என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.
    ஒருவர் திராட்சைத் தோட்டம் ஒன்றைப் போட்டார். சுற்றிலும் வேலி அடைத்தார். ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு, தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டார். பருவ காலம் வந்தது. தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு, ஒரு பணியாளரை அங்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து, வெறுங்கையாய் அனுப்பினார்கள்.

    மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அனுப்பினார். அவரையும் அடித்து அவமதித்தார்கள். மேலும் ஒருவரை அனுப்பினார். அவரைக் கொலை செய்தார்கள். பலரை மீண்டும் அனுப்பினார். சிலரை நையப் புடைத்தார்கள். சிலரைக் கொன்று போட்டார்கள்.

    எஞ்சி இருந்தவர் ஒருவர் மட்டுமே. அவர்தான் அவருடைய அன்பு மகன். தன் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று எண்ணி அவரை அனுப்பினார்.

    ‘இவன்தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்று போடுவோம். கொன்று விட்டால் சொத்து நமக்கு உரியதாக ஆகி விடும்’ என்று சொல்லி, அவரைக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்து விட்டார்கள்.

    திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, அத்தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆளிடம் ஒப்படைப்பார்.

    அவர் மேலும், ‘கட்டுவோர் புறக் கணித்த கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் ஏற்பட்டுள்ள இது, நம் கண்களுக்கு வியப்பாயிற்று என்னும் மறை நூல் வாக்கை வாசித்தது இல்லையா?’ என்று கேட்டார்.

    தங்களைக் குறித்தே, அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மேலும், அவரைப் பிடிக்க வழியையும் தேடினர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததைக் கண்டு, பயந்து போய், அவ்விடம் விட்டு அகன்றார்கள்.

    இந்த உவமைகளைக் கவனமாகக் கவனியுங்கள்.

    திராட்சைத் தோட்டம் என்பது ‘இஸ்ரவேல்’ மக்களைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் ஆவார். தோட்டத் தொழிலாளர்கள் என்போர், யூதத் தலைவர்கள் ஆவார்கள். பணியாளர் என்போர், பழைய ஏற்பாட்டு இறைவாக்கினரைக் குறிக்கிறது. தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, ‘இயேசு பிரான்’ குறிக்கப் பெறுகிறார். இவர் யூதரால் கொல்லப்படப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.

    இறுதியாக இப்பகுதியில், ஒரு கருத்தை இயற்கையாகப் பதிவு செய்வதைக் காணுங்கள்.

    ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே, கட்டிடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று’.

    கட்டிடம் கட்டுபவர்களை, அவர்கள் கட்டம் கட்டும்போது உற்றுக் கவனியுங்கள். கட்டம் கட்டிக் கொண்டு இருப்பார்கள். சில கற்களை ஒதுக்கிப் போடுவார்கள். மூலையில் ஒரு கல் வைக்க வேண்டும் என்று தேடும்பொழுது, முழுக்கல் பயன் படாது. ஒதுக்கிப் போட்ட கற்களில், தேவையான கல்லைத் தேடிப் பிடித்து வைப்பார்கள்.

    நற்செய்தியைப் படிப்போர், இயேசு பிரானின் உவமைகளையும், அவர் கூறும் கருத்துகளையும், ஆழமாகப் படித்து சிந்திக்க வேண்டும்.

    இயேசு பிரானின் போதனைகள் எளிமை உடையன. எண்ணற்றோரைச் சிந்திக்கத் தூண்டுவன. நற்செய்தியாளர்கள் இவற்றையெல்லம் திரட்டி, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் நெறியாகத் தந்துள்ளனர்.

    இந்நிகழ்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், இன்றும், என்றும் மனித சமூகத்தோடு தொடர்புடையது. சிறுசிறு கதைகளைச் சொல்லி, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, நல் வழியில் கூட்டிச் செல்வது போல, நல்ல உவமைகளைச் சொல்லி, நம்மை இறைவனோடு இணைக்கப் பாடுபட்டவர், இயேசு பிரான். அவர் உவமைகள் வழியாகப் பேசினார். மக்கள் மொழியில் போதித்தார். தானும் அவ்வாறே நடந்து காட்டி ஒளிவிளக்காகவும், கை காட்டியாகவும் திகழ்ந்தார். முக்காலமும் ஏற்றுக் கொள்ளும் உவமைகளால், இயேசு பிரானின் போதனை ஈடும், இணையற்றதுமாக இருக்கிறது.

    இயேசு பிரானின் சிந்தனைகள் அனைத்து மக்களையும் சிந்திக்க வைக்கிறது. திராட்சைத் தோட்டம் போட்டவரின் நிலையை விளக்குவது ஒரு மேலோட்டமாகத் தெரிகிறது என்று எண்ணக் கூடாது.

    திராட்சைத் தோட்டம் என்பது, இறைவனால் மிகவும் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது என்ற கருத்து மிகவும் ஆழமானது. தோட்டத்தின் உரிமையாளர் யார் என்பதையும், தோட்டத் தொழிலாளர் யார் என்பதையும், இக்கருத்துக்குள் அடக்குகிறார். பணியாளர் என்பவர்கள் பழைய ஏற்பாட்டின் இறை வாக்கினர் என்கிறார்.

    புதிய ஏற்பாடு என்பது, இயேசுவின் பிறப்புக்கு பிறகு வரும் செய்தியாகிறது. தோட்டத்தின் உரிமையாளர் இறைவன் என்றும், இறைவனின் மகனாக அவதரித்த இயேசு பிரான், தோட்டத்தின் உரிமையாளர் மகனாக, இங்கே சித்தரிக்கப்படுகிறார். இவர் யூதரால் கொல்லப்பட போகிறார் என்பதால், அந்த யூதர்கள்தான், தோட்டத் தொழிலாளர்கள் என்று குறிக்கப் பெறுகிறார். இச்செய்தியை உவமை வாயிலாக எடுத்துரைக்கிறார், இயேசு பிரான்.

