என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நேற்றைய ஐபிஎல் போட்டியில் மோசமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதர் ஜாதவ்வை பிரபல தமிழ் நடிகர் கிண்டல் செய்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய சென்னை அணி 10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. 

    சென்னை அணி எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் 21 பந்துகளில் 39 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் கேதர் ஜாதவ் களமிறங்கினார். 20 ஓவர் போட்டியில் இந்த ரன்களை அடிப்பது மிக எளிது என்றே கருதப்பட்டது. ஆனால் கேதர் ஜாதவின் ஆமை வேக ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை தழுவியது. 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

    சதீஷ்

    கேதர் ஜாதவ்வின் ஆட்டத்தை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் போட்டு நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ், கேதார் ஜாதவ்வை கிண்டலடித்து பதிவிட்டுள்ளதாவது “ரொம்ப நன்றி ஜாதவ், நல்லா வருவீங்க. பிளீஸ் தோனி.... அணிக்கு 10 பேர் கூடபோதும்” என பதிவிட்டுள்ளார். நடிகர் சதீஷின் இந்த இரண்டு டுவிட்டுகளுக்கும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
    பிரபல நடிகையாக இருக்கும் இலியானா தீவில் தனியாக இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

     தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.

    இலியானா

    இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

    இலியானா

    இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தீவில் தனியாக இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    மாஸ்டர் படத்தில் விஜய்

    இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தமன்னாவை நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
    கொரோனா பாதிப்பு குறித்து தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  “படப்பிடிப்பு தளத்தில் நானும் என்னுடைய குழுவும் மிகக் கவனமாக இருந்தும் கூட, ஒரு வாரத்துக்கு முன்பு நான் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். தேவையான பரிசோதனைகளை செய்தபிறகு எனக்கு கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. 

    எனவே ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் என்னை நானே அனுமதித்துக்கொண்டேன். மருத்துவர்களின் உதவியுடன் இப்போது குணமடைந்து வீடு திரும்பியிருந்தாலும், சில காலத்துக்கு என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க முடிவெடுத்திருக்கிறேன். கடுமையான காலத்தை கடந்து வந்தாலும் இப்போது நல்லபடியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

    காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா

     என்னுடைய நலனில் எப்போதும் அக்கறை கொண்ட நல்ல உள்ளத்தினர் அனைவருக்கும் எனது அன்பினை அனுப்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். 

    கொரோனாவுடன் போராடி வெளியே வந்துவிட்ட தமன்னாவுக்கு காஜல் அகர்வால், சமந்தா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி முன்பு போலவே கம்பீரத்துடன் சினிமாவுக்குத் திரும்பி வருமாறு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் பட பிரச்சனைக்கு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 8.29 கோடி (ரூ.8,29,57,468) ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி ரவீந்திரன் உடன் உறுதி அளித்து விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார். 

    ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதனால் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    விஷால்

    வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்சன் திரைப்பட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.8.29 கோடிக்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும். எந்த வகையில் உத்திரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்து அக்டோபர் 9 ம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு விட்டார். மேலும் வழக்கை அக்டோபர் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகர் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார்.

    டொவினோ தாமஸ் தற்போது ‘கால’ (Kala) என்ற படத்தில் நடித்து வருகிறார். வி.எஸ்.ரோஹித் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸூக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டொவினோ தாமஸ்

    டொவினோ தாமஸின் வயிற்றின் உட்பகுதியில் நுரையீரல் அருகே ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

     இதையறிந்த பலர், டொவினோ தாமஸ் நலம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    ஆதிராஜன் இயக்கத்தில் வி.ராஜா, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
    ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘அருவா சண்ட.’ சமூக புரட்சியை கருவாக கொண்ட கதையம்சம் உள்ள படம், இது. வி.ராஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். ‘அருவா சண்ட’ படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். 

    ‘அருவா சண்ட’ படம் குறித்து அவர் கூறியதாவது: “என்னைப் போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இதுபோன்ற படங்கள் அமைவது, மிகவும் அரிது. சமீபகாலத்தில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம், இதுதான். விஜய்சேதுபதியுடன், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன். 

    ‘டப்பிங்’ பேசும்போது என்னை அறியாமலே கண்கலங்கினேன். அப்படி ஒரு ‘கிளைமாக்ஸ்’ காட்சி, படத்தில் இருக்கிறது. படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக-கதைநாயகனாக நடித்துள்ள வி.ராஜா, மேலும் பல சமூக சிந்தனைகளை கொண்ட படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்” என்றார்.
    ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி பாதி முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கும் முடிவில் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. பிற நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்கள்.

    இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. படப்பிடிப்பில் அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பணியாற்ற வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    ரஜினிகாந்த்

    தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளனர். இதுபோன்ற காரணங்களாலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட அண்ணாத்த படத்தில் நடிக்கும் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பாதுகாப்பை கருதியும் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
    தனக்கு திருமணமானதாக திடீரென பதிவிட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார்.
    விஜய்சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. அந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அதன் பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து கவனம் பெற்றார். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சீனு ராமசாமி, சில தினங்களுக்கு முன்னர் தனக்கு திருமணம் நடந்ததாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், சீனுராமசாமி இவ்வாறு பதிவிட்டது ஏன் என பலரும்  ஆச்சர்யத்துடன் கேட்க அதுகுறித்து அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

    அவர் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்” என்று கூறி திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    அக்டோபர் 30-ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

    காஜல் அகர்வாலின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள்

    இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக நடிகை மதுபாலா ஆவேசமாக பேசி உள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.

    இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பல துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஜென்டில்மேன் பட நடிகை மதுபாலா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் மக்கள் எதிர்மறை தாக்கத்தை கூட சாதமாக எதிர்கொண்டு வாழப்பழகியதை பற்றி சில நிமிடங்கள் பேசிய அவர், பின்னர் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ளார், அவர்களை சட்டம் இயற்றும் இடத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.

    அதில்  “சமீப காலமாக நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் கடும் வேதனை அடைய வைக்கிறது. இது மனிதன் மனிதனுக்கு எதிராக நடத்தும் யுத்தம் ஆகும். அவர்களால் எப்படி இது போன்ற கொடும் செயல்களை செய்ய முடிகிறது என தெரியவில்லை. பெண்களை பலாத்காரம் செய்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும். அதை தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் காண்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 

    இனி யாரும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட கூடாது. பொது இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் தொடும்போதும், பார்க்கும் போதும் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை யாருக்கும் தெரியாது. எனவே, இதுபோன்ற கொடுமைகளை தடுக்க கடும் சட்டம் நமது நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று நடிகை மதுபாலா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

    சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்களுக்காக தன் சொந்த செலவில் மொபைல் டவர் அமைத்துக்கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார்.
    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 


    குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம். 

    சோனு சூட், மரத்தின் மீது அமர்ந்து பாடம் கற்கும் சிறுமி

    இந்நிலையில், ஹரியானாவில் உள்ள மோர்னி என்கிற கிராமத்தில், மொபைல் சிக்னல் கிடைக்காமல், மரத்தின் மீது உட்கார்ந்து அந்தக் கிராமத்துச் சிறுமி ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த சோனு சூட், மாணவர்கள் சிரமமின்றி ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க, அந்த கிராமத்தில் மொபைல் டவர் ஒன்றை அமைத்துக்கொடுத்து உதவி உள்ளார்.  

    அண்மையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×