என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய கமல் மீது காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார். 

     அதில் 'எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள்.' என எழுதி இருந்தார்.

     இதனை விமர்சித்து பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.

     பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.
    கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். 

    எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, பலர் உதவி செய்து வருகிறார்கள்.

    தற்போது நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.  மேலும் பிரதமர் நிவாரண நிதி ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதி ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
    தமிழில் பல படங்களுக்கு இசை அமைத்து வரும் சத்யா கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கி உள்ளார்.
    நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2,  இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

    'விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு...'  இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார். 

    சத்யா தற்போது எழில் இயக்கியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்', சுந்தர்.சி இயக்கும் 'அரண்மனை -3', 'ராங்கி' உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
    நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு கொரோனா தொடர்பான பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து டுவீட்களை வெளியிட்டு வந்தார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவருடைய ட்விட்டர் தளத்தில் எந்தவொரு டுவீட்டுமே வெளியாகவில்லை. தற்போது தனது டுவிட்டர் கணக்கின் நிலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது என டுவிட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியது. மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று முறை எனது கணக்குக்குள் நுழைய முயன்றுள்ளனர். கடந்த 48 மணிநேரங்களாக என்னால் என் கணக்குக்குள் லாக் இன் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை. 

    குஷ்பு

    டுவிட்டர் தரப்பிலிருந்து உரிய உதவி கிடைக்கவில்லை. எனது கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். நன்றி. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்”. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
    நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜபீமா திரைப்படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    ஆரவ்

    ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டி நெகிழ வைத்துள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்கள், கையுறை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பை வழங்கி உதவியுள்ளனர்.

    நிவாரண பொருட்கள்

    இதேபோல் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரமும் வழங்கி உள்ளனர். மக்கள் நலன் காக்க உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

    டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.

    ராஷி கன்னா


    இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ் மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல் அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.
    சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘புல்லட்’ பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் ‘புல்லட்’ பிரகாஷ். இவருக்கு வயது 44. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஒரு மாதமாக துபாயில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அவர், பெங்களூரு கன்னிகாம் சாலையில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் ‘புல்லட்’ பிரகாசின் உடல்நிலை நேற்று மோசமானது. செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் மரணம் அடைந்தார்.  சிறுநீரக கோளாறு மற்றும் கணையம் உள்பட உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் மரணம் அடைந்ததாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.

    அவர் எப்போதும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்தார். அதனால் அவர் புல்லட் பிரகாஷ் என்று அழைக்கப்பட்டார். துருவா, அதிலக்கடி, ஆர்யண் உள்பட சுமார் 325 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் ‘சாந்தி கிராந்தி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு 1998-ம் ஆண்டு அதே ரவிச்சந்திரனின் பிரித்சோது தப்பா என்ற படத்தில் நடித்து பிரபலமானார். 

    புல்லட் பிரகாஷ்

    தமிழில் நடிகர் சுதீப் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு கைதி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், தர்ஷன், உபேந்திரா ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

    குண்டான உடல் தோற்றத்துடன் காணப்பட்ட ‘புல்லட்’ பிரகாஷ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்தார். அதன்பிறகு அவருடைய உடல் நிலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. இதன்காரணமாக ‘புல்லட்’ பிரகாஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.
    விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியிடப்படுமா என்பது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இதனால் கோப்ரா படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.

    விக்ரம்

    இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் விக்ரம் ரசிகர் ஒருவர், கோப்ரா டீசர் விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியாகுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், கொரோனா ஊரடங்கால் டீசரை தற்போது வெளியிட முடியாது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறினார். 
    இலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளரின் மகளை அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட இந்தி படங்களை தயாரித்தவர் கரீம் மோரானி. இவரது மகள்கள் ஷாஜா, சோயா. இதில் ஷாஜா சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்து உள்ளார். இதேபோல சோயா ராஜஸ்தானுக்கு சென்று திரும்பி உள்ளார். இந்தநிலையில் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து திரும்பியதால் 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஷாஜாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

    கரீம் மோரானி, ஷாஜா

    இதுகுறித்து தயாரிப்பாளர் கரீம் மோரானி கூறுகையில், “சோயாவுக்கு தான் கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால் எந்த அறிகுறியும் இல்லாத ஷாஜாவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஷாஜா கடந்த மாதம் முதல் வாரம் இலங்கையில் இருந்து வந்தார். சோயா மார்ச் 15-ந் தேதி ராஜஸ்தானில் இருந்து மும்பை வந்தார் . இவ்வாறு அவர் கூறினார்.

    பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், பிளீஸ் உதவி செய்யுங்கள் என பிரபல நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது. 

    இதுவரை ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம், கார்த்தி ரூ.2 லட்சம், நகைச்சுவை நடிகர் சூரி ரூ.1 லட்சம், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம், பொன்வண்ணன், சாய்பிரதீப் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம், சங்கீதா ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளனர். பூச்சி முருகன், கோவை சரளா, சத்யபிரியா, ரோகிணி, லதா, சச்சு, நாகிநீடு, பிரபா ரமேஷ், சேலம் பார்த்திபன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது.

    இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:  "நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
    ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் காலமானார்.
    பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. கேரளாவில் பிறந்த அர்ஜுனன் பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தார். அங்கு இசை கற்றுக்கொண்டார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் ஜி.தேவராஜிடம் உதவியாளராக சேர்ந்தார். அவர் இசையமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்துள்ளார்.

    1968-ல் கறுத்த பவுர்ணமி என்ற மலையாள படத்தின் மூலம் அர்ஜுனன் இசையமைப்பாளராக அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். 500-க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்கள் இவரது இசையில் வெளிவந்துள்ளன. கேரளாவில் இன்றைக்கும் அவரது பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன. ஏராளமான மேடை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். 

    எம்.கே.அர்ஜுனன்

    2017-ம் ஆண்டு பயானகம் என்ற படத்துக்காக கேரள அரசிடம் விருது பெற்றார். ஏ.ஆர்.ரகுமானின் தந்தை இவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் கீ-போர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    ×