என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களோடிருந்து உங்கள் சகல சிறையிருப்புகளையும் மாற்றி நீங்கள் இழந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் உங்களுக்கு நிச்சயம் தருவார்.
    இன்றைக்கு பலவிதமான ‘சிறையிருப்புகளில்’ அநேகர் சிக்குண்டு எவ்வாறு வெளியே வருவது என வழி தெரியாமல் திகைக்கின்றனர்.

    ‘சிறையிருப்பு’ என்றால் என்ன?

    வியாதி, பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், பிசாசினால் வரும் போராட்டங்கள் இவை அனைத்தும் சிறையிருப்புகளே. இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளும் சில சிறையிருப்புகள் காணப்படலாம். ஆனால் அவைகள் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் உங்களை நிச்சயம் விடுதலையாக்குவார்.

    எதனால் சிறையிருப்பு

    “அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஓப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார். அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.” நியாய.6:11

    மேற்கண்ட வசனத்தில் தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தபோது ஆண்டவர் அவர்களை மீதியானியர் கையிலே ஒப்புக் கொடுத்தார் என வாசிக்கிறோம்.

    ஆம், சில நேரங்களில் நாம் கர்த்தருக்கும், கர்த்தருடைய சித்தத்திற்கும் விரோதமாய் செயல்படும் போது சத்துரு நமக்கு விரோதமாக கிரியை செய்ய இடம் கொடுத்து விடுகிறோம். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இஸ்ரவேல் மக்களுக்கு நடந்தது. இந்த செய்தியை நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கு வந்த உபத்திரவத்திற்கு காரணம் என்ன என்பதை தேவனுடைய சமூகத்தில் அமர்ந்து சற்று நிதானித்துப் பாருங்கள்.

    “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப் படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால், ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல, அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” யாக்.1:13,14

    ஆகவே தேவனுடைய பிள்ளையே! இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை செய்தபோது 7 வருடம் மீதியான் கையிலே ஒப்புக் கொடுத்தார். நீங்களும் எதாகிலும் சிறையில் அகப்பட்டிருந்தால் உங்களுடைய ஆன்மிக வாழ்க்கையை சற்று சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் மனஸ்தாபப்படும் போது நிச்சயம் உங்களுக்காக மனம் இரங்குவார்.

    சிறையிருப்பு கொடுமையானது

    “மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள்.

    அவர்களுக்கு எதிரே பாளையமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.

    அவர்கள் தங்கள் மிருக ஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும். இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.” நியாய.6:2,4,5

    தேவனுடைய பிள்ளையே! கர்த்தருடைய பலத்தினால் கம்பீரமாய் வாழக்கூடிய இஸ்ரவேல் மக்கள் மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக் கொண்டபடியால், குகைகளுக்கும் அரண்களுக்கும் ஓடி ஒளிய வேண்டிய சூழ்நிலை வந்தது. இஸ்ரவேல் மக்கள் நிலத்தின் விளைச்சலை மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்தி புத்திரரும் கெடுத்து ஆசீர்வாதத்தை இழந்து போகும்படி செய்தார்கள். மேலும், இஸ்ரவேலின் ஆடு, மாடுகளையும், கழுதைகளையும் திருடிக் கொண்டு சென்றார்கள்.

    தேவனுடைய பிள்ளையே! சத்துருவின் சிறையிருப்புக்குள் நாம் செல்லும்போது நம்மையும் நம்முடைய எல்லாவற்றையும் அழிப்பதே சாத்தானின் தந்திரமாகும்.

    இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” யோவான் 10:10

    ஆம் தேவ பிள்ளையே! சத்துருவின் சிறையிருப்பு மிகவும் கொடுமையானது. உங்கள் வாழ்விலும் கடன் பிரச்சினை, பாவகட்டுகள், கொடிய வியாதிகள், தீராத குடும்ப பிரச்சினைகள் இவற்றினாலே மனசோர்வோடு காணப்படுகிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தியை கூற விரும்புகிறேன்.

    கர்த்தரை நோக்கிப் பாருங்கள்

    “இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.” நியாய.6:6

    எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! உங்கள் சிறையிருப்பு சிறிதாக இருக்கலாம். பெரிதாக இருக்கலாம். எப்படிப்பட்ட கட்டுகளிலும், காவல்களிலும் நீங்கள் இருந்தாலும் உங்களை உண்டாக்கின தேவனை நோக்கி கூப்பிடுவீர்களா? நிச்சயம் நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்களை விடுவிக்க அவர் வல்லவரும் உண்மை உள்ளவருமாக இருக்கிறார்.

    அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் தேவனை நோக்கியும்போது உங்களை விடுவிக்க அவர் வல்லவரும் உண்மை உள்ளவருமாக இருக்கிறார். அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் தேவனை நோக்கி முறையிடும்போது கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர் களிடத்தில் அனுப்பி அந்த தீர்க்கதரிசியின் மூலமாக இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பெலப்படுத்தினார்.

    ஒரு கிதியோனை கர்த்தர் எழுப்பி பராக்கிரமசாலியான அவனை உருவாக்கி அவன் நிமித்தம் இஸ்ரவேல் சிறையிருப்பில் சிக்கிக்கொண்ட இஸ்ரவேலரை விடுவித்தார்.

    நீங்களும் நானும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற இக்காலம் பரிசுத்த ஆவியானவருடைய நாட்கள். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.”சகரி.4:6.

    ஆகவே கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களோடிருந்து உங்கள் சகல சிறையிருப்புகளையும் மாற்றி நீங்கள் இழந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஐசுவரியத்தையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் உங்களுக்கு நிச்சயம் தருவார். ஆனால் கர்த்தரை மட்டும் சார்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், “இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்”, சென்னை- 54
    கடவுளே, தவறை அறிகின்ற ஒரு அறிவை அல்ல, அதனை உணர்ந்து வேண்டாம் என்று கூறுகின்ற நல்ல மனநிலையை தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.
    “தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை..”- நீதிமொழிகள்- 16:17

    நண்பர் ஒருவர் தானும் சரி, தன்னுடைய மனைவியும் சரி, வீட்டை நன்கு சுத்தமாக வைக்க அதிக கவனம் செலுத்துவதில்லை. அழுக்குத் துணிகள், உடனுக்குடன் அகற்றப்படாத குப்பைகள், துடைக்கப்படாமல் தூசி படித்த பொருட்கள், ஒழுங்கின்றி தாறுமாறாய் கிடக்கும் வீட்டு சாமான்கள் என அந்த வீடு மிக மோசமாகவே காட்சியளிக்கும்.

