான் செபதேயுவின் மனைவி, இப்படி இயேசு பிரானைப் பார்த்துக் கேட்கிறார். இவ்வுலகில் எல்லோருமே, அடக்கி ஆள வேண்டும் என்றல்லவா எண்ணுகிறார்கள். இவரும் அப்படி இருந்து விடுவாரோ என்ற எண்ணத்தில் இப்படிக் கேட்டிருக்கலாம். அதற்கு அவர், அவர்களை இப்படிக் கடிந்து கொள்கிறார்.

    அதோடு மட்டும் நின்று விடாமல், செபதேயுவின் மக்களைப் பார்த்து, இப்படி ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். இக்கேள்வி அவர்களுக்கு மட்டும் உரியதன்று. எல்லோருக்கும் உரியது என்று எண்ண வேண்டும்.

    ‘என்னோடு துன்பத்தை நீங்களும் அனுபவிக்க முடியுமா?’ என்பதே அக்கேள்வி. அவர்கள் தரும் பதில் ‘நிச்சயம் முடியும்’ என்பதுதான். அவர்கள் கூறும் பதிலில் உண்மை இருந்தாலும், அதற்கு அவர் கூறும் வார்த்தை என்ன என்பதை சற்று உணர்ந்து கொள்வோம்.

    என்னுடைய துன்பத்தில் நீங்கள் இணைந்து கொண்டாலும், என் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்வதற்கு அருள வேண்டியவர் நானல்ல. என் தந்தையே என்று கூறுகிறார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    தந்தையின் சித்தம் எப்படி உள்ளதோ? அப்படித்தான் எதுவும் நடக்கும் என்பதே, இந்நற்செய்தியின் உண்மைப் பொருள் ஆகிறது.

    இந்த நற்செய்தியில் தொண்டு செய்வது எவ்வளவு சிறந்தது என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறார். தொண்டு ஒன்றுதான் மனித சமூகத்தை மலர்த்தும் என்பதற்கு இந்த நற்செய்தியை விட வேறு ஒரு சான்று தேவை இல்லை.

    வரலாற்றுச் செய்தி ஒன்றைச் சொல்கிறார்கள். செபதேயு யார்? அவருடைய மக்களில் ஒருவர் யார்? என்ற செய்தியையும் இந்நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது.

    முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது, இயேசு பிரானோடு கூட இருந்தவர்தான் புனித யாக்கோபு என்பவர்.

    பிற்காலத்தில் இப்படி இருக்கப் போகிறவர் என்று அறிந்ததினாலோ என்னவோ தொடக்கத்தில் இருவரையும் அழைத்து வந்து, செபதேயுவின் மனைவி இப்படி ஒரு வேண்டுகோளை வைக் கிறார்.

    அதற்கு இயேசு பிரான், ‘நான் குடிக்கப் போகும் துன்பமான கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?’ என்ற வினாவைத் தொடுக் கிறார்.

    அதற்கு அவர்கள், ‘முடியும்’ என்கிறார்கள். அந்த உறுதிப்பாடுதான், யாக்கோபை, புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்போம். இந்நற்செய்தியின் ஆழத்தை உணர்வோம். செயல்படுவோம்.

    - செம்பை சேவியர்.
    புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 166-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 166-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை அருட்தந்தை குழந்தைசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலையில் சிறப்பு மறையுரைகளும் இடம்பெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு தேர்பவனி வருகிற 15-ந்தேதி மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. அன்றையதினம் காலையில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைபேற்றப்படுகிறது. வருகிற 16-ந்தேதி காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடந்தது. இதையடுத்து மதியம் 12 மணி அளவில் நாட்டாண்மை வில்லியம் ஜெயபால் தலைமையில் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில், பங்குத்தந்தை ஜான்போஸ்கோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) புனிதர்களின் மின்தேர் பவனி நடைபெறும். இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெற உள்ளது.
    தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அன்று மாலையில் வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில், நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்கினார். தொடர்ந்து மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில், சாகச நிகழ்ச்சி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளித்தார்.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் பரிசுத்த திருகுடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் பரிசுத்த திருகுடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 5 மணி, 6.45 மணி, 8.30 மணிக்கு காவல்கிணறு பங்குதந்தை மிக்கேல் மகிழன் தலைமையில் திருமுழுக்கு திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு, வள்ளியூர் பல்நோக்கு சேவா சங்க இயக்குனர் அன்புச்செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அருட்தந்தை ஜூலியன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.

    முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாவசங்கீர்த்தனமும், தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    1-ம் திருவிழா தீபஒளி தினமாகவும், 2-ம் திருவிழா புனித டோன்போஸ்கோ தினமாகவும், 3-ம் திருவிழா மல்லிகா அரிசி ஆலை தினமாகவும், 4-ம் திருவிழா மஸ்கட் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 5-ம் திருவிழா சவுதி வாழ் வடவை மக்கள் தினமாகவும், 6-ம் திருவிழா துபாய் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 7-ம் திருவிழா வடவை தினமாகவும், 8-ம் திருவிழா மும்பை வடவை மக்கள் தினமாகவும், 10-ம் திருவிழா சென்னை வாழ் வடவை மக்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ததேயூஸ் ராஜன் தலைமையில் பங்கு நிதி குழுவினர், அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகிறார்கள்.
    மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன.
    இந்த உலகத்தை படைத்தது இறைவனுடைய வார்த்தைகளே. படைப்பைக் குறித்து வேதத்தில் படிக்கிறபோது ‘‘கடவுள், ‘ஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று’’ என்கிறது தொடக்க நூல் 1:3.

    ஒன்றுமில்லாமையில் இருந்தும் ஒழுங்கின்மையில் இருந்தும் நிறைவைக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் கடவுளுடைய வார்த்தைகளுக்கு உண்டு. அண்ட சராசரங்கள் அனைத்தின் மீதும் கடவுளுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் உண்டு.

    புதிதாய் பிறத்தல்

    மனிதன் இவ்வுலகில் தன் விருப்பம் போல வாழ்ந்து இதை பாவம் நிறைந்த உலகாக மாற்றி விட்டான். மனிதன் தூய வாழ்வு வாழ அவன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. அது, தாயின் வயிற்றில் இரண்டாம் முறையாக நுழைந்து பிறப்பதல்ல. வார்த்தையால் பிறப்பது.

    ‘நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்’ (1 பேதுரு 1:23) என்கிறது இறைவார்த்தை.

    கடவுளுக்கு விருப்பமான வாழ்வு வாழ, கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகிற வாழ்வு வாழ, மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. கடவுளுடைய வார்த்தைக்கு இந்த ஆற்றல் இருக்கிறது.

    யோவான் எழுதிய நற்செய்தியில் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கோதேமு எனும் பரிசேய உயர் அதிகாரி ஆண்டவரை சந்திக்க இரவில் வருகிறான். மறுபடியும் பிறக்கும் அனுபவம் பற்றி ஆண்டவர் அவனுக்குக் கற்றுத் தருகிறார். யோவான் இவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘இரவில் ஆண்டவரிடம் வந்த நிக்கோதேமு’ என்றே குறிப்பிடுகிறார்.

    அவன் பரிசேயனாக இருந்தும் இருளுக்குள் தான் வாழ்ந்திருந்தான். மெய்யான ஒளியாகிய ஆண்டவரிடம் வந்து மறுபடியும் பிறக்கிற வாழ்வின் அனுபவத்தை கற்றுக் கொண்டான்.

    கடவுளுடைய வார்த்தை மனிதனை மறுபடியும் பிறக்கிற வாழ்வுக்கு ஆற்றல் அளிக்கிறது.

    கடவுளில் வளர்தல்

    மறுபடியும் பிறப்பது மட்டுமல்ல, அந்த வாழ்வை தூய வாழ்வாக வாழவும், கடவுளுக்குள் வளருகிற வாழ்வாக வாழவும், துணைபுரிவது கடவுளுடைய வார்த்தைகளே.

