என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    விருந்துக்கு அழைத்த தந்தை விண்ணகத் தந்தைக்கு ஒப்பாகிறார். விருந்து இயேசுவின் மீட்பின் நற்செய்தி. அழைப்பு இஸ்ரவேல் மக்களுக்கு விடுக்கப்படுகிறது.
    விருந்துக்கு அழைத்த தந்தை விண்ணகத் தந்தைக்கு ஒப்பாகிறார். விருந்து இயேசுவின் மீட்பின் நற்செய்தி. அழைப்பு இஸ்ரவேல் மக்களுக்கு விடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்.

    அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய மகனுக்கு திருமணம். மிகப்பெரிய விருந்தை அவர் ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு ஏராளமானோரை அவர் அழைத்தார்.

    விழா நாள் வந்தது. அழைப்பு பெற்றவர்கள் யாரும் விருந்துக்கு வரவில்லை. உடனே அரசன் தனது பணியாளர்களை அனுப்பி, அவர்களை அழைத்து வரச் சொன்னான். அவர்கள் சென்றார்கள். அழைத்தார்கள். யாருமே வரவில்லை. அவர்கள் மன்னரிடம் திரும்பி வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.

    மன்னர் வேறு சில பணியாளர்களை அழைத்தார், ‘நீங்கள் செல்லுங்கள். காளைகளையும், கொழுத்த கன்று களையும் அடித்து விருந்து சமைத்திருக்கிறேன். விருந்து பிரமாதமாக இருக்கும் என சொல்லி மக்களை அழையுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்

    பணியாளர்கள் அழைக்கப்பட்டவர்களைச் சந்தித்து மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்தனர். அவர்களோ மறுமொழியாக, ‘நான் வயல் ஒன்றை வாங்கியிருக்கிறேன். இன்று உழவு நாள். நான் இல்லாவிட்டால் சரிவராது...’, ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்... நான் அதை உழவுக்கு பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’, ‘மன்னியுங்கள். கடைக்குப் போக வேண்டியிருக்கிறது என்னால் வர இயலாது’ என்று ஆளாளுக்குச் சாக்குப் போக்கு சொன்னதுடன் நிற்காமல், சிலர் வந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி கொன்றும் விட்டார்கள்.

    விஷயத்தைக் கேள்விப்பட்ட மன்னன் கடும் சினம் கொண்டான். தனது படையை அழைத்தான், ‘நீங்கள் போய் கொலையாளிகளைக் கொன்றொழியுங்கள்’ என்று கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே செய்தனர்.

    மன்னன் மீண்டும் வேறு சில பணியாளர்களை அழைத்தான். விருந்தை வீணாக்க அவர் விரும்பவில்லை.

    ‘விருந்து தயாராய் இருக்கிறது. அழைக்கப்பட்டவர்கள் தகுதி இழந்து விட்டனர். எனவே நீங்கள் போய் கண்ணில் காணும் எல்லோரையும் அழைத்து வாருங்கள்’ என்றார்.

    அவர்கள் போய், நல்லவர் தீயவர் எனும் பாரபட்சம் காட்டாமல், ஏழைகள், உடல் ஊனமுற்றவர்கள் என வேறுபாடு காட்டாமல் எல்லோரையும் அழைத்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடனும், ஆனந்தத்துடனும் விருந்துக்கு வந்து கலந்து கொண்டார்கள்.

    விருந்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் வாசலில் திருமண ஆடை வழங்கப்பட்டது. எல்லோரும் அதை வாங்கி உடுத்திக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் அதை வாங்க வில்லை. தனது ஆடை அதை விடச் சிறப்பாக இருப்பதாய் அவன் கருதினான். எனவே தனது ஆடையுடன் விழா அரங்கில் நுழைந்தான்.

    ஒருவழியாக பந்தி நிரம்பியது. அரசர் விழா நடந்த இடத்தில் பார்வையிட்டார். அவருடைய கண்களில் அந்த நபர் தென்பட்டார்.

    அவர் அவனை அழைத்தார், ‘தோழா.. திருமண ஆடையின்றி நீ எப்படி உள்ளே நுழைந்தாய்?’ என்று கேட்டார்.