    ஆனால் இது குறித்து யாரும் அவர்களுக்குச் சொல்லி உணர்த்த தேவையில்லை. ஏனென்றால் யார் அவர்களின் வீட்டிற்கு வந்தாலும் அவர்களே முந்திக்கொண்டு எங்கள் வீடு சுத்தமாக இல்லை. எங்கள் வீட்டில் எதுவும் ஒழுங்காக இல்லை என்று ஆலயங்களில் பாவ அறிக்கை செய்வது போல மறைக்காமல் செல்லிவிடுவார்கள். ஆனால் அந்த நிலைமையை ஒரு போதும் மாற்றாமல் அதன் நடுவில் வாழ்வதற்கு பழகிக்கொண்டார்கள்.

    சிலருக்குத் தவறானவைகளை தவறானவை என்று அடையாளம் காண முடிகிறது. அவை நல்லதல்ல என்று உணர முடிகிறது. அவை அகற்றப்பட வேண்டியது என்பது புரிகிறது. ஆனால் அவற்றை வெறுக்கும் மனநிலை இல்லை. அவற்றை அவர்கள் வெறுக்காததால் அவற்றை விலக்குவதற்கான உந்து விசையும் வலிமையான ஆர்வமும் இல்லை. எனவே அவற்றை அகற்றாமல் அவற்றோடு இணைந்து வாழ்வதற்கு பழகிவிட்டார்கள்.

    தேவ உறவுடன் வாழ்வதை நாம் உறுதிப்படுத்தும் முக்கியமான ஓர் அடையாளம் பாவத்தை அறிதல் அல்ல. பாவத்தை வெறுத்தல் ஆகும். பரிசுத்தமான தேவனுடைய பரிசுத்த ஐக்கியம் நம்மோடு இருந்தால் தவறானவைகளை அடையாளம் கண்டு ஒத்துக்கொள்வதோடு நின்றுவிடமாட்டோம். அவற்றை வெறுக்கவும், விலக்கவும் அதிக ஆர்வம் காட்டுவோம்.

    ஏனென்றால் தேவ உறவுடன் வாழ்கின்ற மனிதனால் தவறான குணங்களோடும், தவறான செயல்களோடும், தவறான பழக்கங்களோடும் சேர்ந்து உறுத்தல் இல்லாமல் வாழ முடியாது. சிலர் பிரசங்கங்களை கேட்கும் போது, சில புத்தகங்களை படிக்கும் போது கடவுள் தவறானவைகளை குறித்து தங்களுக்கு உணர்த்தியதைச் சொல்லுவார்கள். ஆனால் அவற்றை விட்டு விலகுவதற்கு எதையும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் மனிதனுடைய பொதுவான அறிவைக்கொண்டு கூட தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது உணர முடியும். ஆனால் அங்கே வெறுக்கின்ற ஒரு மனநிலை தோன்றாது.

    கடவுள் பேசினார். கடவுள் உணர்த்தினார். கடவுள் எச்சரித்தார் என்றெல்லாம் நாம் சொல்லியும், அவ்விதம் உணர்த்தப்பட்ட காரியங்களை வெறுத்து விலக்கும் தூண்டுதல் ஏற்படாவிட்டால், நாம் கடவுளோடு இல்லை என்றுதான் பொருள் ஆகும். கடவுளே, தவறை அறிகின்ற ஒரு அறிவை அல்ல, அதனை உணர்ந்து வேண்டாம் என்று கூறுகின்ற நல்ல மனநிலையை தாரும் என்று ஜெபிக்க வேண்டும். “நீ புகழப்படும் போது புகழ்ந்ததை யார் என்பதை பார்-நீ இகழப்படும் போது உன்னை நீ யார் என்று பார்”

    --சாம்சன்பால்
    விழிப்புணர்வு என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு, தேவை என்று உணரும் நாம், விண்ணரசை அடைவதற்கு எவ்வளவோ, தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்நற்செய்தி எடுத்துரைக்கிறது.
    இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம் சீடர்களுக்குப் பல நற்செய்திகளை எடுத்துரைத்தார் என்பதைப் பல வாரங்களாகத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதைப்போல இந்த வாரம் புனித மத்தேயு எழுதிய நற்செய்தியை ஒருகணம் செவிமடுப்போம்.

    இந்நற்செய்தியில், ‘விண்ணரசு’ பற்றிப் பேசுகிறார்.

    ‘விண்ணரசு’ எப்படி இருக்கும் என்பதை, ஒரு சம்பவத்தின் வழியாக எடுத்து விளக்குகிறார். இதோ, அந்தச் சம்பவம்:

    மணமகனை எதிர்கொண்டு அழைக்க, மணமகளின் தோழியர்கள் பத்துப் பேர், தங்கள் கையில் இருந்த விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அந்த பத்துத் தோழியர்களில், ஐந்து தோழியர்கள் அறிவற்றவர்கள். மீதமுள்ள ஐந்து பேர் முன்னறிவு உடையவர்கள். அறிவற்றவர்கள் ஐவரும், தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால் ‘எண்ணெய்’ எடுத்துச் செல்லவில்லை. முன்னறி உடைய ஐந்து பேரும், தங்கள் விளக்குகளோடு எண்ணெய்யையும் எடுத்துச் சென்றனர்.

    மணமகன் வருவதற்குக் காலம் தாழ்ந்து விட்டது. பிறகு மணமகன் வந்தார். ‘இதோ மண மகன் வருகிறார். அவரை எதிர்கொண்டு அழைக்க வாருங்கள்’ என்று உரத்த குரல் ஒலிக்கக்கண்டனர்.

    மணமகளின் தோழியர்கள் அனைவரும் எழுந்து, தங்கள், தங்கள் விளக்குகளைச் சரி படுத்தினர். அப்பொழுது அறிவற்றவர்கள், முன்னறிவு உடையவர்களைப் பார்த்து, ‘எங்களுடைய விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வைத்திருக்கும் எண்ணெய்யில், எங்களுக்கும் கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.

    முன்னறிவு உடையவர்கள், அவர்களை நோக்கி, மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் போதுமான அளவு எண்ணெய் இல்லாமல் போய் விடலாம். ஆகவே வணிகம் செய்பவர்களிடம் சென்று, நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

    அவர்களும் எண்ணெய் வாங்குவதற்காக, வணிகர் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மணமகன் வந்து விட்டார். தயாராக இருந்தவர்கள், அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு வந்த மற்றத் தோழிகளும், ‘ஐயா! ஐயா! எங்களுக்கு கதவைத் திறந்து விடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே, “விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது”.

    இந்த உவமை வழியாக, நாம் உணர்வது என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம்.

    பத்துத் தோழியர்களைப் பற்றி, இந்நற்செய்தி பேசுகிறது. பத்துத் தோழியர்களில், ஐந்து பேர் அறிவற்றவர்கள் என்றும், வேறு ஐவர் முன்னறிவு உடையவர்கள் என்றும் பேசப்படுகின்றது.