    ‘புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்’ என்கிறது 1 பேதுரு 2:2,3 வசனங்கள்.

    ஒரு நல்ல விதை செழிப்பான செடியாக வளருவதற்கு தடையாக அமைந்து விடுகின்ற முட்செடிகள், களைகள் போல மனித வாழ்விலும் துர்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் போன்ற வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு தூய வாழ்வில் வளர கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன.  

    படுக்கைக்குச் செல்லும் முன் செபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். ஒரு நாள் அருகில் இருந்த தன் தாயிடம், ‘அம்மா, இன்று நான் தனியே செபிக்க வேண்டும், நீங்கள் சென்று விடுங்கள்’ என்றான். அம்மா அவனிடம் காரணம் கேட்டாள். அவனோ, ‘இன்று நான் அதிக தவறுகள் செய்    திருக்கிறேன். எனவே செபத்தில் அவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும், நீங்கள் இருந்தால் கேட்பீர்கள், கேட்டால் திட்டுவீர்கள். கடவுளிடம் மட்டுமே சொன்னால் அவர் மன்னித்து, மறந்து விடுவார்’ என்றான்.

    இந்த சிறுவன் ‘ஆண்டவரை அறிந்தவன் மட்டுமல்ல, ஆண்டவருக்குள் வளரத்தொடங்கி விட்டான்’ என்று பொருள்.

    எனவே கடவுளுடைய வார்த்தைக்கு மறுபடியும் பிறப்பிக்கிற ஆற்றல் மட்டுமல்ல, அவருக்குள் வளருவதற்குத் தேவையான ஆற்றலும் உள்ளது.

    தூய வாழ்வு வாழ்தல்

    மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன.

    கடவுளுக்குள் வளர்ந்து வருகிற போது இவ்வுலகம், இவ்வுலகின் தன்மைகள் நம்முடைய வாழ்வை திசை திருப்புகின்றன. ஆனால் கடவுளுடைய வார்த்தைகள், போதனைகள் நம்மை சுத்தமாக்குகின்றன.

    ‘நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்’ என்கிறது யோவான் 15:3.

    ஆண்டவரிடம், ‘உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்’ என்று கேட்டவருக்கு ‘எனக்குச் சித்தமுண்டு நீ சுத்தமாகு’ என பதிலளித்தார் இயேசு. ஆண்டவரின் வார்த்தை நம்மை சுத்தமாக்குகிற ஆற்றல் உள்ளது.

    கடவுளுடைய வார்த்தைகள், ஒருவரை மறுபடியும் பிறக்கச் செய்கிற ஆற்றல் உள்ளது. மறுபடியும் பிறந்தவரை ஆண்டவருக்குள் வளரச் செய்கிற ஆற்றல் உள்ளது.

    அதை விட மேலாக சுத்தமான வாழ்க்கை வாழ காத்துக் கொள்ளுகிற ஆற்றல் உள்ளது கடவுளுடைய வார்த்தை.

    வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை காலை 6.30 மணிக்கு ஆலய அடித்தள விரிவாக்கம் மந்திரிப்பு, திருப்பலி மற்றும் ஆலய முன்வாயில் நிலை இடுதல் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கு ஆலய பங்குத்தந்தை கே.மரியதாஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு பங்கு தந்தைக்கு ஊர் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 6.45 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது.

    இதற்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் அடிகளார் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணியாளர்கள் ராயன், இயேசுதாசன் தாமஸ், சகாய ஆனந்த், ஜோசப் காலின்ஸ் மற்றும் அருட்பணியாளர்கள் பேட்ரிக்சேவியர், கபிரியேல் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8.30 மணிக்கு ஆண்டு விழா, பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை திருப்பலி, மாலை செபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 11-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை, திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் அருளுரை ஆற்றுகிறார். 12-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, அருளுரை ஆற்றுகிறார்.