    அவன் பதில் பேச முடியாமல் வெலவெலத்தான்.

    அரசர் பணியாளர்களை அழைத்தார், ‘இவனுடைய கையையும், காலையும் கட்டி புறம்பே உள்ள இருளில் எறியுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

    பணியாளர்கள் அப்படியே செய்தனர். விருந்துக்கு அழைக்கப்பட்டவன், இருளுக்குள் எறியப்பட்டான்.

    ‘இதுதான் விண்ணக விழாவிலும் நடக்கப் போகிறது. அழைக்கப்பட்ட இஸ்ரவேல் குல மக்கள் அழைப்பைப் புறக்கணிப்பார்கள். பிற இன மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணக விருந்தைச் சுவைப்பார்கள்’ என்று இயேசு சொன்னார்.

    விருந்துக்கு அழைத்த தந்தை விண்ணகத் தந்தைக்கு ஒப்பாகிறார். விருந்து இயேசுவின் மீட்பின் நற்செய்தி. அழைப்பு இஸ்ரவேல் மக்களுக்கு விடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்.

    கடவுளோ இறைவாக்கினர்களை அனுப்புகிறார். மக்களோ உலக செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விண்ணக அழைப்பை நிராகரிக்கின்றனர்.

    கடவுளின் தாகமும், அன்பும் தீரவில்லை. எனவே வேறு சில இறைவாக்கினர்களை அனுப்புகிறார். அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அது திருமுழுக்கு யோவானின் கொலை வரை தொடர்கிறது.

    எனவே அந்த மீட்பின் செய்தி இஸ்ரவேல் மக்களைத் தாண்டிய பிற இன மக்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த மக்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்கின்றனர். உலகெங்கும் நற்செய்தி பரவு கிறது.

    இறைவனின் மீட்பு, பாவத்தை மூடும் ஆடையாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவர் அந்த ஆடையை விட்டு விட்டு தனது ‘சுய முயற்சி, நல்ல செயல்கள்’ போன்றவற்றின் மூலம் விருந்தில் கலந்து கொள்ள முயல்கிறார்.

    கடவுளோ தனது சுய முயற்சியால் விண்ணகம் நுழைய விரும்பும் மனிதரை நரகத்தில் எறிகிறார். மீட்பு என்பது இறைவன் தரும் மீட்பின் ஆடையை அணிவதேயன்றி, நமது செயல்களின் ஆடையை அணிவதல்ல என்பதை விளக்குகிறார்.

    இந்த நிகழ்ச்சி சொல்லும் முக்கியமான செய்திகள் இரண்டு.

    ஒன்று, இறைவனின் அழைப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இரண்டு, நமது சுயத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல், இறைவன் இலவசமாய் அருளும் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
    சிலுவைப் பாதை என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும்.
    சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும். இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது.

    லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக பெரிய வெள்ளிக் கிழமையன்றும் கிறித்தவர்கள் சிலுவைப் பாதை கொண்டாடுகிறார்கள்.

    சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்

    1. இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
    2. இயேசுவின்மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்
    3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
    4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்
    5. சிரேன் ஊர் சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுகிறார்
    6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைக்கிறார்
    7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
    8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்
    9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
    10. இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
    11. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
    12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
    13. இயேசுவின் திருவுடலைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்
    14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

    மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.

    தூய ஆவி என்பது கிறித்துவத்தில் கடவுளின் ஆவி எனவும், கடவுளின் சாரம் எனவும் பொருள்படும். தம திரித்துவக் கொள்கையையுடைய கிறித்துவ உட்பிரிவிகளின் படி, ஒரே கடவுள் மூன்று ஆள்களாயிருக்கிறார். முதலாமவர் தந்தை. இரண்டாமவர் மகன் (இயேசு). மூன்றாமவர் தூய ஆவியார். இவர் பிதாவோடும் மகனோடும் ஒரே கடவுளாக இருப்பவர். இவர் உலகையும், திருச்சபையையும் இன்றும் புதுப்பித்துக்கொண்டு வருகிறார் என கிறித்துவர்களால் நம்பப்படுகிறது.
    ‘கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்’ இது உண்மைதான்.
    இயேசு பிரான் கூட்டத்தினரை அவ்விடத்தில் இருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடர்களையும் உடனே படகின் மீது ஏறி, தாம் அக்கரைக்குச் செல்வதற்கு முன், அவர்களைச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.

