என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.
    இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனா ஊரடங்கினால் தவிக்கும் மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகிறார். இணையதள இசை நிகழ்ச்சியில் பங்கேற்றும் நிதி திரட்டினார். இந்த நிலையில் இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்கிறோம். நமக்கு நேரம் கிடைத்துள்ளது. நிறைய பேய்ப்படங்கள் பார்த்து இருப்போம். இந்த நேரத்தில் நம்மால் வேடிக்கையாக பயமுறுத்தும் வகையில், ஒரு உள்ளரங்கு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் பேய்ப்பட போட்டியை அறிவிக்கிறேன். 

    இந்த பேய்ப்படத்தை எடுக்க எந்தவிதமான கேமராவையும் பயன்படுத்தலாம். பயமுறுத்துவதற்கு எந்த பொருளையும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த பொருள் வீட்டில் இருக்க வேண்டும். தனிநபர் படமாகவோ அல்லது சமூக இடைவெளியுடன் பலர் இடம்பெறும் படமாகவோ இருக்கலாம். படத்தை வருகிற 18-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
    பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் இருப்பதாக நடிகை பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
    பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகாரில் இந்தி பட உலகம் அதிர்ந்தது. ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்களையும், இயக்குனர்களையும் சந்திக்கு இழுத்தார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் மீ டூவில் சிக்கினர்.

    தற்போது நடிகை காஷ்மிரா ஷாவும், மீ டூ அனுபவங்களை தெரிவித்துள்ளார். இவர் தமிழில் ஷாம் நடித்த ‘அகம் புறம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். எஸ் பாஸ், சிட்டி ஆப் கோல்ட், ஜங்கிள், சாஸிஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். 

    காஷ்மிரா ஷா

    அவர் கூறியதாவது: “பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால் நான் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டேன். எனது குழந்தைகள் வளர்ந்து அம்மா நல்லவர் என்று பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எனது திறமையை நம்பி வாய்ப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றி”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்த லாரன்ஸ், அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது. 

    நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். நான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.
    மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்க, ஒரே போன் காலில் விஜய் - அனிருத்திடம் லாரன்ஸ் சம்மதம் வாங்கி உள்ளார்.
    மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார்.

    இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், "அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து 'மாஸ்டர்' படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்" என்று  தெரிவித்திருந்தார்.

     விஜய்,  அனிருத், தான்சேன்

    இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார். 

    அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி" என தெரிவித்துள்ளார்.
    விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் முன்னோட்டம்.
    அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்து வரும் புதிய படம் ‘திட்டம் இரண்டு.’ திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும் படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் டைரக்டு செய்கிறார். 

    ‘திட்டம் இரண்டு’ படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது: “ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.”
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
    இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். 

    இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அதிதி ராவ், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். 
    நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி, சமையல், இசை, நடனம், ஒர்க் அவுட் தொடர்பான வீடியோ, படக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகை அதிதிராவும் அதை செய்து வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வழக்கமாக உடற்பயிற்சி படங்களை வெளியிடும் அதிதி ராவ் இந்த வீடியோவில், வேகமாக வந்து நின்று காலைத் தூக்கி கைகளை தொடுகிறார். இது களறி பயிற்சியாம். தனது உடற்பயிற்சியில் ஒரு பகுதியாக, களறியில் செய்யும் பயிற்சியை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
    47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன.

    இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன், ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

    இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .

    சித்தாரா

    இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார். 

    மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான் நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு நிகழ்வுகளை மையப்படுத்தி, வீட்டில் இருந்தபடியே ஐபோனில் குறும்படம் ஒன்றை சுகாசினி மணிரத்னம் இயக்கி உள்ளார்.
    25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா என்கிற படத்தை இயக்கிய நடிகை சுகாசினி, இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். சின்னஞ்சிறு கிளியே என்கிற இந்த குறும்படத்தில் மலையாள நடிகை ஆகானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன் ஆகியோருடன் தானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஹாசினி.

    எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியோ லைட்டிங் வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் சுகாசினி. ஊரடங்கு சமயத்து நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.
    தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. 

    இதனிடையே, இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத்தே இயக்க உள்ளார்.

    ஓ மை கடவுளே படக்குழு

    அடுத்தபடியாக  'ஓ மை கடவுளே' படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது, "நான் தற்போது 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் பணிகளை செய்து  வருகிறேன். மேலும், இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது. இவை இரண்டும் தவிர்த்து தமிழில் அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
    சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அப்படத்தின் இயக்குனர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தான். புதுமுயற்சியாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். இதனிடையே, ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவின.

    இந்நிலையில், இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "தமிழ் திரைப்படங்கள் சரியாக மதிப்பிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. இன்னமும் ஓடிடி தளங்களுக்கு கோலிவுட் என்றால் என்ன என்று புரியவில்லை. 'சர்வர் சுந்தரம்' படம் தியேட்டரில் தான் வெளியாகும்" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    31 வயதே ஆன இளம் இயக்குனர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மலையாளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் கோழிபோரு. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்த பின் இதை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஜிபித் ஜார்ஜ் திடீரென மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்த ஜிபித்துக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

    பின்னர் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த ஜிபித்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31. இளம் இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்திருப்பது மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ×