என் மலர்
சினிமா செய்திகள்
பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த லாவண்யா, விளம்பரத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார்.
சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன், சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கச் சம்மதித்தார்.

லாவண்யா சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். தவிரத் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபடுகிறார்.

சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, அதற்காக பெரிய தொகை சம்பளம் தருவதாகத் தெரிவித்தனர். ஆனால் அதை லாவண்யா ஏற்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். காரணம் மதுபானம் என்பதால் மறுத்து விட்டாராம்.
நான்கு இயக்குனர்கள் இயக்கி இருக்கும் பாவ கதைகள் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான "பாவ கதைகள்" டீசரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.

"பாவக்கதைகள்" காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் ஆர் எஸ்விபி மூவிஸ் (RSVP Movies) நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் ஃபிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின் மெண்ட் (Flying Unicorn Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

சுதா கொங்கரா ஷான் கருப்பசாமி கதை எழுத சுதா கொங்கரா இயக்கி உள்ள கதையில் நடிகர்கள் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெய ராம், சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார்கள்.
விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ள படத்தில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் நடித்துள்ளனர். வெற்றி மாறன் எழுதி இயக்கி உள்ள படத்தில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி உள்ள படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் , சிம்ரன் நடித்துள்ளனர்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல ஹீரோ ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், சிவகார்த்திகேயன் எனப் பிரபல ஹீரோக்களுடன் தமிழில் நடித்து வந்தார்,. தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வந்தார்.

இவர் தமிழில் பெண்குயின் படத்தில் நடித்தார். அப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது. பிறகு தெலுங்கில் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடி தளத்தில் வெளியானது.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்த படி குட்டி தூக்கம் போட்டார். அதைக் கவனித்த ஹீரோ நிதின். இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் சத்தமில்லாமல் அவர் அருகே சென்றனர்.

கீர்த்தியை டீஸ் செய்வதற்காகக் கண்களில் துணியை வைத்துக் கொண்டு தூங்கிய நிலையில் கீர்த்தி இருக்கும்போது செல்ஃபி படம் எடுத்து வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் சிறப்பு நாளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது.
மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இதில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார். படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் அரசு அனுமதியை ஏற்று தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. கொரோனா பயம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. இதைத்தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
டிவி சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை கெளசல்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா.


மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் கௌசல்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார்.
முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.

அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்த சிலம்பரசன், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட மஃப்டி படத்தின் ரீமேக்கில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்க இருப்பதாகவும் இதில் சிலம்பரசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை படம் மூலம் அறிமுகமானவர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் 'கன்னிராசி'. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.
இந்நிலையில், 'கன்னிராசி' திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை மீடியா டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் 'மீடியா டைம்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னிராசி' திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் பிரபல நடிகரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டார்.

சிகிச்சைகளுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக ஐதராபாத்திற்கு வந்து தங்கியுள்ளார் சஞ்சய் தத். அவர் தங்கியுள்ள அதே ஹோட்டலில் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்காக கங்கனா ரனாவத்தும் தங்கியுள்ளார்.
சஞ்சய் தத் தான் தங்கியுள்ள ஹோட்டலிலேயே தங்கியிருப்பது தெரிந்ததும், அவரைச் சென்று சந்தித்திருக்கிறார் கங்கனா. இந்த சந்திப்பு குறித்து கங்கனா கூறும்போது, “இருவரும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும் இன்று காலை சஞ்சு சாரைச் சென்று சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன். அவர் இன்னும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி நடிப்பில் உருவாகி இருக்கும் சிவ சிவா படத்தின் முன்னோட்டம்.
நடிகர் ஜெய் நடிக்கும் 30-வது படத்துக்கு, ‘சிவ சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகிய 3 பேர்களும் பாடல்களை எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருப்பவர், சுசீந்திரன்.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்தில் ஜெய்யும், தெலுங்கு படத்தில் ஆதியும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
தகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.
இந்தி பட உலகில் நிலவும் போதை பொருள் விவகாரம், வாரிசு அரசியல் போன்றவற்றை விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கங்கனாவின் ரசிகர்கள் டாப்சியை விமர்சித்தனர்.

இந்த நிலையில் டாப்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர், நீங்கள் தகுதி இல்லாத நடிகை, சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டி பதிவிட்டு இருந்தார். இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவை டாப்சி ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, என்னை தகுதியாக்க என்ன செய்ய வேண்டும்.
நான் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைத்தான். உங்கள் கருத்தை இன்னும் நான்கைந்து முறை பகிருங்கள். அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ் ரவி, ரவீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் விமர்சனம்.
நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் ரவினா இரவில் நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை தேடி செல்கிறார்கள்.
அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ், சுரேஷ், ரவினாவை மறித்து விசாரிக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீசை எதிர்த்து பேசுவதால் கோபமடையும் மைம் கோபி, சுரேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் சுரேஷ், இதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, நிறைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார். போலீஸிடம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏற்ற முகம், ஆனால், கோபம் செட்டாக வில்லை.
நாயகியாக நடித்திருக்கும் ரவினா யதார்த்தமான நடிப்பு. கணவர் மீது பாசம், கோபம், அக்கறை, பரிதாபம், ஏக்கம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். சுரேஷ், ரவினா இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பல இடங்களில் பரிதாபப் பட வைத்திருக்கிறார் ரவினா.

போலீஸ் அதிகாரியாக வரும் மைம் கோபி, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
போலீசை ஒருவர் எதிர்த்து பேசினால், என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.எம். கதாபாத்திரங்கள் தேர்வு, மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆனால், இப்படம் அதற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் திரைக்கதையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். அனைத்து போலீசும் கெட்டவர்கள் இல்லை, நல்ல மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பிளஸ். முதல் பாதியின் நீளம் மைனஸ்.
ஆதித்யா, சூர்யா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ கவர்கிறான்.






