என் மலர்
சினிமா செய்திகள்
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.
அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:
* சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.
* பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.
* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.
* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.
* படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.
* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
* அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.
* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஜோதிகா சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க, யாரும் என்னை அணுகவில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கும் இப்படத்திற்கு 'செல்பி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 19ம் தேதி முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து கடந்த வாரம் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமலின் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. கேரளாவில் லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் தமிழில் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதல் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இவரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் டயல் செய்த எண் என பெயரிடப்பட்டுள்ள அந்த 12 நிமிட குறும்படத்தை பார்க்கும் போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு - திரிஷா இடையே நடக்கும் செல்போன் உரையாடல்களை "கொஞ்சம் விழிப்புணர்வு... நிறைய காதலுடன்" கொடுத்துள்ளார் கவுதம் மேனன்.
குறிப்பாக இந்த குறும்படத்தின் வசனங்கள் மனமுருக வைக்கின்றன. சிம்பு கூட இந்த வசனங்களை படித்துவிட்டு கண்கலங்கியதாக சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இதற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டே இருக்கும்படி, குறும்படத்தை அழகாக உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன்.
கார்த்திக் டயல் செய்த எண்..
— Gauthamvasudevmenon (@menongautham) May 20, 2020
Karthik dial seytha yenn...https://t.co/ghbjdS9n3g
So very thankful to the names involved in this effort and especially amidst these testing times.
There’s hope, there is love and there’s a beautiful future. Love to all!
பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்ததாக நடிகர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக ஏற்கனவே நிறைய புகார்கள் வந்துள்ளன. தற்போது சின்னத்திரை நடிகர் ஒருவரிடமும் இதே பாணியில் மோசடி நடந்துள்ளது. அவரது பெயர் ஆன்ஸ் அரோரா. இவர் தன் ஹையான் உள்பட பல இந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள லோகண்ட் வாலா பகுதியில் தங்கி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அவரை சுருதி என்ற பெண் அணுகி, பிரபுதேவா - சல்மான்கான் கூட்டணியில் உருவாகும் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்யும் ஏஜெண்டாக பணியாற்றுவதாகவும், அந்த படத்தில் வில்லனாக நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் பிரபுதேவாவை நீங்கள் நேரில் சந்திக்க வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆன்ஸ் அரோரா உற்சாகமடைந்துள்ளார். ஆனால் சல்மான்கான் தரப்பில் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகை தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இதற்காக ஏஜெண்டை யாரும் நியமிக்கவில்லை என்றும் அறிக்கை வெளியானது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆன்ஸ் அரோரா மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தார். தற்போது அவர் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரிக்கிறார். போனிகபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். போனிகபூரின் இல்லம் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. போனிகபூருக்கும் நோய் பரவி இருக்கலாம் என்று தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்து போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வீட்டு பணியாளருக்கு கொரோனா உறுதியானது உண்மைதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கும், மகள்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை. நலமாக இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்”.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே முதல் ஆளாக நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில் 'காட்டேரி', 'பாம்பன்', 'சேஸிங்', 'டேனி', 'பிறந்தாள் பராசக்தி' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'க்ராக்' மற்றும் கன்னடத்தில் 'ரணம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.
வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத் திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத் திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி சின்கா ஓவியம் மூலம் நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையான சோனாக்சி சின்கா தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து இருந்தார். சோனாக்சி சின்கா ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர். அவரது ஓவியங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இது குறித்து சோனாக்ஷி சின்கா கூறியுள்ளதாவது: ''நான் என்னுடைய நண்பர்களை மிஸ் செய்கிறேன். ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். வீட்டில் இருப்பது எனக்குச் சவாலானதாக இருக்கவில்லை. ஏனெனில் என் அன்புக்குரியவர்களோடு வீட்டில் இருக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும்.
வெளியே தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு, குடும்பத்தை விட்டு, சாப்பிட ஏதுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சவாலானது. நான் அவர்களுக்காக வருந்துகிறேன், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். இந்த ஊரடங்கின் மூலம் நான் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். அதன் மூலம் பெரிய அளவில் உதவி செய்ய விரும்புகிறேன். எனவே என்னுடைய ஓவியங்களின் மூலம் நிதி திரட்ட தீர்மானித்துள்ளேன்''. இவ்வாறு சோனாக்சி கூறியுள்ளார்.