    இந்தப் பத்துப் பேரும் மணமகளின் தோழியர்கள் தான் என்றாலும், மணமகன் எப்பொழுது வருவார் என்பதை யாரும் மதிப்பிட முடியாது என்பதை தங்களின் முன்னறிவால் ஐந்து தோழியரே அறிந்து கொள்கின்றனர். அதனால்தான் விளக்குகளைக் கொண்டு சென்றபொழுது, மிகவும் கவனமாக எண்ணெய்யையும் எடுத்துச் செல்கின்றனர். ஏனையவர்களுக்கு அதைப் பற்றிச் சிந்திக்கத் தெரியவில்லை. ஆகவே எண்ணெய்யை எடுத்துச் செல்லாமல் சென்று விட்டனர்.

    முன்னறிவு உள்ளவர்கள், மிகவும் கவனமாக, இறுதி வரை இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்கிறோம். ‘அவர்கள் எங்களுக்கு எண்ணெய் தாருங்கள் என்று கேட்கும் பொழுதுகூட, எண்ணெய்யைப் பகிர்ந்து கொண்டால், ஒருவேளை எல்லோருக்கும் போதுமான அளவு இல்லாமல் போகலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

    ‘முன்னறிவு’ என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை, நாம் உணர வேண்டும்.

    ஒருவன் முட்டாள் தனமாக ஒரு செயலைச் செய்யும்போதுகூட, நாம் சொல்லும் முதல் வார்த்தையே, ‘உனக்கு அறிவிருக்கா? எதையும் யோசித்து செய்ய வேண்டாமா?’ என்று கேட்கிறோம் அல்லவா?

    இதைத்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு பெருமான் எடுத்துரைக்கிறார்.

    இந்த நற்செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்து என்ன என்பதை ஒரு கணம் சிந்திப்போம்.

    இவ்வுலகில் வாழும் மனிதர்கள், இவ்வுலகிற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும், அவர்களுக்கு உரிய இடம் ‘விண்ணரசு’ என்றும், இயேசு பெருமான் கூறு கிறார்.

    அத்தகைய விண்ணரசை அடைதல் எளிதான செயல் அல்ல என்பதுதான், அவருடைய போதனையாகும். அத்தகைய விண்ணரசை அடைய வேண்டும் என்றால், நம்மை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும். தயாராகவும் இருக்க வேண்டும். பத்துப் பேரில் ஐவர், மணமகன் தாமதமாக வந்தாலும், அவரை எதிர்கொண்டு அழைக்கத் தயாராக இருந்தார்கள். ஆகவே ஒழுக்க சீலர்களாக இவ்வுலகில் வாழ வேண்டும். அங்ஙனம் வாழ்ந்தால், விண்ணரசை எந்த நேரம் வந்தாலும் அடையலாம் என்பதுதான் இக்கருத்தாகும்.

    என்ன நடக்கும் என்பதை முன்னறிவால் உணர்ந்து செயல்படுவதுதான் சாலச் சிறந்தது.

    இவ்வுலக வாழ்க்கைக்கே, முன்னறிவு தேவைப்படும் பொழுது, ‘நித்திய வாழ்வை அடைவதற்கு, எந்த அளவுக்கு முன்னறிவு தேவைப்படும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    ‘விழிப்பாயிருங்கள்’ என்ற வார்த்தை, இயேசு பெருமானால், பல இடங்களில் பேசப்படும் வார்த்தையாகும்.

    மனித சமூகத்திலே கூட பலர், விழிப்புணர்வைப் பற்றி பேசுவதைக் கேட்கிறோம். இந்த விழிப்புணர்வு என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு, தேவை என்று உணரும் நாம், விண்ணரசை அடைவதற்கு எவ்வளவோ, தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்நற்செய்தி எடுத்துரைக்கிறது என்பதை உணர்ந்து நல்வழி நடப்போம்.
    சிறிய காரியங்களில் கருத்தூன்றி செயல்படுகின்ற போது, இறைவனுக்கு ஏற்றவர்களாக உருமாற முடியும்.
    பிரான்ஸ் நாட்டில் உள்ள அலேன்சோ என்ற இடத்தில் பிறந்தவர் புனித தெரசாள். இவர் தனது குழந்தை பருவத்திலேயே தான் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார். ஒருமுறை தவறுதலாக வீட்டில் இருந்த பூ பாத்திரத்தை உடைத்தவுடன், பெற்றோரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். 'தினமும் ஒரு நன்மையாவது செய்து பழகு' என்பதே இவரின் வாழ்க்கை தத்துவமாய் அமைந்திருந்தது. அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.

    சின்ன சின்ன செயல்கள் வழி இறைவனை தேடி அடைய இன்றைய நாள் சிந்தனை நம்மை அழைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தனக்கு குறிக்கப்பட்ட கடமையை நிறைவு செய்தால் இறைவனோடு வழிநடக்கிறோம் எனப்பொருள். தொடக்க கால கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய திருத்தலங்களையும், வழிபாட்டு கூடாரங்களையும் உருவாக்க முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் மிக சாதாரண செயல்களே ஆகும்.

    இதனை திருத்தூதர்பணி 2:42-47 வரையுள்ள இறைவார்த்தையில் பார்க்கிறோம். இதில் அவர்கள் அப்பத்தை பிட்டனர். பகிர்ந்து உண்டனர். இறைவேண்டல் செய்தனர். அனைத்தையும் பொதுவாய் வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் ஆண்டவர் விடுத்த அழைப்பின்படியும் வாழ்வதற்கு முயற்சி செய்தனர்.

    ஒரு மனிதன் தனது 30-வது வயதில் உலகம் திருந்த வேண்டும் என கடவுளிடம் வேண்டினான். எதுவுமே நடக்கவில்லை. தனது 40-வது வயதில் நாடு திருந்த வேண்டும் என கடவுளிடம் வேண்டினான். அதுவும் நடக்கவில்லை. இவ்வாறு 50-வது வயதில் மாவட்டம், 60-வது வயதில் ஊர், 70-வது வயதில் குடும்பம் போன்றவை திருந்த வேண்டும் என வேண்டினார். எதுவுமே நடக்கவில்லை.

    தனது 80-வது வயதில் புரிந்து கொண்டாராம், 'நாம் இவற்றையெல்லாம் செய்திருக்கலாம்' என்று. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மனித வாழ்வில், சமூகத்திற்கும், பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் வாழ முயற்சி எடுப்போம். குடும்பத்தில் இணைந்து உரையாடுவோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேர்ந்து உணவருந்துவோம். கலந்துரையாடல் செய்யும்போது நமது பொறுப்புகளும், கடமைகளும் தெரிய வரும்.

    சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்த தவக்காலத்தில் நமது செயல்பாடுகளை பட்டியலிடுவோம். காலை படுக்கையில் இருந்து எழுந்தது முதல் தூங்க செல்கின்ற நேரம் வரைக்கும் நாம் செய்கின்ற செயல்கள் என்னென்ன? என திட்டமிடுவோம். சாப்பிடுதல், வீட்டை தூய்மை படுத்துதல், ஜெபம் செய்தல், உணவு தயார் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், அலுவலகத்தில் வேலை செய்தல் போன்ற எல்லா காரியங்களையும் சரியான மனநிலையோடு அணுகுவோம். இந்த சிறிய காரியங்களில் கருத்தூன்றி செயல்படுகின்ற போது, இறைவனுக்கு ஏற்றவர்களாக உருமாற முடியும்.

    -அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    தேவனுடைய பிள்ளையே! நீங்கள் கடந்து வருகிற வனாந்தர பாதையில் கர்த்தர் உங்களோடிருந்து சத்துருவை வெட்கப்படுத்தி உங்களை சந்தோஷப் படுத்துவது அதிக நிச்சயம்.
    ‘நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த உங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூர்ணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. (யோவேல் 2:25,26)

    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

    இந்நாட்களில் சாத்தான் அநேக குடும்பங்களை பலவிதமான போராட்டங்களில், பிரச்சினைகளில் சிக்க வைத்து வெட்கப்பட்டுப் போகும்படிச் செய்கிறான். இதனால் தேவபிள்ளைகள் மிகவும் சோர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விசுவாசத்தில் பலவீனமடைகிறார்கள்.

    ஆனால் கர்த்தருடைய பிள்ளையே! நம்முடைய கர்த்தருடைய வார்த்தையை மனப்பூர்வமாய் நம்புங்கள். அவர் உங்களை பார்த்து சொல்லுகிறார், ‘என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’.

    ‘சாத்தான் தந்திரமாய் சில குடும்பங்களில் நுழைந்து தேவ பிள்ளைகளை வெட்கப்படுத்துகிறான். அவன் தந்திரமுள்ளவன்’ என்று பவுல் II கொரி.2:11-ல் கூறுகிறார்.

    யோவான் 10:10-ல் இயேசு சொன்னார், ‘சாத்தான் திருடுகிறவன், கொல்லு கிறவன் மற்றும் அழிக்கிறவன்’.

    மேலும் மத். 13:25-ல் சொல்லுகிறது, ‘மனிதன் தூங்கும்போது இரவில் பல விதமான களைகளை விதைப்பான்’. (சிந்தனையில் பயம், திகில், குழப்பம், சந்தேகம், எதிர்மறையான சிந்தனைகள் போன்ற களைகள்).

    இவ்வாறு பலவிதங்களில் சாத்தான் தேவபிள்ளைகளை வெட்கப்படுத்து கிறான். அதே வேளையில் நம் அருமை ஆண்டவரும் அவனை வெட்கப்படுத்தி அதனால் நம்மை சந்தோஷப்படுத்த வல்லவராயிருக்கிறார். சாத்தானை கர்த்தர் வெட்கப்படுத்தின ஒரு சந்தர்ப்பத்தினை உங்களுக்கு எழுதுகிறேன்.

    வனாந்தர பாதையில் வெட்கப்படுவதில்லை

    பழைய ஏற்பாட்டில் மோவாபியர் எப்போதும் தேவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிற ஜனமாகும். இந்த மோவாபியருக்கு விரோதமாக ஏதோமின் ராஜா, இஸ்ரவேலின் ராஜா மற்றும் யூதாவின் ராஜா மூவரும் இணைந்து மோவாபியரை மேற்கொள்ளப்போகும் பாதையில் வனாந்தரத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வனாந்தரத்தில் தங்களுக்கும் தங்கள் ராணுவத்திற்கும் தண்ணீரில்லாமல் மிகுந்த கஷ்டத்தின் நடுவே கடந்து போனார்கள்.

    ஆம் தேவனுடைய பிள்ளையே! நீங்களும் தேவனுடைய பிள்ளையாக இருந்தும் ஏதோ வனாந்தர வழியாய் நடந்து வருவது போல உங்களுடைய சூழ்நிலையும், குடும்ப வாழ்க்கையும் தற்போது காணப்படலாம். வனாந்தரம் ஒருவேளை உங்களுக்கு சோர்வை உண்டாக்கியிருக்கலாம். அவிசுவாசமான வார்த்தைகளை நீங்கள் பேசியிருக்கக் கூடும். ஆனாலும் சோர்ந்து போகாமல் அற்புதத்திற்கு வழி என்ன என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

    கர்த்தரைத் தேடினார்கள்

    “அப்பொழுது யோசபாத், நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா? என்று கேட்டதற்கு, எலியாவின் கை களுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான். இஸ்ர வேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்”. II ராஜா.3:11,12

    எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! ‘என் ஜனங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை’ என்று சொன்னவரை தேடுவதற்கு உங்கள் இருதயத்தைத் திருப்புவீர்களா? அன்றைக்கு ராஜாக்கள் தேவனைத் தேடினார்கள். கர்த்தர் ஒரு வழியை உண்டாக்கியது போல நீங்களும் தேடுவீர்களேயானால் உங்களுக்கு ஒரு வழி பிறக்கும்.

    கர்த்தர் சொல்வதை மட்டும் செய்யுங்கள்

    “அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்”. II ராஜா.3:16

    எனக்கன்பான சகோதர, சகோதரியே! ஏதோம் வனாந்தரத்தில் மூன்று ராஜாக் களுக்கும் கர்த்தர் செய்த அற்புதம் மகத்துவமானது. தேவனை தேடும் போது எத்தனை பெரிய வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு ஆண்டவர் அளித்தார் என்பதை கீழ்க்காணும் வசனங்களை வாசியுங்கள்.

    “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள். ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும், உங்கள் மிருக ஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம், மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்”. II ராஜா.3:17,18

    நம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தத்தின் தேவனல்லவா. பொய்யுரையாத நீதியின் தேவனல்லவா. அவர் சொன்னதை கட்டாயம் நிறைவேற்றுவார். ஆனால் அவர் கூறும் அற்புதம் நடைபெற வேண்டுமானால் வனாந்தரமான பள்ளத்தாக்கில் வாய்க்கால் வெட்ட வேண்டியது நம்முடைய வேலையல்லவா? இயற்கையாக வனாந்தரத்தில் ஒருவரும் வாய்க்காலை வெட்டமாட்டார்கள். ஆனால் உலகத்தால் புரிந்து கொள்ள முடியாத காரியங்களில் மகிமையான அற்புதங்களை செய்கிறவர் நம் ஆண்டவர்.

