என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தில் மாஸ்டர் பட நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    மாரி செல்வராஜ் உடன் கவுரி கிஷன்

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்திருந்த கவுரி கிஷன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

    ராதிகா, சரத்குமார்

    நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபல படகர் சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். 
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட நாட்களாக வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். 

    இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மலையாள தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இதில் தீர்வு கண்டது. இருப்பினும் அவர் 2 மலையாள படத்தில் நடித்த பிறகு தான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    சர்ஜனோ கலித், ஷேன் நிகம்

    இதனிடையே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த கதாபாத்திரத்தில் சர்ஜனோ கலித் எனும் இளம் நடிகர் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 
    ராஜா கஜினி இயக்கத்தில் ரோஷன் உதயகுமார், கோமலி, எரா, ரவிஷங்கர், பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் உற்றான் படத்தின் விமர்சனம்.
    ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரையும் பிரியங்கா தனது மகன்கள் போல பாதுகாத்து வளர்க்கிறார். 

    எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் நாயகன், கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெறுகிறார். இதனால் ஏற்படும் பகையில், ரோஷனுக்கு எதிரிகள் முளைக்கிறார்கள். ஊர் பெரிய மனிதராக வரும் வேல.ராமமூர்த்திக்கு ரோஷனை பிடிக்காமல் போகிறது. அந்த பகுதியில் பெரிய ஆளாக வலம் வரும் ரவிஷங்கர் ரோஷனை பாதுகாக்கிறார். 

    உற்றான் படக்குழு

    இதற்கிடையே ரோஷன் படிக்கும் கல்லூரியை இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றுகிறார்கள். அங்கு படிக்க வரும் நாயகி கோமலி மீது ரோஷன் காதல் வயப்படுகிறார். கோமலியின் தந்தை மதுசூதனன் இதனை எதிர்க்கிறார். இந்த பகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரோஷனை துரத்துகிறது. அதை நாயகன் எவ்வாறு சமாளிக்கிறார். அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

    நாயகன் ரோஷன் உதயகுமார் தமிழுக்கு நல்ல அறிமுகம். டான்ஸ், சண்டை, காதல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அறிமுக படத்திலேயே நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். நாயகி கோமலி அழகு பதுமையுடன் இருக்கிறார். கல்லூரி மாணவி வேடத்திற்கு அழகாக பொருந்தி இருக்கிறார். 

    உற்றான் படக்குழு

    ரோஷனின் நண்பர்களாக வரும் கானா சுதாகர், கோதண்டம், மதுமிதா உள்ளிட்டோரும் வில்லன்களாக வரும் வேல.ராமமூர்த்தி, மதுசூதனன், காதல் சரவணன் உள்ளிட்டோரும் நேர்த்தியாக நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு உதவும் கதாபாத்திரத்தில் ரவிஷங்கர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் பிரியங்காவும் கண்களாலேயே தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

    கல்லூரியை களமாக வைத்து காதலால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ராஜா கஜினி சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக படத்தை கொண்டு போனவர், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படம் வேகம் எடுக்கிறது. 

    உற்றான் படக்குழு

    என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் வரும் கல்லூரி பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘உற்றான்’ கல்லூரி அரசியல்.
    ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் விரைவில் பங்கேற்க இருக்கிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.

    இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர். இதனிடையே கமல்ஹாசனுக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்த கமல்ஹாசன், தற்போது பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகி உள்ளார். 

    கமல்ஹாசன்

    பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொடர்ச்சியாக 35 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். பிரியா பவானி சங்கரும் இதில் பங்கேற்று நடிக்கிறார். இந்தியன் படத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. 
    அசோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாயநதி’ படத்தின் விமர்சனம்.
    சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகி வெண்பா, தந்தை ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் வெண்பா. பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் நாயகன் அபி சரவணன். இந்நிலையில், காதல் பிரச்சனையில் ஒருவர் வெண்பா மீது ஆசிட் வீச வருகிறார். இதிலிருந்து வெண்பாவை அபி சரவணன் காப்பாற்ற, இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. 