    12-ந்தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ரசல்ராஜ் அருளுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, அருளுரை ஆற்றுகிறார். பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு கொடி இறக்கமும், 8 மணிக்கு ஆண்டு விழா பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், ஒரு கணம் சிந்திப்போம். “உவமைகளாலன்றி வேறு வழியாக, அவர் பேசியது கிடையாது” என்ற செய்தியும் ஓர் இடத்தில், நற்செய்தியில் இடம் பெறுகிறது.
    மதேயு என்ற நற்செய்தியாளர் குறிப்பிடும் கருத்தைக் கவனிப்போம்.

    அக்காலத்தில் இயேசுவின் சீடர்கள் அவருடைய அருகிலே வந்தனர். அவர்கள் இயேசு பெருமானைப் பார்த்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வழியாகப் பேசுகின்றீர்” என்று கேட்டனர்.

    அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் மொழியாக, அவர் இப்படிக் கூறுகிறார்:

    “விண்ணரசின் மறைபொருளை அறிவதற்கு, உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. உள்ளவர் களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்”.

    “மாறாக, இல்லாதவர்களிடமிருந்து, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்பட்டு விடும். அவர்கள் அதைக்கண்டும், காண்பது கிடையாது. கேட்டும், கேட்பது கிடையாது. புரிந்து கொள்வதும் கிடையாது. இப்படி இருப்பதால்தான், நான் அவர்களோடு உவமைகள் வழியாகப் பேசுகிறேன்”.

    “எசாயா, முன்பு சொன்ன இறைவாக்கு, அவர்களிடம் இப்படியாக நிறை வேறுகிறது”.

    “நீங்கள் உங்கள் காதுகள் வழியாகத் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஆனால் கருத்திலே கொள்வது கிடையாது. உங்கள் கண்களால், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இருந்தாலும் உணர்வது கிடையாது. இந்த மக்களின் நெஞ்சமானது, மிகவும் கொழுத்துப் போய் விட்டது. அவர்களுடைய காதுகளும் மந்தமாக ஆகி விட்டது. இவர்கள், தம்முடைய கண்களை மூடிக்கொண்டு விட்டார்கள்”.

    “எனவே, கண்களால் காணாமலும், காதுகளால் கேட்காமலும், தம்முடைய உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணம் ஆக்காமல் இருக்கிறேன்”.

    “உங்களுடைய கண்கள் பேறு பெற்றவைகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அவைகள் காணுகின்றன. உங்கள் காதுகளும் பேறு பெற்றவைகள். ஏனென்றால் அவைகள் கேட்கின்றன”.

    “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். பல இறைவாக்கினரும், நேர்மையாளரும், நீங்கள் காண்பவற்றைக் காண்பதற்கு ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என்று கூறினார்.

    இந்த நற்செய்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்போம்.

    இயேசு பிரான், இவ்வுலகில் வாழ்ந்த குறைந்த காலத்தில், மக்களுக்குப் புரியும்படி எளிமையாகப் பேசினார். அவ்விதம் பேசும்பொழுது, அவர்கள் உணரக்கூடிய வகையில், உவமைகளைப் பயன்படுத்தினார்.

    இதைப் புரிந்து கொள்ள முடியாத இயேசு பெருமானின் சீடர்கள், இப்படி ஒரு கேள்வியை அவரிடமே கேட்கிறார்கள். உண்மைதான். இவர்கள் இவரோடே இருப்பதாலும், அவருடைய செயல்களையும், கருத்துகளையும் காண்ப தாலும், கேட்பதாலும் இப்படி ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்கள்.

    அவர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் விடை பகர்கிறார். எப்படி? சிந்தித்துப் பார்த்தால், இயேசு பெருமானின் விடையின் ஆழம் கண்டிப்பாய் நமக்குப் புரியும். ஒருபுறம் சீடர்களையும், மறுபுறம் மக்களையும் பற்றிப் பேசுகிறார்.