    இவ்வுலகில், இச்சமுதாயம் சிலரைப் பல நேரங்களில் புறக் கணித்து விடுவதை, நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் களைப் புறக்கணிக்கும்பொழுது, அவர்கள்தேவைப்படுவார்கள் என்பதை நாம் உணர்வது கிடையாது.

    ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழமொழியை, இவ்விடத்தில் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். அதற்காகத்தான், கட்டிடம் கட்டுவோர் என்ன செய்கிறார்கள் என்பதை, எல்லோரும் உணரும் வண்ணம் எடுத்துரைக்கிறார். ஒருவரை இழிவாக எண்ணக் கூடாது. எவரும் எந்த நேரத்திலும் பயன் படலாம் என்பதை இச்சமுதாயத்தில் உள்ளோர் உணர வேண்டும். கட்டிடம் கட்டுவோரை இவ்விடத்தில் பொருத்தமாகக் கூறி, அங்கே நிகழும் செயல்பாட்டின் வழியாக, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

    மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.
    ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரித்து, நீதியாய் நியாயம் தீர்க்கின்ற, ராஜாவின் சிங்காசனம் என்றும் பூமியில் நிலைத்து இருக்கச் செய்கிறார் ஆமென்.
    ‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக் கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்’ (நீதி.19:17).

    வானத்தையும் பூமியையும், சகல உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கர்த்தர் யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் ஏழைக்குக் கொடுக்கும் பொருளைக் கடனாகக் கொண்டு நமக்கு இரு மடங்கு திருப்பித் தருவார். ஏழையின் கூக்குரலுக்கு நாம் செவியை அடைத்துக் கொண்டால், நாம் சத்தமிட்டுக் கூப்பிடும்போது இறைவன் கேட்கமாட்டார்.

    ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடக் கூடாது. சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் பொய்சாட்சி சொல்லி உபத்திரவப்படுத்தக்கூடாது. தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ தேவ தயவு கிடைப்பது இல்லை. தரித்திரருக்குக் கொடுத்து தாழ்ச்சி அடைந்த சரித்திரமும் இல்லை. ஏழையைப் பரிகாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான். அவனுடைய நிந்தை அவனை விட்டு நீங்கும்வதும் இல்லை.

    ஏழைக்கு இரங்குகிறவன் செழிப்பான். அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவனை தேவ கிருபை சூழ்ந்துகொள்ளும். தேவ சமாதானத்தை பெறுவான். இருதயத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி. ஏழைக்குக் கொடுத்ததை ஆண்டவர் அவனுக்கு இரட்டிப்பாக திரும்பக் கொடுக் கிறார். அவன் தலைமுறை ஆசீர்வாதமாக இருக்கும்.

    ‘கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்’ (சங்.72:12).

    அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனை பிரபுக்களோடும், அதிபதிகளோடும் உட்கார வைக்கிறார். சிறுமையும் எளிமையுமானவர்கள் அவரை துதிக்கின்றார்கள். அவர்களுடைய ரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கிறது. எளியவனையும் சிறுமையானவனையும் எடுத்து உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் தலைமுறை வம்சங்களை ஆட்டு மந்தையைப் போல் பெருகச்செய்கிறார்.

    பலவீனமானவர்களையும் ஏழை எளியவர்களையும் துன்மார்க்கரின் கைக்கு தப்புவிக்கிறார். ஏழைகளைப் பராமரித்து ஆகாரத்தை கொடுத்து திருப்தி ஆக்குகிறார். எளியவனுடைய நியாயத்தை நாம் புரட்டி பேசக்கூடாது. அவனுடைய தேவன் அவனுடன் இருக்கிறார். அவர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு உடனடி பதில் செய்கிறார்.

    ‘வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்’ (சங்.112:9).

    நீ ஒரு ஏழையை கண்டால் இரக்கம் செய். திக்கற்றவர் வேலை செய்ய முடியாத வயதானவர்களுக்கு பசியை ஆற்று. உன் கையின் கிரியையை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். உன் சந்தோஷம் பெரியதாக இருக்கும். ஏழை எளியவர்களுக்குத் தானதர்மம் செய். எளிமையான கூலிக்காரனை ஒடுக்கக்கூடாது. ஏழை வேலை செய்தால் பொழுது போகுமுன்னே அவன் கூலியை கொடுக்கவேண்டும்.

    இறைவன் எளியவர்களின் தகப்பன். ஒரு சிறு பட்டணத்தில் கொஞ்சம் மனிதர்கள் குடியிருந்தார்கள். ஒரு பெரிய ராஜா வந்து அந்த பட்டணத்தை சொந்தமாக்கி பெரிய கொத்தளங்களை கட்டினான்.

    ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் தேவ ஞானத்தினாலே அந்த பட்டணத்தை விடுவித்தான்.

    ‘நான் சிறுமையும் எளிமையுமானவன் கர்த்தரே என்மேல் நினைவாயிருக்கிறார்’ (சங்.40:17).

    சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. அவர் எளிமையுள்ளவனை என்றைக்கும் மறப்பதில்லை. சிறுமைப்பட்டவனையும் எளிமையுள்ளவனையும் அவனிலும் பலவானுடைய கைக்கு தப்புவித்து நியாயஞ்செய்து காப்பார். எளியவர்களை கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கக் கூடாது. அவர் எளியவனுடைய சரீரத்தை பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

    ‘திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே’ (சங்.10:14).