    மக்களை அனுப்பி விட்டு இறைவனிடம் வேண்டிக் கொள்வதற்காக ஒரு மலையின் மீது ஏறினார். பொழுதானது சாய்ந்த பிறகும், அங்கே அவர் தனியே இருந்தார்.

    படகானது அதற்குள் கரையில் இருந்து வெகுதூரம் சென்று விட்டது. எதிர்க்காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. ஆகவே அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டு இருந்தது.

    இரவு நேரம், நான்காம் காவல் வேளை. இயேசு பெருமான், அவர்களை நோக்கி கடல் தண்ணீர் மீது நடந்து வந்தார். அவர் கடல் மீது நடப்பதைக் கண்ட சீடர்கள் கலக்க முற்றனர். ‘ஐயோ! பேய்!’ என்று அச்சத்தினால் அலறினர்.

    பயப்படுவதைக் கண்ட இயேசு பிரான் அவர்களிடம் பேசினார். ‘துணிவோடு இருங்கள். நான்தான், பயப்படவேண்டாம்’ என்றார்.

    பேதுரு, அவருக்கு மறுமொழியாக, ‘ஆண்டவரே! நீர்தாம் என்றால், நானும் கடல் மீது உம்மிடம் நடந்து வர ஆணையிடும்’ என்றார்.

    அதற்கு அவர், ‘வா’ என்றார்.

    பேதுருவும் படகில் இருந்து இறங்கி, இயேசுவை நோக்கி கடல் தண்ணீர் மீது நடந்து சென்றார்.

    அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டதும் பயந்து போய், ‘ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தினார்.

    இயேசு பெருமான் உடனே தம் கையை நீட்டி, அவரைப் பிடித்துக் கொண்டு, ‘நம்பிக்கை குறைந்தவனே, ஏன் சந்தேகம் கொண்டாய்?’ என்று கேட்டார்.

    இயேசு பெருமான் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தவர்கள் இயேசுவைப் பணிந்து, ‘உண்மையாகவே நீர் இறைமகன்’ என்றனர்.

    அவர்கள் மறுகரைக்குச் சென்று, ‘கெனசரேத்’ என்ற பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த மக்கள், சுற்றுப்புறம் எங்கும் ஆளை அனுப்பி, எல்லா நோயாளிகளையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேல் உடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர். தொட்டவர் அனைவரும் நலம் பெற்றனர்.

    இந்நற்செய்தியைப் படிப்போர் உணர்ந்து கொள்ள வேண்டியது, விசுவாசமும், நம்பிக்கையும் ஆகும். இயேசு பெருமான், இவ்வுலகில் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபோது, விசுவாசத்தையும், நம்பிக்கையையும் மிகவும் ஆழமாகப் போதித்தார்.

    அப்பொழுது நடந்த ஒரு நிகழ்வைக் காட்டுகிறார். ‘கடலின் மீது அவர் நடந்து வருவதைக் கண்டதும் ‘பேய்’ என அலறினர்.

    ஆம்! கடலின் மீது ஒருவர் நடப்பது என்பது இயலாத செயல்தான். என்றாலும் இயேசு பெருமான், அதற்கு அப்பாற்பட்டவர். காரணம் அவர் இறை மகன். அவரால் எதுவும் முடியும். இதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

    ‘நான் தான்’ என்று கூறியதும், தெளிவு பெற்றார்கள். தெளிவு பெற்றதோடு மட்டும் அல்லாமல், தானும் நடந்து வர வேண்டும் என்று, ‘பேதுரு’ என்ற சீடர் விரும்புகிறார். அவரைப் பார்த்து இயேசு பெருமான் மிக எளிமையாக ‘வா’ என்றார்.

