என் மலர்
சினிமா செய்திகள்
இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை:
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்றும் கூறியிருந்தார்.
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதினார்.
அந்த கடிதம் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தனது முடிவை அறிவித்தது. தன்னளவில் சரியாக நடந்து கொள்வதாக கூறும் சூர்யா போன்றவர்கள், நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது.
நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, 10 கிராமங்களை காப்பாற்றி இருப்பதால் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது.
கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறி இருப்பவர் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
பிரபல குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா கிரண். இவர் பாண்டியன் ஸ்டோர் நடிகை சுஜிதாவின் சகோதரர். கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கல்யாணியை இவர் திருமணம் செய்திருந்தார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க. நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பக்கம் செல்ல இருக்கிறார்.
சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாக இருக்கிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் கூறிய கிராமத்து கதை ஒன்று சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய ’கோவில்’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷாலு ஷம்மு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

ரசிகர்களை தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார் ஷாலு ஷம்மு.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் நள்ளிரவில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது.

இவர் இயக்கிவந்த துப்பறிவாளன் 2 திரைப்படம் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார்.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பாக சிம்பு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்.அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நோ என்ட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘நோ என்ட்ரி’. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சினிமா கற்ற ஆர்.அழகு கார்த்திக் இயக்கியிருக்கிறார். ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் முதன் முதலாக படமாக்கப்பட்ட தமிழ்படம் இதுதானாம். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஆபத்தான மலைப்பிரதேச காட்சிகளையும், அதிக மழை பெய்யும் காட்சிகளையும் சிரபுஞ்சியில், 45 நாட்கள் முகாமிட்டு படமாக்கி உள்ளனர்.

மனித நடமாட்டம் இல்லாத மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில், ஒரு இளம் தம்பதிகள் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 வெறிநாய்களிடம் அந்த தம்பதிகள் சிக்கிக் கொள்கிறார்கள். நர வேட்டையாடும் நாய்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் இழந்தார்களா? என்பதை திகிலுடன் சொல்லும் கதைதான், ‘நோ என்ட்ரி’. படத்துக்காக 15 ஜெர்மன் செப்பர்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளனர்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிவ்மோகா, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக நெய்வேலியில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதுதான், விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது.
இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு விஜய் அழைத்து வரப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
தினந்தோறும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடிவந்த நிலையில், வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதை அறிந்த விஜய் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி கூட்டமாக நின்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
இந்த செல்பி விஜய்யின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டதும் வைரலானது. ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் இந்த செல்பியை பகிர்ந்தார்கள்.
இந்நிலையில், விஜய்யின் இந்த செல்பி புகைப்படம் டுவிட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்திய அளவில் அதிகம் பேர் ரீ-டுவிட் செய்த டுவிட் இதுதானாம்.
இதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் வெளியிட்ட டுவிட் தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது அதைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வெளியிட்ட டுவிட் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தி அன்று சைலன்ஸ் வெளியாக் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அதே தினத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் சூர்யாவுக்கு சில அறிவுரைகளையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது. அவை,
பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை.
நீதி மன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்க கூடாது.
விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது.
நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது. கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட்டு 42,233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
சுந்தர் சி-யின் அடுத்த படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகி பாபு, அஸ்வின், வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ருதி மராத்தே, ரித்திகாசென், மாஸ்டர் சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக சன் டி.வி.யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் இதனை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சன் நிறுவனத்தின் இந்தத் திட்டம், திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளம் நடிகர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள டி.வி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். இவர் அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது சபரிநாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன நடிகர் சபரிநாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சபரிநாத்தின் திடீர் மறைவு மலையாள சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