    சீடர்களைப் பார்த்து அவர் கூறுவதைக் கவனியுங்கள். விண்ணரசைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. அவர் களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்கிறார்.

    இச்செய்தியில் இருந்து, நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்போம். நீங்கள் எந்நேரமும் என் கூடவே இருப்பதாலும், என்னுடைய செய்திகளைச் செவிமடுப்பதாலும், உங்களுக்கு அந்த நல்வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

    அதே சமயத்தில் வேறொரு செய்தியையும் எடுத்துரைக்கிறார்.

    “நீங்கள் உங்களுடைய காதுகள் வழியாகத் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஆனால் கருத்திலே கொள்வது கிடையாது” என்கிறார்.

    “வெறுமனே கேட்டுவிட்டால் போதாது. அதை மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

    அடுத்தடுத்த வரிகளையும் எண்ணிப் பாருங்கள். “உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்”.

    உள்ளவர்கள் என்றால் பொருள் என்ன? நற்செய்தியை உண்மையில் ஏற்றுக் கொள்பவர்கள் என்பதே அதன் பொருளாகிறது. அவர்களுக்குக் கண்டிப்பாய் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்.

    இல்லாதவர்களிடம் இருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் இருந்து, உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதானே பொருளாகிறது.

    அவர்கள் கண்டும் உண்மையில் காண்பது கிடையாது. கேட்டும் கேட்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், புரிந்து கொள்வதும் கிடையாது. இப்படி இருப்பதால்தான் நான் அவர்களோடு, உவமைகள் வழியாகப் பேசு கிறேன் என்கிறார்.

    உவமைகள் மூலம் இயேசு பிரான் பேசும்போது அவர்களுக்குப் புரிகிறது. புரிவதால், அவர்கள் அதை உணர்கிறார்கள்; செயல்படுகிறார்கள். பல நேரங்களில் இம்மக்களின் நெஞ்சம் கொழுத்து விடுகிறது. அவர்களுடைய காதுகளும் மந்தமாகி விடுகிறது. தங்களுடைய கண்களை மூடிக் கொள்கிறார்கள். ஆகவே அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் என்கிறார்.

    இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், ஒரு கணம் சிந்திப்போம். “உவமைகளாலன்றி வேறு வழியாக, அவர் பேசியது கிடையாது” என்ற செய்தியும் ஓர் இடத்தில், நற்செய்தியில் இடம் பெறுகிறது.

    எந்த ஒரு கருத்தையும் எடுத்துரைக்கும் பொழுது, வெறுமனே சொல்வதை விட, உவமைகளைக் கூறி புரிய வைப்பதைத் தமிழ்ப் புலவர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வுலகில் மனிதனாகத் தோன்றிய இறை இயேசு, கடினமானவர்களிடையே, தன்னுடைய கருத்தை எடுத்துரைக்கும்பொழுது, சிறு சிறு சம்பவங்கள் வழியாகவும், உவமைகள் வழியாகவும், சாதாரண மக்கள் புரியும் வண்ணம், எளிமையாகப் பேசினார் என்பதுதான் வரலாறு.

    எளிமையில், தத்துவத்தை உள்ளடக்கிப் பேசும்பொழுது, அக்கருத்து நெஞ்சில் நிறுத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் நினைவில் வந்து மோதுகிறது. கருத்தில் பொதிந்து கிடக்கும் உண்மையை, ஒருநேரம் இல்லையென்றாலும், மறுநேரம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

    ஆகவே இயேசு பெருமானின் செய்திகளைச் செவி மடுப்போம். அச்செய்திகள் வழியாக நம்மை நாமே சீர்படுத்தி வாழ முற்படுவோம்.

    - செம்பை சேவியர்.
    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 132-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது.

    மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.

    8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலையில் வடக்கன்குளம் மறை வட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் நற்கருணை பவனியும், மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்குகிறார்.

    இரவு மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில் சாகச நிகழ்ச்சியும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனியும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. 5-ந்தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண்சன்ராஜ் உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
    ×