    படகில் இருந்து இறங்கிய பேதுரு என்ற சீடர், கடலின் மீது நடக்கத் தொடங்கினார். அவருடைய விசுவாசம் உண்மையானதா? என்பதை அறிய, பலத்த காற்று வீசிய அவ்வேளையில், ‘ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தினார். கடலில் நடக்க வைத்த இயேசு பெருமான், காற்றானது சுழன்று அடிக்கும்பொழுது காப்பாற்ற மாட்டாரா?

    ‘காப்பாற்றும்’ என்று உரக்கக் கத்தக் காரணம் என்ன? அதுதான் விசுவாசக் குறைவு.

    ‘நம்பிக்கை குறைந்தவனே! என்ற ஒரு வார்த்தையை அங்கு கூறுகிறார். இந்நற்செய்தியைப் படிப்பவர்கள், விசுவாசம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர வேண்டும்.

    முதலில் நம்பிக்கையோடு செயலில் இறங்கிய பேதுரு என்ற சீடர், தொடர்ந்து அந்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இயேசு பெருமானின் செயலை கண் முன்னே கண்டும், தானே அதை உணர்ந்து செயல்பட்டும், அச்சமும், நம்பிக்கையின்மையும் அவருக்கு ஏற்பட்டதை இந்த நற்செய்தி வாயிலாக அறிகிறோம் அல்லவா?

    நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை பல நிலைகளில் இவ்வுலகில் நாம் உணர்கிறோம். என்றாலும் மனிதன் தன் பலகீனத்தால், நம்பிக்கையை இழந்து விடுகிறான்.

    கிறிஸ்து பெருமானைப் பின்பற்றக் கூடியவர்கள், நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவர்களாக வாழ்வதைத்தான், இயேசு பெருமான் உணர்த்துகிறார்.

    ‘கடுகளவு’ விசுவாசம் ஒருவருக்கு இருக்குமேயானால், இந்த மலையை ‘இடம் பெயர்ந்து செல்’ என்றால் சென்று விடும் என்று ஓரிடத்தில் இயேசு பெருமான் கூறியதையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    காற்றும், கடலும் இவர் சொல்லுக்கு அடங்குகிறதே என்பதைப் பார்த்த பிறகுதான், ‘உண்மையான இறை மகன் நீர் தான்’ என்கின்றனர். இப்படிப்பட்ட விசுவாசத்தை விட, வேறோர் இடத்தில் இப்படிக் கூறுகிறார்: ‘கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்’. இது உண்மைதான்.

    இயேசு பெருமான் உயிர்த்தெழுந்ததை மற்ற சீடர் அறிந்திருந்தும், புனித தோமையார் நேரடியாகக் காணவில்லை. ஆகவே அவர் ‘நான் என் கண்களால் கண்டால்தான், இயேசு பெருமான் உயிர்த்தார் என்பதை நம்புவேன்’ என்றார்.

    அப்போது, இயேசு பெருமான் அவர் கண் முன் தோன்றி, ‘தோமையாரே! என் காயங்களில் உன் விரலை இடும்’ என்று சொன்னதும், ‘என் ஆண்டவரே! என் தேவனே! என்று கிழே விழுந்து வணங்கியதாக நற்செய்தியில் ஒரு வரி வருகிறது.

    அப்பொழுது தான், ‘கண்டு விசுவாசம் கொள்பவனை விட, காணாமல் விசுவாசிக்கக் கூடியவன் பாக்கியவான்’ என்ற வார்த்தையைக் கூறுகிறார்.

    இந்நற்செய்தியின் தெளிவை உணர்ந்து கொள்வதற்கு, வேறோர் செய்தியையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    இயேசு பெருமானின் புதுமைகளைக் கண்ட மக்கள், மேலும் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

    ஆகவே சுற்றுப்புறம் எங்கும் ஆளை அனுப்புகின்றனர். எல்லா நோயாளிகளையும் அவரிடம் கொண்டு வருகின்றனர். அவரை முழுவதும் தொட முடியாவிட்டாலும், அவரது ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு, அவரிடம் கேட்டுக் கொள்கின்றனர். ஆடையின் ஓரத்தைத் தொட்ட அனைவரும் நலம் பெறுகின்றனர் என்பதையும் காண்கிறோம்.