    திக்கற்ற பிள்ளைகளுக்கு நியாயஞ்செய்கிறார். இறைவனின் கண் அவர்மேல் பதிக்கப்பட்டு இருக்கிறது. திக்கற்ற பிள்ளைகள் கூப்பிட்டவுடன் சர்வ வல்லவர் கேட்டு சகாயம் செய்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு உன் இருதயத்தை நீ கடினப்படுத்தாமலும் உன் கைகளை மூடாமலும் இரு. நீ விருந்து பண்ணும் போது திக்கற்றவர், ஏழைகள், விதவைகள், ஊனர்கள், ஊமைகள், செவிடர்கள், குருடர்கள், சப்பாணிகள் அழைத்தால் உன் வீட்டின் பொக்கிஷத்தை அருள்நாதர் உயர்த்துவார்.

    அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். பசித்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறார். பரதேசிகளை காப்பாற்றுகிறார். விதவைகளை ஆதரிக்கிறார். அனாதைகளுக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

    சகேயு என்ற மனிதர் இயேசுவை நோக்கி ஆண்டவரே என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி இன்றைக்கு உன் வீட்டிற்கு இரட்சிப்பு என்று சொல்லி சகேயு வீட்டிற்கு சென்று அவனை ஆசீர்வதித்தார்.

    ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரித்து, நீதியாய் நியாயம் தீர்க்கின்ற, ராஜாவின் சிங்காசனம் என்றும் பூமியில் நிலைத்து இருக்கச் செய்கிறார் ஆமென்.

    சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பனிமய மாதா ஆலய பங்குதந்தை லெனின் டிரோஸ் திருவிழா கொடியேற்றினார்.

    விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 8-ந்தேதி காலையில் திருவிழா திருப்பலி, அன்னையின் தேர் பவனி, மாலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா மாலை ஆராதனை, சப்பர பவனி நடக்கிறது. 9-ந்தேதி காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி, சப்பர பவனி, மாலையில் நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் அமைந்துள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலத்தின் வரலாறு தனிச்சிறப்பு மிக்கது.
    அன்னையின் மகிமையைப் பறைசாற்றும் திருத்தலங்களில் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன் மைத்திருத்தலமும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலத்தின் வரலாறு தனிச்சிறப்பு மிக்கது.

    கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களின் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார். அவர் இன்றைய கேரளப் பகுதியில் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியதோடு தமிழகத்தின் தென் பகுதிகளிலும் சபை களை ஏற்படுத்தினார்.

    அக்காலத்தில் மணல் மாதா கோவிலை உள்ளடக்கிய பகுதியான வீரநாடு என்று அழைக்கப்பட்டது. இந்நாட்டு மன்னனின் மனைவி, மகளை தீய ஆவியின் பிடியில் இருந்து குணமாக்கி இப்பகுதியில் கிறிஸ்தவ ஒளியை ஏற்றி வைத்தார். இம்மக்களுக்கென்று மாதா குருசடி அமைத்து இறைவனை வழிபட வகை செய்தார். பின்னர் இம்மக்களை மலபார் சபையினரும், வெளிநாட்டு அர்மேனிய சபையினரும் வழி நடத்தி வந்தனர்.

    கி.பி. 1325-ல் கணக்கன்குடியிருப்பு என்ற இவ்வூரில் வாழ்ந்த ஒரு பக்தர் கனவில் அன்னை மரியாள் தோன்றி ஆலயம் அமைக்க கேட்டுக் கொண்டார். பக்தரும் மக்கள் ஒத்துழைப்போடு அன்னைக்கு அழகிய சிறிய ஆலயம் அமைத்துத் தந்தார்.



    கி.பி. 1339-ல் போப்புவின் தூதுவராக இந்திய கிறிஸ்தவர்களை சந்திக்க வந்த ஜியோ வான்னி மரிஞ்ஞோலி ஆயர் அவர்கள் மாதாவின் சுரூபத்தை வடிவமைத்து ஸ்தாபித்தார். மாதாவின் சொரூபம் சந்தன மரமும், யானைத்தந்தமும் இணைத்து பழங்கால அமைப்பில் அழகுடனும் உயரத்தில் சிறியதாகவும் செய்யப்பட்டுள்ளது (இச்சுரூபமே இன்று மணல் மாதாவாக போற்றப்படுகிறது). கி.பி. 1542-ல் இவ்வாலயம் வந்த புனித சவேரியார் இங்கு இறந்த ஒருவனுக்கு உயிர் கொடுத்து அன்னையின் புகழைப் பரவச் செய்தார்.

    கி.பி. 1597-ல் இப்பகுதியை அரசூர் மன்னன் துறவிப்பாண்டியன் ஆண்டு வந்தார். அவர் கணக்கன்குடியிருப்பில் வாழ்ந்து வந்த ஏழை விதவைப் பெண்ணை வீண்பழி சுமத்தி, கொலை செய்ய தீர்ப்பளித்தார். அபலையின் சாபம் அகிலத்தை அதிரவைத்தது. பெரும் சூறாவளி வீசியது. மண்மாரி பொழிந்தது. ஊரே அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. அவ்வழிவுக்குப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்தரமாக மாறிப் போனது.

    கி.பி. 1798-ல் இக்காட்டில் கால்நடைகள் மேய்த்து வந்த ஒருவன் காலில் தடுக்கிய சிலுவையைக் கண்டு சொக்கன்குடியிருப்புக்கு வந்து உரைத்தான். அக்காலம் சொக்கன்குடியிருப்பு வடக்கன்குளம் பங்கோடு இணைந்திருந்தது. பங்குதந்தை கிளமெண்ட் தொமாசினி தலைமையில் சொக்கன் குடியிருப்பு மக்கள் ஒன்று திரண்டு மணலுக்குள் புதைந்திருந்த ஆலயத்தை வெளிக் கொணர்ந்தனர். மணலுக்குள்ளிருந்து கிடைத்ததால் அவ்வன்னையை அதிசய மணல் மாதா என அழைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாலயம் 2011-ல் அரசு சுற்றுலாத்தலமாக மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்து பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    வாருங்கள் மணல் மாதா ஆலயம் செல்வோம். அன்னையின் ஆசீர் பெருவோம்.

    சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மைத்திருத்தலம்.

    J. தாமஸ்ரோஜர்,

    திருத்தல அதிபர் தந்தை
    உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.
    “ஆன்ம அமைதி இல்லையெனில் உலகில் அமைதி இல்லை. நவீன உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் போராட்டங்களே உலகப் போர்களாக வெடிக்கின்றன. மனித மனதில் முதலில் தோன்றிய பிறகே உலகில் புலப்படும் வண்ணம் எதுவும் தோன்றுகிறது“ என்று ஆயர் புளூட்டன் சீன் கூறுகிறார்.

    மனித சமுதாயத்திலும், இயற்கையிலும் ஏற்படும் பல மாற்றங்களுக்கு மனித குலமே காரணமாக உள்ளது. தற்காலத்தில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளைப்பற்றிக் கவலைப்படுகின்றோம். இச்சீர்கேடுகள் மனிதர்களின் பொறுப்பற்றத் தன்மையால் ஏற்பட்டுள்ளது.

    ஆயர் புளூட்டன் சீன் கூறுவதுபோல மனித மனதில் அமைதி இல்லையென்றால் வெளியுலக அமைதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடுகின்றது. கொதிக்கும் புவியின் உட்பகுதி எரிமலையாக குமுறி வெடிப்பதைப் போன்று, அமைதி இல்லா மனித உள்ளங்கள், உலகில் சண்டைச் சச்சரவுகளாக, போர்களாக வெடிக்கின்றன. இன்றைய மனித இனம் தன் நவீன கண்டுபிடிப்புகளாலேயே நாளும் அலைக்கழிக்கப்படுகின்றது. அணுகுண்டுகள் இவ்வுலகையே சுடுகாடாக்கும் வல்லமை படைத்தவைகளாக உள்ளன. இன்றைய மனிதனின் மனப்பாங்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.

    தற்காலத்தில் உலக அமைதி என்பதைவிட மனித மனதிற்குள் அமைதி என்பது தேவைப்படும் ஒன்றாக உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் கவலைகள், விரக்தி, ஏக்கங்கள் இவையே முக்கியமானதாகத் தென்படுகின்றது. மெய்யியல் அறிஞர்கள் ஒரு காலத்தில் மனிதர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிய காலம் மாறி இன்று மனிதனே ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது வேடிக்கையான ஒன்றாகும்.

    இவைகளையெல்லாம் பார்க்கும்போது இன்று மனிதன் தன்னுள் நடைபெறும் போராட்டங்களிலிருந்து உடனடியாக மீட்கப்பட வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளான் என்பது புலனாகிறது. மனிதன் வெளி வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்துவதால் உண்மையான அமைதியை அளிக்கக்கூடிய தன் உள்ளத்தைக் கவனிக்க நேரமில்லாத ஒரு நிலையில் உள்ளான். தன்னைப் படைத்தக்கடவுளையே மறந்து தனக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் மனித இனம் உள்ளது. தன் மனதிற்குள்ளேயே சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்றைய மனிதன் உள்ளான்.

    இந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் முதலில் தான் அடைக்கப்பட்ட நிலையை மனிதர்கள் உணரவேண்டும். ஒரு நோயைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் அந்நோயின் தன்மையைப்பற்றி மருத்துவர் அறிந்திருக்க வேண்டும். அதுபோன்று உள்மன போராட்டங்களை போக்க வேண்டும் என்றால் அப்போராட்டத்தை பற்றிய தெளிவு தேவைப்படுகின்றது. உளவியல் மற்றும் மனநல மருத்துவம் போன்றதுறைகள் இன்று வளர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இத்துறைகள் மனிதனின் உள்ளத்தை மனிதனுக்கு விளக்கி, வாழ்வின் இக்கட்டான நேரங்களில் அவற்றை சமாளிக்கத் தேவையான உதவிகளை வழங்குகின்றன.

    மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் இருளான சக்திகளுக்கும், மனிதனின் வெளித்தோற்றத்திற்கும் இடையே ஏற்படும் மோதல்களே அவனது குழப்பமான, மகிழ்ச்சியற்ற நிலைக்குக் காரணமாக அமைகின்றன. இன்றைய நவீன கால மனிதன், மன அமைதியும், உண்மையான மகிழ்ச்சியும் மிகவும் தேவைப்படும் நிலையில் உள்ளான். உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.

    அருட்தந்தைஎம்.ஸ்தனிஸ்லாஸ்

    முத்துப்பிள்ளைமண்டபம், கும்பகோணம்.
    கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள் தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நவநாள் ஆராதனை தொடர்ந்து திருப்பலி நடக்கிறது.

    1-ந் தேதி காலை 10 மணிக்கு பாதுகாவலர் பெருவிழா திருப்பலி, மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    இயேசு பெருமான், நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்ற காரணத்தால்தான், அவர் வாழ்ந்த காலத்தில், பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.
    ‘லூக்கா’ என்ற நற்செய்தியாளரின் நற்செய்தியின் வாசகத்தை மிகவும் கூர்ந்து கவனித்து செவிமடுப்போம்.

