என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா, தளபதி விஜய் தான் தன்னுடைய பேவரைட் நடிகர் என தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், நடிகை ராசி கண்ணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய பேவரைட் தமிழ் நடிகர் யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், தளபதி விஜய் சார் என தெரிவித்தார். மேலும் தனக்கு பிடித்த ஹீரோயின் சமந்தா என்றும் ராசி கண்ணா கூறினார். 

    கதைத்திருட்டு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ திரைப்படம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். 

    ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
    இந்நிலையில் இப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூடவே, 
    “களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல்,” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.
    சினிமா டப்பிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு ‘பெப்சி’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய 50 நாட்களை கடக்க இருக்கிறோம். 

    இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரொனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள். தற்போது 17 தொழில்துறைக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதை போல் திரைப்பட துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனையோடு அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஆர்.கே.செல்வமணி

    குறைந்த பட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் செய்ய வைக்க முடியும் என்பதையும் தெரிவித்து இதற்கான அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என்றும் உறுதி அளிக்கின்றோம்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    கொரோனாவால் சினிமா துறையில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய, நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் வற்புறுத்தி உள்ளார்.
    கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேரள முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் குமார் வற்புறுத்தினார்.

    இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தையும், நடிகர் வெங்கடேசின் அண்ணனுமான பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் தெலுங்கு பட உலகில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பல நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன. அதுபோல் தெலுங்கு சினிமாவிலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படும்” என்றார்.

    தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, பிரபாஸ், ராணா, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
    தமிழ் மற்றும் மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா தனது காதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
    தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்தவர் மேக்னா வின்செண்ட். இந்த படத்தில் ஆனந்தி, சந்திரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

    மலையாள நடிகையான இவர் டான் டோமி என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அதற்கு பெற்றோர்களும் சம்மதித்தனர். மேக்னாவின் சகோதரி டிம்பிள் ரோசும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அவருக்கும் ஆன்சன் என்பவருக்கும் திருமணம் முடிவானது. 

    டாம் டோமி, மேக்னா

    இதையடுத்து சகோதரிகள் மேக்னா, டிம்பிள் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் ஒரே நாளில் நடந்தது. டிம்பிள் திருமணத்தை 2016-ம் ஆண்டும், மேக்னா திருமணத்தை 2017-ம் ஆண்டும் நடத்தினர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மேக்னாவுக்கும் கணவர் டான் டோமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

    இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்தனர். தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாம் டோமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
    ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
    சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 

    ராசி கண்ணா

    இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ராசி கண்ணா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அடுத்ததாக நடிக்கும் படங்கள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராசி கண்ணா, அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என கூறினார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் தமன்னா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
    தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் தமன்னா வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், அவரைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது பரவி வருகிறது. அந்தவகையில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின. அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    தமன்னா

    இருப்பினும் இது வெறும் வதந்தி என தமன்னா தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. துபாயில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமன்னாவும், அப்துல் ரசாக்கும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
    ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
    அருண்விஜய்யின் 30 வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

    பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். 
    மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் ரிலீசாக உள்ளது. இப்படத்தையடுத்து விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகம் என சொல்லப்படுகிறது.

    மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

    காஜல் அகர்வால்

    இந்நிலையில், காஜல் தமிழ் படம் ஒன்றிற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது விஜய்யின் 65-வது படத்திற்காக தான் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்கு பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கொரோனா ஊரடங்கால் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிக்கும் ஏழை நோயாளிகளுக்கு நடிகர் ஒருவர் தேடிச்சென்று உதவி செய்து வருகின்றனர்.
    கொரோனா. இந்த வார்த்தையை கேட்டாலே உலக நாடுகளும் மிரண்டு கிடக்கின்றன. இந்தியாவில் இதன் வேகம் அதிகமாக இருப்பதால் மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் டைகந்த் தலைமையில் ரைடர்ஸ் குடியரசு மோட்டார் கிளப் சார்பில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரைகளை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.

    நேற்று இந்த குழுவினர், கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மருந்து வழங்கினர். ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இந்த குழுவினர் ஏழை நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களின் சேவையை பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் பீமா சங்கர் குலீத் பாராட்டினார். இதில் நடிகர் டைகந்தின் மனைவியும், நடிகையுமான அந்திர்தா ராய், ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஆஸ்கார் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்தாண்டு ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் தான் ஆஸ்காருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. 

    ஆஸ்கார் விருது

    இந்நிலையில், கொரோனா காரணமாக அந்த விதியில் ஆஸ்கார் கமிட்டி தற்காலிக மாற்றம் செய்துள்ளது. அதன்படி நேரடியாக இணையதளங்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்காருக்கு அனுப்பலாம். ஆனால் அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்ட படங்களாக இருக்க வேண்டும். நேரடியாக இணையதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்த படங்களாக இருக்க கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது. 

    இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது தான் என்றும், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு  ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக சாலையோர வியாபாரிகள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். மக்களின் நடமாட்டத்தால் வாழ்க்கை நடத்துபவர்களில், செருப்பு தைக்கும் தொழிலாளர்களும் அடங்குவர். 

    சாலையில் செல்வோரின் காலணிகளை பார்த்தே நாட்களை கடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், தற்போது ஊரடங்கு காரணமாக மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதே உண்மை. செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஊரடங்கு காரணமாக தேய்ந்து போயிருக்கிறது.

    செருப்பு தைக்கும் தொழிலாளருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

    இந்நிலையில், காஞ்சிபுரம்  மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில், வருமானம் இன்றி தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 
    ×