என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா என்பது கடவுள் நமக்கு வச்ச பரீட்சை, அதில் அனைவரும் பாஸ் ஆயிடுங்க என நடிகர் வடிவேலு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருப்பதாவது: “என்னமோ நடக்குது இங்கே. கடவுள் இறங்கி விட்டான். எல்லோரையும் சோதிக்கிறான். இந்த சோதனையில் நமக்கு பரீட்சை வைத்து இருக்கிறான். இதில் எல்லோரும் பாசாகி விட வேண்டும். போலீசார் வேண்டுமென்று யாரையும் அடிக்கவில்லை. அடித்தால் வீட்டில் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். எங்கே போகிறாய் என்று கேட்கும்போது சரியான காரணம் சொன்னால் வெளியே விடுகிறார்கள். 

    நம்மை காப்பாற்றத்தான் அடிக்கிறார்கள். உங்களை வீட்டில் உட்கார வைத்து நாங்கள் உயிரையெல்லாம் பணயம் வைத்து தெருவில் நிற்கிறோம் என்று அந்த போலீசெல்லாம் சேர்ந்து நமக்கு உதவி செய்கிறார்கள். கலவரம் நடந்தால்தானே தடியடி நடக்கும். இப்போது உயிரை காப்பாற்ற தடியடி நடத்த வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. ரெண்டு தட்டு தட்டினால்தான் போவான். கவனமாக இருங்கள், கடவுளை கும்பிடுங்கள். இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.

    கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்‌ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.

    தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது. நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.

    அக்‌ஷய்குமார்

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்‌ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
    சூர்யாவுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் தயாரித்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களில் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள் செயல்பட சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    இதன்முலம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகும் முதல் தமிழ் படம் அதுவாக தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்னே வேறு ஒரு படம் ரிலீசாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்' படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
    அன்பை விதைப்போம் என்ற பெயரில் நேற்று நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என டுவிட் செய்துள்ளார்.
    சென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார் சூர்யா.

    அந்த அறிக்கையில், 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது, 'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். 

    இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 'மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். 

    சூர்யாவின் அறிக்கை

    கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது, அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். 

    தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு 'சிறப்பு' என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், இந்த லாக்டவுன் காலத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துவிட்டார். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் சன்னி லியோன், வெப் தொடரிலும் நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சன்னி லியோன், இந்த லாக்டவுன் காலத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.

    அவர் ஓவியராக அவதாரம் எடுத்துள்ளார். தான் வரைந்த முதல் ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், அந்த ஓவியத்திற்கு 'உடைந்த கண்ணாடி' என பெயர் வைத்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க 40 நாட்கள் எடுத்துக்கொண்டதாக சன்னி லியோன் அதில் குறிப்பிட்டுள்ளார். இவர் ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
    கொரோனாவால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    ‘கொரோனா’ மற்றும் ஊரடங்கு பற்றியும், ஜோதிகா பேச்சு பற்றியும் நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:- கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக செயல்பட்டவர்கள், ஊடக துறையினர். தங்கள் உயிரை பணயம் வைத்து, செய்திகளை சேகரித்து கொண்டுவந்து மக்களிடம் சேர்க்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. அணுசக்தி போரை விட, செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

    ஊரடங்கு உத்தரவினால் நிறைய பேருக்கு நன்மைகளும் நடந்துள்ளன. குடும்பத்தினருடன் பலர் மகிழ்ச்சியுடன் இருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள். என்னைப்போல் சிலரை உடற்பயிற்சி செய்ய தூண்டி இருக்கிறது. நிறைய பேர் வாழ்க்கையில் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பார்த்திபன்

    வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு ஆஸ்பத்திரிகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. இதற்கிடையில், ஜோதிகா பேச்சு ஏற்படுத்திய பரபரப்புக்குப்பின், தஞ்சை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட கலெக்டர் வந்து பார்வையிட்டு இருக்கிறார். எங்களைப் போன்ற பிரபலங்கள் செய்கிற உதவிகளை விட, பொதுமக்கள் செய்யும் உதவிகள் பாராட்டுக்குரியது. மனிதம் வளர்ப்போம். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
    இந்த ஊரடங்கு நேரத்தில் பெண்கள் பலரும் கொடுமைகளை அனுபவித்து வருவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
    நடிகை வரலட்சுமி பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கு பல துன்புறுத்தல் ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவை நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.

    இது பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் குடும்ப கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து தப்பிக்க முடியாமல் வீட்டில் மாட்டி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உதவி எண் உள்ளது.

    1800 102 7282 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த நம்பரை கொடுத்து உதவி செய்யுங்கள். 

    இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர், படிக்காதவர் என்பது பார்த்து வரக் கூடிய விஷயமல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தப் பெண்களுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உடனடியாக இந்த எண்ணை அனைவருக்கும் பகிருங்கள் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு ஆதரவாக விஜே ரம்யா கருத்து தெரிவித்து இருக்கிறார்.
    அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது.

    இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இதனால் இணையத்தில் படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் மன்னிப்பும் கோரியிருந்தார். இது தொடர்பாக ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கருடன் நடித்த விஜே ரம்யா தனது ட்விட்டர் பதிவில், ‘துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது. அவரைப் பல நாட்களாகத் தெரியும் என்பதால் என்னால் கண்டிப்பாக இதைச் சொல்ல முடியும். நாம் (இப்படிப் பேசுவதை விட) மென்மையானவர்கள். தயவு செய்து தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். ரம்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துல்கர் சல்மான், ‘மிக்க நன்றி அன்பே அனன்யா.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வி‌ஷயத்தினால் தான் இது என்னை அதிகமாகப் பாதிக்கிறது என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இறுதியாக ரம்யா, ‘நீங்கள் செய்யாத தவறுக்கு குற்றம் சுமத்தப் படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது ஆதி. இதுவும் கடந்து போகும். பொறுமையாக இருங்கள்’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தின் 3 ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிரபாஸ் நன்றி தெரிவித்து உள்ளார்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.

    பாகுபலி 2 வெளியாகி 3 வருடங்களை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர். இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிரபாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபாஸ்
    அதில் 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட.  மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.  மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு  வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து  மகிழ்கிறேன் என்றார்.
    பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உயர்தர சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

    கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்ஃபான் கான் பார்த்தார்.

    இந்நிலையில், திடீரென இர்ஃபான் கான் உடல்நலத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது மீண்டும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சர்ச்சையில் சிக்கியிருக்கும் துல்கர் சல்மான் படத்திற்கு இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பிற்குரிய துல்கர் சல்மான் &  அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான  #VaraneAvashyamund " எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு "பிரபாகரன்" என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,

    அதென்ன  கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று., உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!

    "பிரபாகரன்" என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள்  தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருந்தால்- நாங்களும்  "கேரளத்து காந்தி" என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட "மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்" பின் பெயரையும் "வக்கம் மௌலாவி" யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட  வேண்டிய சூழல் ஏற்படும்., யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,

    நடிகர் பிரசன்னா., சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., "தலைவர்" பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்..,  என்று கூறியுள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி உடற்பயிற்சி செய்ய யோசனை சொல்லியுள்ளார்.
    தமிழில் மரகத நாணயம், சார்லி சாப்ளின் 2, கடவுள் இருக்கிறான் குமாரு, யாகாவராயினும் நாகாக்க, மொட்ட சிவா கெட்ட சிவா உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி.

    இவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய, ஓர் சுலபமான வழியை கூறுகிறார். “வீட்டின் மாடிப்படிகளில், ஏறி இறங்குங்கள், நேரம் போகும் என்பதோடு, உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும் “ என்று கூறியுள்ளார்.
    ×