    அக்காலத்தில் இயேசு பிரான் ‘கெனசரேத்து’ என்ற ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். பெருந்திரளான மக்கள் கூட்டம், இறை வார்த்தையைக் கேட்பதற்கு, அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. அப்போது ஏரிக்கரையில், இரண்டு படகுகள் நிற்பதை அவர் கண்டார். மீனவர்கள், படகை விட்டுக் கீழே இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளில் ஒன்று, ‘சீமோன்’ என்பவருக்கு சொந்தமானது. அப்படகில் இயேசு பிரான் ஏறினார். கரையில் இருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்.

    பிறகு படகில் அமர்ந்தபடியே, மக்கள் கூட்டத்தை நோக்கி கற்பிக்கத் தொடங்கினார். பேசி முடித்த பிறகு, சீமோனைப் பார்த்து, “ஆழத்திற்குக் கொண்டு போய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று கூறினார்.

    சீமோன் அதற்கு மறுமொழியாக, “ஐயா! இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும், ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற் படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

    அப்படியே அவரும் ஏனையோரும் வலை களைப் போட்டனர். பெருந்திரளான மீன்களைப் பிடித்தனர். வலைகள் கிழியத் தொடங்கின. மற்ற படகில் இருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் ‘சைகை’ காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்தனர். இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட ‘சீமோன் என்ற இராயப்பர்’ இயேசு பிரானின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே! நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய் விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும், மிகுதியான மீன்களைக் கண்டு திகைப்போடு பார்த்தனர். சீமோனின் பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைப்படைந்தனர்.

    இயேசு பிரான், சீமோனை நோக்கி, “அஞ்சாதே! இந்நாள் முதல், நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள், படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின், அனைத்தையும் விட்டு விட்டு, இயேசு பெருமானைப் பின்பற்றிச் சென்றார்கள்.

    விசுவாசமும், நம்பிக்கையும் எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதற்கு, இந்நற்செய்தி ஒரு சான்றாக அமைகிறது.

    இயேசு பிரான், ஒரு செய்தியை சீமோனிடம் கூறுவதைச் சற்றுக் கவனியுங்கள்.

    “ஆழத்திற்குக் கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்ற வார்த்தை முதலில், அர்த்தமற்றதாகச் சீமோனுக்குத் தோன்றியிருக்கக் கூடும். காரணம் இரவு முழுவதும் வலைகளைப் போட்டும், மீன்கள் கிடைக்கவில்லை.

    இருப்பினும், “உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்று சீமோன் கூறுகிறார். இந்த விசுவாசமும், அவர் மேல் உள்ள நம்பிக்கையும், சீமோனை உயர்த்துகிறது. எதிர்காலத்தில் ஆண்டவருக்காக, அவர் தன்னுடைய இன்னுயிரையும் இழந்து விடுவதைக் காண்கிறோம்.

    பெருந்திரளான மீன்கள் கிடைத்த தாகவும், வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு மீன்கள் நிரம்பி வழிந்ததாகவும் நற்செய்தியில் படிக்கிறோம். இதைக் கண்ட சீமோன், இயேசு பிரானைப் பார்த்து, “ஆண்டவரே! நான் பாவி. என்னை விட்டு அகன்று போய் விடும்” என்று கூறுகிறார்.

    இதில் இருந்து நாம் உணரும் செய்தி என்ன என்பதைச் சற்று எண்ணிப் பார்ப்போம்.

    இரவு முழுவதும் வலைகளைப் போட்டும், மீனே கிடைக்காததால் சற்று யோசித்துக் கொண்டிருந்த சீமோனுக்கு, இயேசு பிரானின் வார்த்தை நம்பிக்கையற்றதாகவே தோன்றியிருக்கலாம். ‘இருந்தாலும்...’ என்று சொல்லி, வலையைப் போடுகிறார். மீன்களை அள்ளுகிறார்.

    நம்பிக்கை தரும் வார்த்தையாக அவருடைய வார்த்தை இருந்தது என்பதை அக்காலத்தில் அங்கிருந்தவர்கள் கண்டு கொண்டார்கள். இறுதியாக ஒரு வார்த்தையை இயேசு பிரான் அங்கு சீமோனிடம் கூறுகிறார். இதோ! அந்த வார்த்தை: “அஞ்சாதே! இந்நாள் முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்”.

    அன்றே இயேசு பிரான் இந்தச் சீடரிடம் கண்டு கொண்டது என்ன?

    இவர்தான் திருச்சபையை வழி நடத்தப் போகிறவர் என்பதை மறைவாகச் சொல்வதுபோல் இருக் கிறது. மீன்களைப் பிடிப்பதே சவாலாக இருந்த நேரத்தில், மனிதனைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல.

    இக்காலத்தில், நல்ல செய்திகளை மனிதரிடம் சொல்லி, அவர்களை நல்வழியில் நடக்கச் செய்வதென்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர முடிகிறது.

    முழுக்க முழுக்க நெறி பிறழ்ந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில், இப்படி ஒரு வார்த்தையைக் கூறுகிறார்.

    “நீ சென்று மனிதனைப் பிடி” என்று அவர் கட்டளையிடவில்லை.

    “அஞ்சாதே! நீ, இன்று முதல் மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்!” என்று கூறுகிறார். எவ்வளவு ஆழமான வார்த்தை என்பதை, நாம் உணர வேண்டும்.

    ‘பயப்படாதே’ என்று முதலில் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் முதலில் ‘தைரியம்’ தேவை என்பதை வலியுறுத்து கிறார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

    ‘இன்று முதல் மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்’ என்று அடுத்த வார்த்தைகளால், அவரை ஆட்கொள்கிறார்.