    மாயநதி படக்குழு

    இந்த காதல் வெண்பாவின் படிப்பிற்கு தடையாக அமைகிறது. பல காதல் தோல்விகளை சந்தித்த அபி சரவணன் இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்பதற்காக வெண்பாவை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இறுதியில் வெண்பாவின் டாக்டர் கனவு நிறைவேறியதா? அபி சரவணன், வெண்பா இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இவர்களின் காதல் விஷயம் வெண்பாவின் தந்தை ஆடுகளம் நரேனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வெண்பா

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், ஹீரோவாக இருந்தாலும் நாயகியின் வாழ்க்கைக்கு வில்லனாக அமைந்திருக்கிறார். ஆட்டோ டிரைவராக நடிப்பில் கவனிக்க வைக்கிறார். படத்திற்கு பெரிய பலம் நாயகி வெண்பாவின் நடிப்பு. முழு கதையையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். அபி சரவணனின் காதல், அப்பாவின் பாசம், டாக்டராக வேண்டும் என்ற கனவு என நடிப்பில் பளிச்சிடுகிறார். 

    அபி சரவணனின் நண்பராக வரும் அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள்.

    மாயநதி படக்குழு

    மருத்துவரான அசோக் தியாகராஜன், சினிமா மீது உள்ள காதலால் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    பவதாரிணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாயநதி’ தெளிந்த நீரோட்டம்.
    சமுத்திரகனி இயக்கியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாக இருந்த ‘நாடோடிகள்-2’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். 

    இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பிரவீண்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், படத் தயாரிப்பாளர் நந்தகுமார், தனக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்பதால் படத்தின் உரிமை தனக்கே சொந்தம் என அறிவிப்பதுடன், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரப்பட்டு இருந்தது. 

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த மனுவை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். பின்னர், ‘நாடோடிகள்-2 திரைப்படத்தை வெளியிட நிபந்தனைகளுடன் இடைக்கால தடை விதிக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

    அதேநேரம், மனுதாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய ரூ.1.75 கோடியை 2 வாரத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
    தமிழில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், அடுத்ததாக பேண்டசி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    வெற்றி, விஷ்ணு விஷால், கோபிநாத்

    இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இயக்குனர் கோபிநாத் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இது ஒரு கலகலப்பான பேண்டசி திரைப்படம் என்றும், இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பேசுவதை கேட்டு கண் கலங்கி இருக்கிறாராம்.
    முன்னணி நடிகராக வலம் வந்த விரல் வித்தை நடிகர், பல வம்புகளால் பிரச்சனையில் சிக்கினாராம். அவர் திறமையான நடிகர் தான், அவர் மட்டும் தொழிலில் அக்கறை காட்டினால், சில முன்னணி கதாநாயகர்களுக்கு சரியான போட்டியாக இருப்பார்” என்று பெரும்பாலான டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கூறுகிறார்களாம்.

    இதை கேள்விப்பட்ட நடிகர் மனம் வருந்தி கண்கலங்கினாராம்! இனிமேலாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகர்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை அடுத்து நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

    காஜல் அகர்வால் - துல்கர் சல்மான்

    நடன இயக்குனராக பல படங்களுக்கு பணியாற்றி வரும் பிருந்தா இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். 
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், பொதுவாகவே நடித்தவர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் எப்போதும் மிகப்பெரிய அளவில் அவர்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள். ஆனால் அதையெல்லாம் போலி என விமர்சனம் செய்துள்ளார் நடிகை அமலா பால். 

    அமலாபால்

    அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது, ‘விருது விழாக்கள் என்றாலே போலி. மற்றவர்கள் நம்மை பற்றி பேசுவதும் கூட போலியாகவே தெரியும்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
    ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டமான படத்தில் 15 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் புதிய சேர்க்கையாக நடிகை ஸ்ரேயா சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். 

    அஜய் தேவகன் - ஸ்ரேயா

    படத்தில் வில்லனாக நடிக்கும் அஜய் தேவகன் ஜோடியாக நடிக்க ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் 2005ல் வெளிவந்த 'சத்ரபதி' என்ற படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.
    ×