    உங்கள் வாழ்விலும் உங்கள் வனாந்தர பாதையில் விசுவாசத்தோடு கர்த்தர் கூறுகிறதை மட்டும் செய்யுங்கள். அன்றைக்கு வனாந்தரத்தை தண்ணீரால் நிரப்பின கர்த்தர் உங்களுக்கும் அற்புதம் செய்வார். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தண்ணீர் 3 ராஜாக்களுக்கும் அவர்களுடைய ராணுவத்திற்கும் மற்றும் மிருக ஜீவன்களுக்கும் தாகத்தை தீர்த்தது.

    ஆனால் மோவாபியரின் கண்களுக்கோ அந்த தண்ணீரில் சூரியன் பட்டபோது ரத்தமாய் காட்சியளித்தது. இதனால் மூன்று ராஜாக்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்து அதனால் ஏற்பட்ட ரத்தம் என நினைத்து மோவாபியர் இஸ்ரவேலின் பாளையத்திற்குள்ளே வந்தபோது எளிதில் மூன்று ராஜாக்களும் மோவாபியரை முறியடித்தார்கள். தேவ ஜனங்களுக்கு கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கட்டளையிட்டார். சத்துருவை வெட்கப்படுத்தினார்.

    ஆகவே தேவனுடைய பிள்ளையே! நீங்கள் கடந்து வருகிற வனாந்தர பாதையில் கர்த்தர் உங்களோடிருந்து சத்துருவை வெட்கப்படுத்தி உங்களை சந்தோஷப் படுத்துவது அதிக நிச்சயம்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    நாம் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லோருக்காகவும், எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்வோம்”(1தெலோனி5:17)
    நகர்ப்புற நெருக்கடியில் வாழ்ந்த மனிதர் ஒருவர், அமைதியின்றி துன்பப்பட்டு கொண்டிருந்தார். குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது. என்னசெய்வது, யாரிடம் முறையிடுவது எனத்தெரியாது குழம்பிக் கொண்டே இருந்தார். அவரின் பெற்றோர், காட்டில் ஒரு தவமுனிவர் வாழ்கிறார். அவரிடம் சென்று உரையாடினால் உனக்கு தெளிவு கிடைக்கும், என்றார். இம்மனிதரும் முனிவரை சந்தித்து, அவரிடம் சொன்னார். சாமி எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள், என்றார்.

    முனிவர் வேண்டினார். “இறைவா இந்த உலகத்திலுள்ள எல்லாரையும் பாதுகாத்து வழிநடத்து” என்றார். உடனே இம்மனிதர் நான் எனக்காக மட்டும் தானே வேண்டச் சொன்னேன். நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாருக்காகவும் வேண்டுகிறீர்களே, ஏன்? என்றார். உடனே முனிவர் அம்மனிதரை அழைத்து தன் தோட்டத்திலுள்ள ஒரு செடியை சுட்டிக்காட்டி, அதனுடைய இலைக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி வா, என்றார். அம்மனிதர் சொன்னார் 'மரத்தை சுற்றி தண்ணீர் ஊற்றினால் தானே தண்டு வழியாக இலைக்கு வரும்' என்று. உடனே முனிவர் “ஜெபமும் அப்படித்தான்” உலகிற்காக வேண்டினால்தான், அது உனக்கும் கிடைக்கும்.

    மனந்தளராது இறைவனிடம் எப்போதும் மன்றாடுங்கள் என்பதே இன்றைய நாளின் தவக்கால சிந்தனையாகும். உலகத்தை அசைக்கும் ஆற்றல் இறைவனுடைய கைக்கு உண்டு. இறைவனின் கையை அசைக்கும் ஆற்றல் ஜெபத்திற்கு உண்டு. மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டதே இறைவனைப் போற்றி புகழவே ஆகும். உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராது ஜெபிக்க வேண்டும். இதுவே ஜெபத்தின் இன்றியமையாத பண்பாகும். இதனை இயேசுவின் வாழ்வில் தெளிவாக கண்டுகொள்ள முடியும். பகல்முழுவதும் மக்களோடு உடனிருந்து தன்னை முழுதாய் மக்களோடு இணைத்து கொண்டாலும், அதிகாலை நேரம், இரவு நேரம் என கண்டுணர்ந்து ஜெபிப்பதில் அதிக சிரத்தை எடுத்தார். அதன்வழியே உண்மையை கண்டுகொண்டார். நல்லதை விதைத்தார்.

    இனிமையான அனுபவமான இத்தவக்காலத்தில் இறைவனோடு ஜெபத்தில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்போம். ஆலயத்தில், பொது இடங்களில் மட்டுமல்லாது, நமது இல்லத்திலும் ஜெபிப்பதற்கான சூழலை உருவாக்குவோம். துன்பமான நேரங்களில், நெருக்கடியான நேரங்களில் மட்டுமல்லாது எல்லா நேரத்திலும் இறைவனை நோக்கி ஜெபிப்போம். இதற்கும் இறைமகன் இயேசுவே உதாரணம்.

    முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் சிலுவையில் தொங்கும்போது “தந்தையே, கூடுமானால் இத்துன்ப கிண்ணம் என்னை விட்டு அகன்று போகட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படியே நிகழட்டும்” என்றார். இதுவே நமது மாதிரியாக இருக்கட்டும். இறைவனை நோக்கி வேண்டி எல்லா நலன்களையும் நிரம்ப பெறுவோம்.

    நாம் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லோருக்காகவும், எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்வோம்”(1தெலோனி5:17)

    அருட்பணி. குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    புனித மாற்கு எழுதிய நற்செய்திகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் சிறப்புகளை ஆராய்வோம். இப்பகுதி கண்டிப்புடன் கூறுவதாக உள்ளது.
    அக்காலத்தில், இயேசு பிரான் வழக்கம்போல் அனைவருக்கும் போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர், ‘மறை நூல் அறிஞர்கள் குறித்து கவனமாக இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள். வெளியிடங்களில் பலபேர் முன்னிலையில், தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்’.

    ‘தொழுகைக் கூடங்களில், முதன்மையான இருக்கைகளை விரும்புகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும் விரும்புகிறார்கள். கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுமையான தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகக் கூடியவர்கள் இவர்களே’ என்று கூறினார்.

    இதற்குப் பிறகு இயேசு பிரான், காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டார். மக்கள் அப்பெட்டியில் காசு போடுவதை, உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்களில் பலர், மிகுதியாகக் காசு களைப் போட்டனர். அங்கு ஓர் ஏழைக் கைம்பெண் வந்தாள். அதற்கு இணையாக இரண்டு காசுகளைப் போட்டாள்.