    ஆம்! இயேசு பெருமான் ஒரு முடிவு எடுத்து விட்டார். மனிதர்களைப் பிடிப்பதற்கு, இவர்தான் சரியான ஆள் என்பதை உணர்த்துகிறார். வரம் அளிக்கிறார். ‘இன்று முதல்’ என்கிறார்.

    இவ்விடத்தில் ‘ஒன்றே செய்; நன்றே செய்; அதுவும் இன்றே செய்’ என்ற வார்த்தைகளை எண்ணிப் பார்ப்போம்.

    இவ்வார்த்தைகளைக் கேட்டதும் மகிழ்ச்சியோடு மறுவார்த்தை எதுவும் பேசாமல், படகுகளை அங்கேயே விட்டு விட்டு, அவரைப் பின்தொடர்கிறார்.

    இயேசு பெருமானின் மேல் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை இச்செயலின் மூலம் வெளிப்படுகிறது.

    இந்நற்செய்தியைப் படிப்போர், உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் ஒருவரை உயர்த்தும் என்பதை உணர வேண்டும். நற்செய்தியைப் படிப்பதோடு மட்டும் நின்று விடாமல், நற்செய்தியைப் பரப்புவதற்கு, நம்மால் இயன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என்றால், நல்ல வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    ‘நற்செய்தியைப் பரப்புவோர்’ முதலில், வழிகாட்டிகளாக இருந்தாலே போதுமானது. இயேசு பெருமான், நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்ற காரணத்தால்தான், அவர் வாழ்ந்த காலத்தில், பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. போதிப்பவர்கள் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். பிறர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்து, உயர்வோமாக!

    -செம்பை சேவியர்.
    பாவக்கட்டுகள் இல்லாத சரீரம், இதயம், ஆத்மாவை பெற்றிருக்கும் அந்த கிறிஸ்தவனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, தானும் அதுபோன்ற தன்மைகளை பெற வேண்டும் என்ற பசி, தாகம், பாவ விடுதலைக்கான வேட்கை எழுகிறது.
    இறைவன் படைப்பில் மனிதர்கள், முதலாளிகள் முதல் தரித்திரர்கள் என பல்வகைப்படுகின்றனர். அந்தந்த காலத்தில் அதை மனிதர்களுக்கு வரவழைக்கிறார். வாழ்வில் உயர்ந்திருப்பவர்கள், தங்களிலும் தாழ்ந்திருப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது எல்லா மனிதர் மேலும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தமாக இருக்கிறது.

    ‘தரித்திரனை அலட்சியப்படுத்துவது, அவனை உண்டாக்கிய இறைவனை அவமானப்படுத்துவதற்குச் சமமான பாவமாகும்’ (நீதி.14:31).

    அதாவது, வியாதியுள்ளவனுக்கு பணம் கொடுப்பது அல்லது சிகிச்சைக்கு உதவுவது; வாழ்வாதாரத்துக்கான வசதி இல்லாதவனுக்கு உதவுவது; சிறிய தவறினாலோ, தரித்திரத்தினாலோ சிறைப்பட்டு அல்லது அடிமைப்பட்டு போனவர்களை மீட்க முயல்வது என எத்தனையோ தான, தர்மங்களைச் செய்ய இறைவன் எல்லாருக்குமே அவர்களது சுற்றுப்புறத்தில் வாய்ப்பு அளிக்கிறார்.

    பக்தி வாழ்க்கையில் உள்ளவன், இயல்பு வாழ்க்கை வாழ்பவன், பாவ வாழ்க்கையில் உழல்பவன், இறைவனே இல்லை என்பவன் ஆகிய எல்லாருக்குமே மனசாட்சி மூலம் அதற்கான (உதவுவதற்கான) தூண்டுதலை இறைவன் அளித்துள்ளார்.

    உலகத் தேவைகளுக்காக தவித்து நிற்கும் மனிதனுக்கோ, பிற உயிரினங்களுக்கோ இதுபோன்ற உதவிகளை செய்வது, அனைத்துத் தரப்பு மனிதர்கள் மீதும் விழுந்த கடமைகளுள் ஒன்றாக இருக்கிறது.

    இதுபோன்ற உதவிகளை செய்ய விரும்பினாலும், ஏழைப்பட்டவனால் முழுமையாகச் செய்துவிட முடியாது. ஆனால் இதுபோன்ற உலக காரியங்களில் ஆதரவளிக்கும் நிலைகளையும் தாண்டி, மேலும் ஒரு நன்மையான காரியத்தை தன் பக்தனிடம் (ஏழை மற்றும் பணக்கார பக்தர்களிடம்) இறைவன் எதிர்பார்க்கிறார். அதுவே இறைவனுக்கு செய்யும் நன்மை என்று இயேசு தனது சீடர்களிடம் கூறியிருக்கிறார் (மத்.25:35-40).

    உலக வாழ்க்கையை நிறைவு செய்த பின்னர் ஒவ்வொருவரும் தனது பேச்சு, பார்வை, எண்ணம், நடத்தை ஆகிய ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டிய கடைசி நியாயத்தீர்ப்பு அன்று நடக்கும் சம்பவம் பற்றி சீடர்களிடம் இயேசு பேசினார்.

    இறைநீதிப்படி நடந்த பக்தர்களை மற்றவர்களிடம் இருந்து தனியாகப் பிரித்து தனது அரசாட்சிக்கு இறைவன் அழைத்துச் செல்வதற்கு முன்பு, ‘பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்பார்.

    நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ‘ஆண்டவரே... நாங்கள் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்’.

    அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்’ என்று அந்த வசனங்கள் கூறுகின்றன.

