search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித பவுல்"

    ஆண்டவரின் இந்த மீட்பின் மறையுண்மையை ஏற்றுக் கொள்வது நம்முள் குடியிருக்கும் ஆவிக்குரிய இயல்புதான். எனவே நமது ஆவிக்குரிய இயல்பு. அதாவது உள் மனிதன் வல்லமை பெற வேண்டுமெனத் தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
    லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேடடுக் கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப் பார்த்து உரத்த குரலில், நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும் என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார் (திப 14 8 – 10).

    திருத்தூதர் பவுல் வழியாக நடந்த ஓர் அற்புதம் தான் இது. பவுல் நற்செய்தி அறிவித்த போது கால் ஊனமுற்றவர் அதைக் கேட்க முன்வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும்.

    திருத்தூதர் பவுல் அவருடைய வெளிப்படையான உடல் ஊனத்தை மட்டுமல்ல, கண்ணுக்குப் புலப்படாத உள் மனிதனின் ஊனத்தையும் கண்டார். உள் மனிதன் விசுவாசத்தால் நிறைந்த போது பவுல் அவருக்குக் கட்டளையிட்டார். உள் மனிதன் வெளிப்படையான மனிதனுக்குக் க ட்டளை கொடுத்தான். வெளிப்படையான மனிதன் நலம் பெற்று எழுந்து நடந்தான்.

    மனிதரில் இருவித இயல்புகள் இருப்பதாகத் திருவிவிலியம் கற்பிக்கின்றது. 1. ஆவிக்குரிய இயல்பு. 2. ஊனியல்பின் இயல்பு (உரோ 7 : 18 – 23; 8 : 1 – 14). ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆவிக்குரிய மனிதன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது நோய் நீங்குகின்றது.

    ஊனியல்புக்குரிய மனிதன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால்தான் நோய் குணமாகாமல் போகின்றது. முழுமனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே (நீமொ 3 : 5)

    நோய் நீங்க வாய்ப்பே இல்லாமல் சாவின் வாயிலில் நின்ற ஒரு பெண்ணின் அனுபவம் இது. அவருக்குக் குடலில் புற்றுநோய் வந்தது. இனி எதுவும் செய்ய முடியாது என்று நவீன மருத்துவம்கூட கைவிட்டது. அதிகபட்சம் 180 நாள்தான் உயிரோ இருப்பார் என்றது. அப்பெண் ஒரு காகிதத்தில் 1 முதல் 180 வரை எழுதி ஒவ்வொரு நாளும் எண்களை ஒவ்வொன்றாக வெட்டி வாழ் நாட்கள் குறைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அவர் கணவருக்கு ஒரு சாதாரண வேலைதான் இருந்தது. பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தனர். அவருடைய கணவரும் பிள்ளைகளும் போய்விட்டால் அவர் தனிமையில் கண்ணீர் சிந்துவார்.

    அவ்வாறு அழுது கொண்டிருந்த போது ஒரு நாள் அவருக்கு பைபிள் வாசிக்க வேண்டும் என்ற அகத் தூண்டுதல் ஏற்பட பைபிளை எடுத்து திறந்தார். அப்போது அவருக்குப் பின்வரும் மறைவாக்கு கிடைத்து: சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார்; நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்.

    அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் (1 பேது 2 : 24) இம்மறைவாக்கை அவர் மீண்டும் மீண்டும் வாசித்தார். ஒவ்வொரு முறை வாசித்த போதும் அவரது நம்பிக்கை ஆழமானதாயிற்று.

    இயேசுவின் துன்பங்களாலும் சிலுவைச் சாவாலும் தான் நலமடைந்ததாக அவர் நம்பினார் அவருடைய மனதில் அதற்கு முன் ஒருபோதும் அவர் அனுபவத்திராத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்தன.

    அன்று மாலை அவருடைய கணவர் வீடு திரும்பிய போது அவர் தமது மனைவி அவரை வரவேற்க வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டார். என்னே அதிசயம் தம்மைக் காண வந்தவர்களிடம் அவர் தமக்குக் கிடைத்த மறைவாக்கையும், அதைத் திரும்பத் திரும்ப வாசித்ததால் நலம் பெறறதை வர்ணிப்பதையும் அவருடைய கணவர் கண்டார்.

    ஆனால் உண்மையில் அவருக்குப் புற்று நோய் இருந்தது. அவரோ நோய் குணமாயிற்று என்று நம்பினார். அதனால் அவரது ஆரோக்கிய நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தமது வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினார். பின்னர் செய்து கொண்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்குப் புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று மருத்துவ நிபுணர் ஆச்சரியத்தோடு அறிவித்தார்.

    ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). புற்று நோயாளியான அவர் இறைவார்த்தையை நம்பினார். அறிவுக்கு அப்பாற்பட்ட இறை வல்லமையை ஏற்றுக் கொண்டார். அதனால் நோய் நீங்கப் பெற்றார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

    எவராவது இந்த மலையைப் பார்த்து, பெயர்ந்து கடலில் வழு எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால் அவர் சொன்ன வாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும் (மாற் 11 : 23 – 24). இயலாதவற்றையும் சாத்தியமாக்க இறைவன் தந்த அருட்கொடைதான் நம்பிக்கை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? (யோவா 11 : 40) ஐம்புலன்கள் அறிந்திராத மீட்பு மறை உண்மை அருளப்பட்டுள்ளது.

    இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளுர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் அவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர் (உரோ 10 : 9 – 10).

    ஆண்டவரின் இந்த மீட்பின் மறையுண்மையை ஏற்றுக் கொள்வது நம்முள் குடியிருக்கும் ஆவிக்குரிய இயல்புதான். எனவே நமது ஆவிக்குரிய இயல்பு. அதாவது உள் மனிதன் வல்லமை பெற வேண்டுமெனத் தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
    ×