    அப்போது அவர் தம்முடைய சீடரை வரவழைத்தார். அவர் அவரைப் பார்த்து, ‘இந்த ஏழைக் கைம்பெண் காணிக்கைப் பெட்டியில், காசு போட்ட மற்ற எல்லோரையும் விட, மிகுதியாகப் போட்டிருக்கிறாள்’ என்றார். ஏனென்றால், ‘அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்தில் இருந்து போட்டனர். இவரோ தனக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன்? தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டாள்’ என்று கூறினார்.

    தர்மம் என்ற பெயரால் இன்று என்னென்ன நடக்கிறது? தானம் என்ற பெயரால், இறைவனுக்கு காணிக்கை எப்படிச் செலுத்தப்படுகிறது? என்பதையெல்லாம் ஒரு கணம் சிந்திப்போம்.

    இப்பகுதியில் மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடு கிறார்.

    ‘கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று வேறோர் இடத்தில் குறிப்பிடுவார். மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் குறிப்பிடுகிறார் என்று கருதி விடக்கூடாது. பொதுவாக அவர்கள் எதை எதை விரும்புகிறார்கள் என்பதை விளக்குகிறார். தொங்கல் ஆடையை அணிந்து கொள்ள விருப்பம் கொள்கிறார்கள். பலர் தங்களை பலபேர் முன்னிலையில் வணங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தொழும்போதும் சரி, விருந்துகளிலும் சரி, எங்கும் முதலிடம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அது மட்டுமா? நீண்ட நேரம், இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்.

    எக்காலத்திலும் இத்தகைய மனிதர்கள் உண்டு. வழிதவறி மக்களை ஏமாற்றுபவர்களும் உண்டு. இயேசு பிரான் இவ்வுலகில் உலவித் திரிந்த காலத்திலேயே, இன்று போல் அன்றும் நடைபெற்று இருக்கிறது. ஆகவே மக்கள் மேல் அன்பு கொள்ளும் ஒருவர், மக்களை நெறிப்படுத்த வந்தவர், எதையும் மறைக்காமல், வெளிப் படையாகப் போதிக்கிறார். அதோடு அவர் நின்று விடவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு, தீர்ப்பில் கடுமையான தண்டனை உண்டு என்று கூறுகிறார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘தவறான வழியில் பொருள் சேர்த்து, அளவுக்கு அதிகமாக இறைவனுக்குக் கொட்டும் செல்வந்தர்களைக் கண்டிக்கிறார். தன் கையில் சேர்த்து வைத்த காசு முழுவதையும், இறைவனுக்குக் காணிக்கையாக்கிய, ஏழைக் கைம்பெண்ணைப் போற்றுகிறார்’. ‘இவளே! எல்லோரையும் விட, மிகுதியாகப் போட்டாள்’ என்கிறார்.

    இந்நற்செய்தியை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம். செல்வந்தர்கள் என்ற போர்வையில் வாழக் கூடியவர்கள் யார் என்பதை, நாம் நன்கு அறிவோம். கொள்ளையடிப்போரும், ஏமாற்றிப் பணம் பறிப்போரும் தான் அதிகமாகச் செல்வம் சேர்த்தவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமா?

    மறை நூல் அறிஞர்களைக் கடுமையாகச் சாடுகிறார். அவர்கள் வெளி வேடக்காரர்களாகத் தங்களை அலங்கரித்துக் கொள் கிறார்கள். இறைவன், வெளிவேடத்தை நோக்குபவர் அல்லர். உள்ளத்தைக் கவனிக்கிறார். ஆகவே, ‘வெளிவேடக்காரரிடம் கவனமாக இருங்கள்’ என்கிறார். அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என்றும், பிறர் எப்படித் தங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், விவரித்துக் கூறுகிறார். எல்லா இடத்திலும் தங்களை அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், நடிக்கிறார்கள் என்று, கடுமையாகக் கூறுகிறார். இவர்களின் கதி என்னவாகும் என்பதை எடுத்துரைக் கிறார். இவர்களுக்குக் கடுமையான தண்டனை தான் கிடைக்கும் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார்.

    அதற்காக காணிக்கைப் பெட்டிக்கு அருகே நடக்கும் நிகழ்வைச் சித்தரிக்கிறார். செல்வம் உள்ளவர்கள் அள்ளி, அள்ளிப் போடுவதையும், ஓர் ஏழைப்பெண், அதிலும் கைம்பெண், தன் உழைப்பால் வந்த பணத்தில் இருந்து, இரண்டு காசுகளைப் போட்டதையும், எடுத்துக்காட்டாகச் சீடர்களுக்குக் காட்டுகிறார்.

    இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாக நாம் கவனிக்க வேண்டும். மக்களை நெறிப்படுத்தவும், அவர்கள் முறையாக வாழவும், அவர்களுக்கான போதனை என்ன என்பதையும் உணர்ந்தே அவர் இவ்விதம் வெளிப்படுத்துகிறார். ஆகவேதான், ‘கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாய் இருங்கள்’ என்கிறார்.

    இயேசு பெருமான் யாரையும் விட்டு வைக்கவில்லை. உண்மையும், நேர்மையும் வலம் வரத்தான் அவரின் போதனை இருந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    கடவுள் படைத்த அனைத்து உயிர்களிடமும் நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம். இந்த தவக்காலத்தில் அதற்கு உறுதி ஏற்போம்.
    தவக்காலம் அருளின் காலம், இறை-மனித உறவுக்கு வித்திடும் காலம். நம்பிக்கையின் காலம். நல்வாழ்விற்கு வழிகாட்டும் காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் அருட்பணியாளர் டாமியன். அவர், ஹவாய் தீவுகளில் ஒன்றான மொலாக்காய் தீவில் வாழ்ந்த தொழுநோயாளிகளிடையே பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவர், “கடவுள் தொழுநோயாளிகளாகிய உங்களிடம் மிகவும் அன்பு செய்கிறார்“ என்று அடிக்கடி கூறுவார்.

    சில வருடங்களுக்கு பிறகு, “கடவுள் தொழுநோயாளிகளாகிய நம்மை மிகவும் அன்பு செய்கிறார்“ என்றார். அதற்கு காரணம், தொழுநோயாளிகளிடையே பணிபுரியும் போது அவருக்கும் தொழுநோய் உண்டானது. இறுதியில் அங்கேயே அவர் இறந்து போனார்.