    இந்த வசனத்தில் பல ஏழைகளுக்கு சோறு போட்டது, பணம் கொடுத்தது போன்ற தான தர்ம காரியங்களை செய்ததுபற்றி இயேசு குறிப்பிடவில்லை.

    சிறியவன் ஒருவனுக்கு என்று ஒருமையில் இயேசு குறிப்பிடு கிறார். வசனத்தில் இயேசு குறிப்பிடும் அந்த சிறியவன் ஒருவன் யார்? அவனுக்கு பக்தனால் செய்யப்பட்ட நன்மைகள் என்னென்ன? என்பது கேள்வியாக எழுகிறது.

    பகைப்பவனை நேசித்தல், அடிப்பவனை மன்னித்தல், தூஷிப்பவனின் நலனுக்காக ஜெபித்தல், கேட்பவனுக்கு விட்டுக் கொடுத்தல் என்ற அன்பின் அடிப்படையிலான பல நன்நடத்தையை வேதம் படித்தவன் தனது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றியாக வேண்டும் என்பது இறைக்கட்டளை.

    பொறாமை, எரிச்சல், கோபம், பாகுபாடு, பகை போன்ற குணங்கள் இல்லாத அந்த அன்பின் பாதையில் செல்லும் கிறிஸ்தவன் போகுமிடம் எல்லாம் அமைதியும் சமாதானமும் சந்தோஷமும் நற்பெயரும் இறைவனால் உண்டாகிறது.

    பாவக்கட்டுகள் இல்லாத சரீரம், இதயம், ஆத்மாவை பெற்றிருக்கும் அந்த கிறிஸ்தவனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, தானும் அதுபோன்ற தன்மைகளை பெற வேண்டும் என்ற பசி, தாகம், பாவ விடுதலைக்கான வேட்கை எழுகிறது.

    இயேசுவின் மார்க்கத்துக்கு அந்நியனாக இருந்த அப்படிப்பட்டவனின் ஆத்தும பசி, தாகத்துக்கு தேவையான போதனையை தனது தாலந்துக்கு ஏற்றார்போல் கொடுத்து, ஆத்தும நோயில் இருந்தும், பாவக்கட்டுகளில் இருந்தும் விடுவிக்கும் சத்தியத்தைக் காட்டி, பாவ மீட்பு என்ற வஸ்திரத்தால் அவனை மூடும் பக்தனே இயேசுவால் அன்று நீதிமான் என்று அழைக்கப்படுவான்.

    இந்த சத்திய மார்க்கத்துக்கு விலகியிருப்பவர்களையே சிறியவர்கள் என்றும் அவர்களை தனது சகோதரர் என்றும் குறிப்பிடும் இயேசு, குறைந்தபட்சம் அவர்களில் ஒருவனையாவது அந்த வகையில் மீட்டுக்கொள்பவனே, இறைவனுக்கு நன்மை செய்பவன் என்றும் அவனே இறைஆட்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.
    வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் நேற்று மாலை 4.30 மணிக்கு குருசடிகள் தரிசனம், 6 மணிக்கு ஜெபமாலையும், அருட்பணியாளர் ஜான்சன் கொடியேற்றினர். தொடர்ந்து திருப்பலி, இரவு அன்பியங்களின் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் நடக்கிறது. 2-ம் நாள் இரவு மறைமாவட்ட இயக்குனர் மைக்கேல் ராஜ் தலைமையில் கிராம முன்னேற்ற சங்க ஆண்டுவிழா, 3-ம் நாள் காலை 7 மணிக்கு திருப்பலி, இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.

    30-ந் தேதி காலை 7 மணிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமையில் முதல் திருவிருந்து பெருவிழா, மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர்பவனி, 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

    இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். மதியம் 2 மணிக்கு அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, நிதிக்குழு, பங்கு பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    ‘கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்’. (சங்.29:11)
    பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

    இம்மட்டும் உங்களை வழிநடத்தி வந்த அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இனியும் தம்முடைய பெலத்தினாலே உங்களை நிரப்பி கிருபையாக வழிநடத்துவாராக.

    ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’. (பிலிப்.4:13)

    கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தச் செய்தியை விசுவாசத்தோடு வாசியுங்கள். கர்த்தருடைய வார்த்தையை நம்புங்கள். அப்போது அப்போஸ்தலர் பவுலைப் போல நீங்களும், ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்யக்கூடும்’ என்று கூறுவீர்கள்.

    நாம் ஆண்டவரை நம்புகிற பிள்ளைகளாக இருந்தும், இந்த உலகத்தில் நாம் வாழ்கிறபடியால் பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பது உண்மைதான். ஆனால் அந்த நெருக்கடிகளுக்கு நடுவே நம்மை கர்த்தர் பெலப்படுத்துகிறார் என்பது மாறாத உண்மையல்லவா.

    அதே வேளையில் அவர் எப்போது, எப்படி நம்மைப் பெலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

    ஆத்துமாவைப் பெலப்படுத்துகிறார்

    ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்’. (சங்.138:3)

    தேவன் நம்மைப் பெலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் எப்போது பெலப் படுத்துகிறார் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். பலவிதமான ஆபத்துகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நம்முடைய ஆத்மா சோர்ந்து போவது இயல்பாகும்.

    ‘ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது’. (நீதி.24:10)

    ஆம், உங்களுக்குள் சோர்வின் ஆவி தாக்கினவுடனே உங்கள் ஆத்மாவிலே கலக்கமும், வேதனையும் உண்டாகும். அப்போது நம்முடைய ஆத்மாவிலே இருக்கிற பெலன் குறுகிப்போய் விடும்.