    இயேசு பெருமானின் உன்னதத்தை உணர்ந்து, செயலூக்கம் பெறுவோம்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கொடி ஊர்வலம் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி விழா முன் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    கோவையை அடுத்த விசுவாசபுரம் புனித மேக்சிமில்லியன் கிறிஸ்தவ ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பே ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியாக தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்றுக்காலையில் சிறப்பு திருப்பலி, புது நன்மை வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    அதன்பின்னர் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை ஏற்று திருப்பலி, நற்கருணை வழங்கினார். ஈரோடு சீமா சமூக சேவை இயக்குனர் அருண் ஞானபிரகாசம் மறையுரை வழங்கினார்.மறை மாவட்ட பொருளாளர் சேவியர் ஜான் குழந்தை, நல்லாயன் குருமடம் பேராசிரியர் அந்தோணி ராஜ், மதுரை மறை மாவட்ட அப்போலின் கிளாரட் ராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.


    புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பே ஆலய தேர்பவனியில் அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் நடுவே பவனி வருவதை படத்தில் காணலாம்.

    மாலையில், புனித மேக்சிமில்லியன் மரிய கோல்பேபின் தேர் பவனி நடந்தது. தேருக்கு முன்னால் பெரிய தேர்களில் இருதய ஆண்டவர், அந்தோணியார் சொரூபங்கள் கொண்டு வரப்பட்டன. மிக்கேல் சம்மனசு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சொரூபங்களை சிறிய தேர்களில் பெண்கள் சுமந்து வந்தனர். தேர் வந்த வீதிகளில் பக்தர்கள் உப்பை வாரி இறைத்து நேர்ச்சை செலுத்தினார்கள். இரவு 9 மணியளவில் தேர் ஆலயத்தை அடைந்தது. அங்கு நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. முடிவில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குகுரு பங்கிராஸ் ஜோசப் மற்றும் பங்கு மக்கள், அந்தியங்கள் இணைந்து செய்து இருந்தனர்.

    திருச்சி மாவட்டம் புத்தூர் பங்கை சேர்ந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பாத்திமா காட்சிகளின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று மாலை பெருவிழா திருப்பலி மாலை 6-30மணிக்கு நடக்கிறது.
    திருச்சி மாவட்டம் புத்தூர் பங்கை சேர்ந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பாத்திமா காட்சிகளின் நூற்றாண்டு விழா, நற்கருணை விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி இன்று மாலை பெருவிழா திருப்பலி மாலை 6-30மணிக்கு நடக்கிறது. மேலும் இரவு தேர் பவனி நடக்கிறது. அதனை புனித ஜேம்ஸ் பள்ளி முதல்வர் தாமஸ் அர்ச்சிப்பு செய்து வைக்கிறார்.

    புனித பாத்திமா அன்னை ஆலயம், ஆபிசர்ஸ் காலனி, மதுரம் காலனி, குரு மெடிக்கல்ஸ், மாருதி மருத்து வமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவ மனை, பாத்திமா பள்ளி, புத்தூர் நால்ரோடு சந்திப்பு வழியாக ஆலயம் சென்ற டைகிறது.நாளை 20-ந்தேதி நற்கருணை பெருவிழா, திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது..இரவு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது.

    கேசவன்புத்தன்துறை தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கேசவன் புத்தன்துறை தூய மாசற்ற இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு சிறப்பு கொடி அர்ச்சிப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆலய அர்ச்சிப்பு, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமைதாங்கி மறையுரையாற்றுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) மாலை ஆயர் இல்ல அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் இனயம்புத்தன்துறை அருட்பணியாளர் பிரைட் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு மறையுரை நடைபெறுகிறது.

    வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் புனித ஜோண்ஸ் கல்லூரி அருட்பணியாளர் ஜான்போஸ்கோ தலைமையில், அருட்பணியாளர்கள் ஆஷ்லி, இஞ்ஞாசி, சைமன் ஆகியோர் மறையுரையாற்றுகிறார்கள்.

    27-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. மண்டல குருக்கள் ஜெபிக்கின்றனர். அதைத்தொடர்ந்து தங்க தேர் பவனி நடைபெறுகிறது.

    28-ந்தேதி காலையில் சிறப்பு திருப்பலியில் ஆயர் இல்ல அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில், காரவிளை அருட்பணியாளர் ஆன்றோ மறையுரையாற்றுகிறார். நிகழ்ச்சியை பங்கு மக்கள், கடல் தொழில் செய்வோர் சிறப்பிக்கின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாம் எப். மேத்யூ, பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்துவருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித விண்ணரசி மாதா ஆலய விழாவில் சிகர நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நடந்தது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித விண்ணரசி மாதா ஆலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்தாண்டு தேர்பவனி பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.

    இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் விண்ணரசி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர், தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து, விழா கொடி இறக்கப்பட்டது.
    பாளையங்கோட்டை சேவியர் காலனியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் லியோ ஜெரால்டு தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனையும் அதனை தொடர்ந்து அந்தோணியார் சப்பர பவனி நடந்தது.
    பாளையங்கோட்டை சேவியர் காலனியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் லியோ ஜெரால்டு தலைமையில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து அந்தோணியார் சப்பர பவனி நடந்தது. அந்த பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் சப்பரம் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை அந்தேணி சேவியர் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கொடைக்கானல் நகரில் தூய சலேத் அன்னை ஆலய பெருவிழாயொட்டி நேற்று சிறப்பு திருப்பலியும், தேசிய கொடியேற்றமும் நடைபெற்றது.
    கொடைக்கானல் நகரில் தூய சலேத் அன்னை ஆலய பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் பெருவிழா திருப்பலியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி வழங்கினார்.

     இதில் வட்டார அதிபர் ஜெரோம் ஏரோனி மூஸ், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், கோவிந்தன், முகமதுஇபுராகிம், எட்வர்டு, உதவி பங்குத்தந்தையர்கள் சாமுவேல், பிரவீன் உட்பட பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதனைதொடர்ந்து கொட்டும் மழையில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி, ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை அடைந்தது. இதனையொட்டி நேற்று காலை சிறப்பு திருப்பலியும், தேசிய கொடியேற்றமும் நடைபெற்றது. முதல் நற்கருணைப் பெருவிழாவினை இஞ்ஞாசி அற்புதராஜ் நிகழ்த்தினார்.

    அதனை தொடர்ந்து மாலையில் பகல் சப்பர பவனி திருஇருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை ஆலயத்தினை அடைந்தது. பின்னர் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் பங்கு தந்தையர்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    தூய சலேத் அன்னை ஆலய பெருவிழாவின் முக்கிய நாளான இன்று திருப்பலி மற்றும் மறை உரையினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி வழங்குகிறார்.
    கொடைக்கானலில் புகழ் பெற்ற தூய சலேத் அன்னை ஆலயம் உள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தின் 151-வது ஆண்டு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நாளான இன்று (திங்கட்கிழமை) 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி மற்றும் மறை உரையினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி வழங்குகிறார். அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு மின் அலங்கார தேர் பவனி தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை அடைகிறது.

    விழாவின் இறுதி நாளான 15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு மற்றும் விடுதலைப் பெருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருப்பலியும் தேசிய கொடியேற்றமும் நடைபெறுகிறது. இதனை வட்டார அதிபர் பங்குத்தந்தை ஜெரோம் ஏரோனி மூஸ் நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து சப்பர பவனி, சிறப்பு திருப்பலிகள் நடைபெற்ற பின்னர் நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவினையொட்டி மதுரை, வத்தலக்குண்டு, திண்டுக்கல், தேனி, பழனி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    கன்னியாகுமரி வாவத்துறையில் தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 20-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி வாவத்துறையில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 20-ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்ற விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை பங்கேற்று திருக்கொடியை ஏற்றி மறையுரையாற்றினார். விழாவில் பங்குதந்தை ஜாண்ஜோர் கென்சன் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிறைவு திருவிழாவன்று காலையில் ஆடம்பர மாலை ஆராதனை, திருவிழா திருப்பலி, சப்பர பவனி ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    ×