    கடவுள் அன்பு செய்வது, கண்ணால் காணக்கூடிய நம்மை போன்ற மனிதர்கள் வழியாகத்தான். கடவுளுடைய அன்பின் முழுமை, இயேசு கிறிஸ்து வழியாகத்தான் இந்த உலகிற்கு வெளிப்பட்டது. இயேசு கிறிஸ்து தன் சீடர்களை தேர்ந்தெடுக்கும்போது தகுதி, தராதரம் பார்க்கவில்லை. சாதாரண நிலையில் உள்ளவர்களைத்தான் சீடர்களாக தேர்ந்தெடுத்தார். புதுமைகள் புரியும் போதும், போதனைகள் செய்யும் போதும் அனைவரையும் ஒன்று போல, நிபந்தனையின்றி அன்பு செய்தார். அதன்படியே பணியாற்றினார்.

    அதுபோல அருட்பணியாளர் டாமியனும் தொழுநோயாளிகளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டி பணிபுரிந்து இறந்து போனார். அனைவருக்கும் மீட்பு வழங்க தன்னையே கையளித்து, அதுவும் சிலுவைச்சாவை ஏற்பது தான் சிறந்த வழி என உணர்ந்து, விரும்பி ஏற்று நமக்காக இயேசு இறந்தார். அதற்காக அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    இதுபோன்ற அன்பின் பரிமாற்றம் சாதி, மதம், மொழி, நாடு கடந்து நடக்கும் போது இந்த உலகம் அன்பின், அமைதியின் உலகமாக மாறும். எனவே, கடவுள் படைத்த அனைத்து உயிர்களிடமும் நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம். இந்த தவக்காலத்தில் அதற்கு உறுதி ஏற்போம்.

    டி.செபாஸ்டின், வேதியர், முத்தழகுபட்டி பங்கு.
    புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 8-ம் திருநாளன்று 15 ஏழை ஜோடிகளுக்கு ஆலயத்தில் இலவச கூட்டு திருமணம் நடந்தது.

    9-ம் திருநாளன்று மாலையில் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து இரவில் அன்னையின் தேர்ப்பவனி நடந்தது.

    11-ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தைகள் அந்தோணி ஜெகதீசன் அடிகளார் (கூடுதாழை), சில்வஸ்டர் அடிகளார் (சேர்ந்தபூமங்கலம்), கிளாரன்ஸ் தினேஷ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.

    12-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி, சப்பர பவனி, மாலையில் நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை கிஷோக் அடிகளார், உதவி பங்குதந்தை வினிஸ்டன் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டி தலைவர் செல்வராஜ், துறைமுக கமிட்டி தலைவர் மனோகரன், ஆலய கமிட்டி தலைவர் டெலிகட் லோபோ ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை புனித அருளானந்தர் கல்லூரி ஆங்கில பேராசிரியரும், சேசு சபை குருவுமான ரூபஸ் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடந்தது.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 10-ம் திருநாளான 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 11-ம் திருநாளான 15-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை வில்சன், உதவி பங்குதந்தை ரோசன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
    நாமும் பக்திப்பாதையில் இழப்புகள் நேரிடும்போது, நம்மை நாம் ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
    உலகில் உண்மையான பக்திப்பாதையில் நடப்போரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் இவர்கள் இருக்கும் இடம் உடனடியாகத் தெரிந்துவிடும்.

    பல்வகை அறிவு பெற்றிருந்தாலும் பெருமையின்மை, அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டாலும் பொறுமை, பேதங்கள் பார்க்காமல் உதவும் பண்பு, உள்நோக்கம் இல்லாத செயல்பாடு என்பது போன்ற தனிப்பட்ட நற்குணங்கள் மூலம் மற்றவரால் இயேசுவின் பக்தன் எளிதாக அடையாளம் காணப்பட்டுவிடுவான்.

    இயல்பு வாழ்க்கையில் அனைவரும் கொண்டிருக்கும் எரிச்சல், கோபம், பழிவாங்குதல், பாகுபாடு, பொய் போன்ற இயல்பு குணங்கள் இல்லாததால் அவன் எல்லா தரப்பினரையும் ஈர்த்துவிடுகிறான்.

    பேச்சில், போதனையில், இயேசுவின் நற் குணங்களைப் பற்றி திறமையாக எடுத்துச் சொன்னாலும், உண்மை பக்தி இல்லாதவனால் தனிப்பட்ட நடத்தையில் அந்த குணங்களை வெளிப்படுத்த முடியாது.

    திறமையான பேச்சை நம்பிவிடுவதால், அப்படி போதிப்பவனின் இயல்பு குணத்தின் அடிப் படையிலான நடத்தையை பெரும்பாலானோர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆன்மிகத்திலும்கூட உண்மை பக்தி மறைக்கப்பட்டு, திறமை அடிப்படையில் போதகம் கணக்கிடப்படுகிறது.

    பக்திப் பாதைக்கு வந்துவிட்டால்கூட அதனால் ஏற்படும் உற்சாகத்தையும், அனலையும் காலப்போக்கில் சிலர் இழந்து, உலக நெருக்கடியால் மீண்டும் இயல்பு குணங்களின்படி செயல்படத் தொடங்கிவிடுகின்றனர். இது மிகப்பெரிய இழப்பாகும். இது, இலவசமாக கிடைத்த பங்களாவை பராமரிக்காமல் பழுதடைய விட்டுவிட்டு மீண்டும் குடிசை வீட்டை நோக்கிச் செல்வதைப் போன்றதாகும்.

    எனவே இதை உண்மை பக்தர்கள் உணர்ந்து, ஒருமுறை பெற்ற பக்தியை இழந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    தீர்க்கதரிசி எலியாவை மகாபஞ்சம் உண்டாயிருந்த சாறிபாத் என்ற நகரத்துக்கு போவதற்கு இறைவன் கட்டளையிட்டார். அங்கு உணவு கொடுத்து பராமரிப்பதற்காக விதவைக்கு ஏற்கனவே கட்டளையிட்டுவிட்டதாக இறைவன் சொன்னார். இதற்கு குடும்பப் பெண்ணை இறைவன் தேர்வு செய்யவில்லை. அந்த விதவையிடம் இறைவன் நேரடியாக பேசியதாக வேதம் கூறவில்லை. ஆனால் இறைபக்தனை நம்பும் வகையில் அவளது இதயத்தை இறைவன் பக்குவப் படுத்தி இருப்பார்.

    சாறிபாத்தில் எலியா அவளை அடையாளம் கண்டு எளிதாக தரக்கூடிய தண்ணீரை கேட்டார். விதவை நிலையில் ஒரு ஆணுக்கு தண்ணீர் கொடுப்பது கடினமானதுதான், என்றாலும் இறைவனால் பக்குவப்படுத்தப்பட்ட இதயம் அவளை தடை செய்யவில்லை. இறைசித்தத்தை நோக்கிய முதல் அடியாக, தண்ணீர் எடுக்கச் சென்றபோது எலியா அடுத்த கட்டளையாக, உணவு கொடு என்றார். அவருக்கு உணவு கொடுக்கவும் அவள் மறுக்கவில்லை.