    கிறிஸ்தவ வாழ்க்கையில் நம்முடைய ஆத்மா மிக மிக முக்கியமானது. அதை தான் தாவீது, ‘நான் கூப்பிட்ட நாளில் எனக்கு மறு உத்தரவு அருளினீர் என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்துனீர்’ என்று கூறுகிறார். எந்தவிதமான போராட்டங்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டாலும் உங்கள் ஆத்மாவைப் பெலப்படுத்துகிறவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    பிரச்சினைகளுக்கு மத்தியில் மனிதனை கூப்பிடுவதை விட தேவனை நோக்கி கூப்பிட்டுப் பாருங் கள். உங்கள் ஆத்மா பெலனடையும். அதனால் உங்களை அறியாத ஒரு தைரியம் உங்களில் உண்டாகும், உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் சவால் களை தைரியமாய் சந்திப்பீர்கள். ஏனென்றால் ஆத்மாவைப் பெலப்படுத்துகிறவர் உங்களோடு இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்.

    தரிசனத்தின் மூலம் பெலப்படுத்துவார்

    ‘ராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கை போடுவதில்லை, இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்’. (அப்.18:9,10)

    அப்போஸ்தலனாகிய பவுலை பெலப்படுத்துவதற்கு ராத்திரியிலே ஆண்டவர் தரிசனமாகி தைரியப்படுத்தினதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.

    அந்நாட்களில் மட்டுமல்ல இந்நாட்களிலும் ஆண்டவர் அவ்வப்போது தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்கள் மூலமாகவும் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைப் பெலப்படுத்துகிறார்.

    திறந்த கண்களினால் காண்பது தரிசனம், உறங்கும்போது நாம் காண்பது சொப்பனம். ஆகவே, தேவனுடைய சித்தத்தை விசுவாசத்தோடு தொடர்ந்து செய்யப் பிரயாசப்படுங்கள். அவ்வப்போது அவர் தரிசனங்கள் மூலம் நம்மோடு பேசுவார்.

    தூதர்கள் மூலம் பெலப்படுத்துவார்

    ‘என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக் கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த ராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்’. (அப்.27:23,24)

    நம்முடைய அருமை ஆண்டவர் நம்முடைய பெலவீனத்தில் நமக்கு உதவி செய்யவும், பெலவீனரை பெலவான்களாய் மாற்றவும் சித்தமுள்ளவராகவே இருக்கிறார். ஆனால் சாத்தானின் எண்ணம் எப்போதும் நம்மை பெலவீனப்படுத்துவதே ஆகும்.

    ஆனால் நம் ஆண்டவரோ ஏற்ற நேரத்தில் நம்மைப் பெலப்படுத்தி தம்முடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அநேக நேரங்களில் தேவனுடைய சித்தத்தை நாம் நிறைவேற்றும்போது தடைகள், போராட்டங்கள் வரலாம். அவ்வாறு வரும்போது நமக்குள்ளே பல சந்தேகங்களும், குழப்பங்களும் உடனே வந்து விடும்.

    ‘கர்த்தருடைய சித்தத்தின்படி தானே செய் கிறேன். ஆனாலும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வருகிறதே ஏன்?’ என்ற கேள்விகள் உங்களுக்குள்ளே எழும்பி கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

    ஆனாலும், தேவனுக்காக வைராக்கியமாக நீங்கள் நிற்கும்போது கர்த்தர் ஏதாகிலும் ஒரு விதத்தில் உங்களைப் பெலப்படுத்துவதற்கு அவர் வல்லவராயிருக்கிறார். ஏனெனில் அவர் தான் நம்மை அழைத்தார், தெரிந்து கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தகப்பன் தன் பிள்ளையைத் தோளில் சுமப்பதுபோல உங்களைச் சுமந்து பெலப்படுத்துவார்.

    ‘கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்’. (சங்.29:11)

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு செபமாலை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அருட்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் திருக்கொடியேற்றமும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அருட்தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதில், கார்மல் நகர் மண்டல அருட்தந்தையர்கள் கலந்துகொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது.

    இதுபோல், விழாவின் ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கும் செபமாலை, திருக்குடும்ப நவநாள், விழா திருப்பலி நடைபெறுகிறது.

    3-ம் நாள் விழாவில் காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை அருட்தந்தை ஹென்றி தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

    6-ம் நாள் விழாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் விழா திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையேற்று மறையுரை நிகழ்த்துகிறார்.

    9-ம் நாள் விழாவில், காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்தந்தை மரிய வில்லியம் தலைமைதாங்குகிறார். தொடர்ந்து அருட்தந்தை ஆல்வின் மதன்ராஜ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை மற்றும் ஆராதனை விழாவுக்கு பேரருட்தந்தை சாலமோன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம்நாள் விழா காலை 7 மணிக்கு பேரருட்தந்தை மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்தந்தை வலேரியன் மறையுரையாற்றுகிறார். அதைதொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. தேர்திருப்பலிக்கு அருட்தந்தை மார்க்கோணி ரவிச்சந்திரன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.

    இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலையில் நடைபெறும் திருப்பலிக்கு பின் திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், ஊர் நிர்வாகத்தினர், தூய அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    மேலப்பாளையம் சேவியர் காலனி தொம்மைமிக்கேல்புரத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மேலப்பாளையம் சேவியர் காலனி தொம்மைமிக்கேல்புரத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி சிறப்பு தியான நிகழ்ச்சியும், 28-ந் தேதி மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்தும் நடக்கிறது. 29-ந் தேதி புதுநன்மை விழா மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு தந்தை அந்தோணி சேவியர் மற்றும் ஆலய குழுவினர் செய்துள்ளனர்.
    ×