என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    "இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

    தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.

    அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

    அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.

    பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

    அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.

    ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.

    டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.

    எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.

    (எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)

    அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.

    பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,

    7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.

    சிவாஜி  சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.

    எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.

    நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.

    எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!

    எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.

    "இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச்      சொன்னேன்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
    சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தை வாழ்த்தி புகழ்ந்தும் கூறினார்கள். 

    சூர்யா - சமந்தா

    இந்நிலையில் பிரபல நடிகையான சமந்தா, இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப்போற்று என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் கூறி இருக்கிறார்.
    முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம் மீண்டும் ஏ 1 படத்தின் கூட்டணியில் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கியிருந்தார்.

    தற்போது இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'பாரிஸ் ஜெயராஜ்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

    சந்தானம்

    இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். 'ஏ1' படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
    தனுஷ் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இப்படங்களை அடுத்து துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

    ஜிவி பிரகாஷின் பதிவு

    அதில் D43 படத்தின் மூன்று பாடல்களை முடித்து விட்டதாகவும், நான்காவது பாடலை உருவாக்கி வருவதாகும் ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார். இது தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். 
    பிரபல நடிகர் சிவகுமார் பற்றி வெளியான செய்திக்கு செல்பி எடுத்து தற்போது விளக்கமளித்திருக்கிறார்.
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

    இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா வந்து விட்டதாகவும், இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

    இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தன் வீட்டிலிருந்து ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சிவகுமார். மேலும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  
    விஜய் மற்றும் அஜித் படங்களில் நடித்த நடிகை பாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
    தமிழில் விஜய்யுடன் பைரவா, சர்கார், அஜித்துடன் விஸ்வாசம், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பெங்காலி படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார். 

    நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

    பாப்ரி கோஷ்

    இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் ஸ்ரீ, தீசிகா, வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேராசை’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘பேராசை’. பிரபல இசையமைப்பாளர் சங்கர்கணேசின் மகனுமான ஸ்ரீ, இந்த படத்தின் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகன், கவுசிக். மாடல் அழகிகளான தீசிகா, வெண்பா, கிரிஜா ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 

    ‘பூவிலங்கு’ மோகன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை ஈசன் எழுத, சக்தி அருண்கேசவன், சிஹான் சரவணன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

    ‘பேராசை’ பற்றி அவர் கூறியதாவது: “குடிபோதைக்கு அடிமையானவன் போதையில் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அவனுக்கு எதிராக அமைகின்றன. போதையில் இருந்து அவன் மீண்டானா, இல்லையா? என்பதே படத்தின் கதை என கூறினார்.
    கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளாராம்.
    நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’. தமிழில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது.

    இந்நிலையில், அதில் வலிமை பட தயாரிப்பாளரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். தனுஷை 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார்.

    நயன்தாரா, ஜான்வி கபூர்

    இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது. ஒரே கட்டமாக தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்களாம். தமிழைப் போலவே இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

         விஜய் சேதுபதி, சுருதிஹாசன்

    படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருவதாக கூறப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்தது. இதனால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இயக்குனர் சிவா, மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் உருக்கமாக கூறி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை படம் மூலம் அறிமுகமானவர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். 

    இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த 27-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

    இயக்குனர் சிவா

    இந்நிலையில் இயக்குனர் சிவா தன் தந்தை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் தந்தையின் இழப்பை தாங்கிக் கொள்வது கடினமாக உள்ளது. அவரின் இழப்பால் மிகுந்த கவலையில் இருக்கிறேன். அவர் 30 வருடங்களாக தன் துறையில் வெற்றிகரமாக இருந்தார். அவர் பல ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். ஒரு கமர்ஷியல் படமாவது இயக்க வேண்டும் என்பது தான் என் தந்தையின் நீண்ட நாள் ஆசை. ஆனால் நேரம் இல்லாததால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவே இல்லை என்றார்.
    மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யா பாலன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தார். 

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. 

    விஜய் ஷா

    இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற படக்குழுவினரின் வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. 

    நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் விஜய் ஷா, ‘படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க ‘ஷெர்னி’ படக்குழு என்னை அணுகினர். அவர்கள் தான் என்னை இரவு விருந்துக்கு அழைத்தனர். மகாராஷ்டிரா வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறினேன். நான் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை’ என்றார். 
    திருமணம் செய்வதாக கூறி டி.வி. நடிகையை கற்பழித்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், அவர் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

    இதேபோல அவர் டி.வி. நடிகைக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து போலீசார் காஸ்டிங் இயக்குனர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு குறித்து போலீசார் விரைவில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரியிடம் விசாரணை நடத்துவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார். ஆயுஷ் திவாரி மீது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×