    ஆனால் இருக்கும் சிறிதளவு மாவு, தனக்கும் தனது மகனுக்குமே போதுமானதல்ல என்கிறபோது இன்னொருவருக்கு எப்படி தர முடியும் என்பது அவளது கேள்வியாக இருந்தது.

    இப்போது எலியாவை தனது வீட்டில் ஏற்பதற்கு அவளிடம் ஒரு அதிசயத்தை இறைவன் நடத்தியாக வேண்டும். உண்மையான பக்திப்பாதைக்குள் நுழையும்போது எல்லாருமே அற்புதத்தை அனுபவித்திருப்பார்கள். விடவே முடியாதபடி அடிமைப்படுத்தி இருந்த சரீர ரீதியான பாவங்களை முழுவதுமாக மறந்துபோயிருப்பது, பாவங்கள் மீது ஏற்படும் மிகப்பெரிய வெறுப்பு போன்ற இயற்கையை மீறிய அனுபவங்களை அனுபவித்திருக்க முடியும். இப்படிப்பட்ட அற்புத அதிசயங்களே, அந்த பக்தனை இறைவனை நோக்கி ஓடச் செய்யும் கிரியாஊக்கியாக இருக்கின்றன.

    உணவை தர முடியாத நிலையில் இருந்த விதவையிடம் ஒரு கட்டளை வைக்கப்படு கிறது. அப்பம் தயாரித்தால் அதிக மாவு ஆகக்கூடும் என்பதால் சிறிய அடையை செய்து, முதலில் எனக்குக் கொடுத்துவிட்டு பின்னர் நீங்கள் பசியாறுங்கள். அப்போது மாவும், எண்ணெயும் பஞ்ச காலம் முடியும்வரை பாத்திரத்தில் இருந்து வந்துகொண்டே இருக்கும் என்று எலியா கூறினார். எலியா கூறிய இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்தாள்.

    குறைவுபட்ட மாவைப் பற்றிய முணு முணுப்பை விட்டுவிட்டு, இறைநீதியை நிறைவேற்றும் விதமாய் அடை செய்ய மாவை எடுத்தபோது அற்புதம் நிகழ்ந்தது.

    நமது வாழ்க்கையிலும் பல குறைவுகள் உள்ளன. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வாழ்க்கை முழுவதும் இறைநீதியின் அடிப் படையில் நடந்துகொள்வதற்கு முடிவு செய்து, அதன்படி நடக்கத் தொடங்கினால், ஆத்ம தேவைகள், வாழ்க்கைத் தேவைகள் என எல்லாவற்றையுமே இறைவன் அதிசயமாய் தரத்தொடங்கிவிடுகிறார்.

    ஆனால் புறந்தள்ளப்பட வேண்டிய குறைபாடுகளை முன்னிருத்திக்கொண்டு, பலர் அதை நீக்குவதற்காக யாரையெல்லாமோ தேடித்தேடி அலைகின்றனர். இறைப்பணியாளர்களிடம் போய் அற்புதங்களுக்காக ஜெபிக்கின்றனர். ஆனால் குறைவுகள் தீராமலும் அற்புதங்களை அடையாமலும் போய்விடுகின்றனர்.

    இறைநீதியின் பாதையில் நம்மை முதலில் சரியாய் திருப்பிக்கொண்டுவிட்டால், அதிசயங்களுக்காக மற்றவர்களிடம் போய் நிற்கத் தேவையில்லை. இறைநீதிபற்றி தெரிந்த பிறகு அதற்கேற்றபடி திருப்பிக் கொள்ளாமல், எவரிடம் போய் நின்றாலும் அதிசயம் நடக்கப்போவதில்லை.

    அள்ள அள்ளக் குறையாத மாவையும், எண்ணெயையும் பஞ்சகாலத்தில் விற்றிருந்தால் அவள் பணக்காரி ஆகியிருக்கலாம். அதை அவள் செய்யவில்லை. அற்புதமாகக் கிடைத்துள்ள தாலந்துகளை, உண்மையான ஆன்மிக போதனை இல்லாத பஞ்சம் உள்ள இந்த காலத்தில் பணத்துக்காக விற்காமல், அதை இறைவனின் சித்தத்தின்படி பயன் படுத்த வேண்டும்.

    விதவையின் வாழ்க்கை அதிசயத்துடன் போய்க்கொண்டிருந்த நிலையில் மகன் வியாதியால் செத்துப்போனான். இறைசித்தத்தின்படி பக்தனை பராமரிக்கும் ஊழியத்தில் உள்ள விதவைக்கு, சகிக்கமுடியாத இழப்பை ஏன் இறைவன் அனுமதிக்க வேண்டும்? ஏன் இப்படி நடந்தது என்று அவள் எலியாவைக் கேட்க, ஏன் அப்படி செய்தீர் என்று இறைவனை எலியா கேட்க, அங்கு அமைதி குலைந்தது.

    பக்திக்கு வந்து அற்புதங்களை கண்ட பிறகும், அனைத்து காரியங்களிலும் இறை நீதியை வெளிப்படுத்தாமல் இயல்பான குணங்களின்படி செயல்படுவது அக்கிரம செய்கையாகும்.

    ‘அதை உணர்ந்து அந்த விதவை புலம்பு கிறாள்’ (1 ராஜா.17:18).

    (அவள் எந்த சம்பவத்திலோ இறைச்சொல்லை உண்மை என்று நம்பாமல் மீறியிருக்கிறாள் என்பதை 24-ம் வசனத்துடன் ஒப்பிட்டு அறியலாம்).

    ஆக, அவளது அக்கிரமத்தை நினைவு படுத்தவும், இறைவனின் அற்புத செய்கையை மீண்டும் அவளுக்கு நினைவு படுத்தி, பக்திப்பாதையில் தன்னை திருத்திக்கொள்வதற்கும் அங்கு மகனின் சாவு அனுமதிக்கப்படுகிறது.

    தன் அக்கிரமத்தை உணர்ந்ததால், மகனை எலியா உயிருடன் எழுப்பும் அளவுக்கு பெரிய அற்புதமும் இறைவனால் நிகழ்த்தப்படுகிறது. அதன் பின்னரே, இறைவன் சொல்வதே உண்மை என்பதை 100 சதவீதம் நம்புகிறேன் என்று கூறினாள் (24-ம் வசனம்). எனவே நாமும் பக்திப்பாதையில் இழப்புகள் நேரிடும்போது, நம்மை நாம் ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
    மும்பை அண்டாப்ஹில் விஜய் நகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    மும்பை அண்டாப்ஹில் விஜய் நகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    பின்னர் வருகிற 14-ந்தேதி வரை விழா நாட்களில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 15-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    ×