என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ரஜினி

    இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற நவம்பர் 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக "தர்பார்" திரைக்கு வருகிறது.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம் 58’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வெளியிட்டுள்ளார்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இர்பான் பதானின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், விக்ரம் 58 படம் குறித்த முக்கிய அப்டேட்டை இர்பான் பதான் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: ”வணக்கம் மக்களே. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதற்கட்ட படப்பிடிப்பு நல்லபடியா முடிந்தது. மீண்டும் எல்லாரையும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
    ‘மண்டி’ ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்கம்-நாடார் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

    ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மண்டி’ விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர். 

    இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி சீதாலட்சுமி, துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ், காளிபாண்டியன், மண்டலத் தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், செந்தில் முருகன், எம்.பி. ரமேஷ், கோயம்பேடு ஜி.டி.ராஜசேகர், சீனிபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்

    அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

    முற்றுகை போராட்டத்தின் போது கொளத்தூர் ரவி கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும்.

    மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனது கேரியரில் அந்தப் படத்தில் நடித்தது தான், நான் செய்த மிகப்பெரிய தவறு என நயன்தாரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது. சமீபத்தில் பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா கூறியதாவது, ’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, ஹீரோயின் அசினுக்கு இணையான வேடம் என கூறப்பட்டது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அசின், சூர்யா, நயன்தாரா


    நயன்தாராவின் இந்த பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜினி படத்தை இயக்கிய முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா காற்று மாசு பற்றி பேசியதற்கு, புகை பிடிக்கும் நீங்கள் அதைப்பற்றி பேசக்கூடாது என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
    புதுடெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

    டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக முகமூடியுடன் செல்பி ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ’காற்று மாசால் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக உள்ளது. இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

    நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என அறிவுரை கூறியிருந்தார்.

    பிரியங்கா சோப்ரா

    இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் புகை பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காற்று மாசு குறித்து உங்களை போன்ற இரட்டை நிலைப்பாடு உடையோர் பேசக்கூடாது என்றும் கூறிவருகின்றனர். காற்று மாசை பற்றி பேசுவதற்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது குடும்பத்துடன் உட்காந்து அவர் புகைப்பிடித்த போட்டோக்கள் வைரலானது. அப்போதே அவர்மீது விமர்சனங்கள் பாய்ந்தன.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை மீரா மிதுன் மீது, ஓட்டல் ஊழியரை மிரட்டியதாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீரா மிதுன், கடந்த 3-ந்தேதி எழும்பூரில் உள்ள ‘ரேடிகன் புளு’ ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது சென்னை போலீசார் பற்றி மீரா மிதுன் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த போட்டியின் போது ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மீராமிதுன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் பற்றி மீரா மிதுன் பேட்டி அளித்த போது ஓட்டல் ஊழியரான அருண் என்பவர் தட்டிக் கேட்டதாகவும் அப்போது மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி எழும்பூர் போலீசில் அருண் புகார் அளித்தார்.

    மீராமிதுன்

    இதையடுத்து மீரா மிதுன் மீது அவதூராக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எழும்பூர் போலீசில் ஏற்கனவே மீரா மிதுன் மீது இதேபோன்று மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
    கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
    தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள் இருக்கும். இதுவே இவரது வெற்றியின் ரகசியம் என்று கூறப்படுகிறது. 

    இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் நீண்ட நாட்களாக சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஒருநாள் ஒருவருடைய செல்போனில் செல்பி புள்ள என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்திருக்கிறது.

    சிறுவன் செபாஸ்டியன் - விஜய்

    இந்த ரிங்டோனை கேட்டதும், சிறுவனின் உடலில் சிறிது அசைவுகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், தொடர்ந்து விஜய்யின் பஞ்ச் வசனங்கள், நடனம், பாடல்கள் ஆகியவற்றை காட்டி வந்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் பாடல்களை கேட்டு சிறுவன் நடக்க ஆரம்பித்திருக்கிறான்.

    தற்போது மெதுவாக குணமடைந்து வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தன் மகன், விஜய் படங்கள் மூலம் குணமடைந்திருப்பது, மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
    மனுஷா தயாரிப்பில் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம்.
    75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். 

    தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வளர்த்து தயாராகி உள்ளார். 

    கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.

    ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார். 
    துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஷாலுக்கு புது ஜோடியை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
    விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது.

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.

    விஷால் - ஆஷியா

    விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது. தற்போது மும்பையை சேர்ந்த ஆஷியா கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். இந்த படத்தில் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

    இளையராஜா இசையமைக்கிறார். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பிரிஸ்டோல் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளனர். 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் - சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.

    ஆக்‌ஷன் படத்தின் போஸ்டர்

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் என்று விஷால் அறிவித்திருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் ‘தளபதி 64’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    பிகில் படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
    மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்கும் ‘ஜூவாலை’ திரைப்படம் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. 

    இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். ரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். 

    ஜூவாலை

    தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வைத்து தயாராகி உள்ளார். 

    மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார். 
    ×