என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.
    சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

    சித்ரா

    டிசம்பர் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு டிசம்பர் 31-ம் தேதி டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டீசர் வீடியோ தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சபரிஷ் கூறுகையில் "நம்மிடையே விஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த அகத்தீஸ்வரம் ஒன்றிய செயலாளருக்கு விஷால் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக மருத்துவ உதவி தொகையை வழங்கியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது.

    இவர் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் நடிகர் சங்க உறுப்பினர் ராமசாமி அவர்களின் மருத்துவ உதவிக்காக விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் ராஜேஷ் அவர்கள் உதவி தொகையை வழங்கியுள்ளார்.

    விஷால்

    அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஓன்றிய இளைஞரணி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் வீரமணி அவர்கள் சமீபத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் அசோக் குமார் அவர்கள் வழங்கியுள்ளார். நிதியுதவி பெற்ற இருவரும் நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ’கட்டில்’. சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்திலும் "கட்டில்" என்ற பெயரிலேயே எடுக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.    

    கட்டில் படக்குழு

    மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார்.

    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித், விஜய்யின் படங்களை ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

    இதே நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. 

    இது ஒரு புறம் இருந்தாலும் கொரோனாவுக்கு பின் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இதுவரை திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தினால், பழைய படி மக்கள் வருவதில்லை என கூறப்பட்டு வந்தது. அதனால் மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வர வழைக்க பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறனர். 

    அஜித், விஜய்

    அந்தவகையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வாரம், அதாவது வருகிற ஜனவரி 8-ந் தேதி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா, கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்களை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
    பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
    கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.நாயகியாக ஜோயா நடித்துள்ளார். 

    3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

    ராணா

    இப்படத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். தற்போது படத்தின் ரிலீசை மீண்டும் தள்ளிவைத்துள்ளனர். அதன்படி வருகிற மார்ச் 26-ந் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோப்ரா படக்குழு, டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    கோப்ரா படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள கோப்ரா படக்குழு, அதில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியையும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 9-ந் தேதி கோப்ரா டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதை அடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மாதம் 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது, பூட்டிய அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    இந்நிலையில் ஹேம்நாத் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ஹேம்நாத், சித்ரா

    கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஜே.ஜே.நகர் போலீசார், ஹேம்நாத் மீது ஒரு வழக்கு பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

    தற்போது அந்த வழக்கு கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மேலும் இருவரிடம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
    தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை இயக்கி பிரபலமான வசந்த பாலன், அடுத்ததாக இயக்கப்போகும் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

    இதையடுத்து அவர் அர்ஜுன் தாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் அப்படம் பாலிவுட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தி லிஃப்ட் பாய் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

    வசந்தபாலன்

    இந்நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் வசந்தபாலன் கூறுகையில், "பல முக்கியமான இணையதளங்களில், நான் இந்தியில் வெளியான ‘தி லிஃப்ட் பாய்’ திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறான தகவல்" என்று பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர் வசந்தபாலன் இந்தப் பதிவில் அர்ஜுன் தாஸ் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பதால், வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது. 

    லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.

    மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்ஜெயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். 

    கபடதாரி படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 28-ந் தேதி தைப்பூசத்தன்று தியேட்டர்களில் வெளியிட உள்ளனர். மேலும் தைப்பூசத் திருவிழா நாளை விடுமுறை தினமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கபடதாரி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா பெத்துராஜ், பொம்பள விஜய் சேதுபதியாக இருக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு தமிழ் படங்கள் சரிவர அமையாவிட்டாலும், தெலுங்கில் பிளாக்பஸ்டர் நடிகையாக வலம் வருகிறார். காரணம் அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் தெலுங்கு படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

    நடிகை நிவேதா பெத்துராஜ், அடுத்ததாக, ரெட் என்ற தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இது தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தடம் படத்தின் ரீமேக்காகும். இப்படம் வருகிற பொங்கலன்று ரிலீசாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளில் நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டுள்ளார்.

    நிவேதா பெத்துராஜ்

    இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நிவேதா பெத்துராஜ் கூறியதாவது: தெலுங்கில் எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை. கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிக்க தயார். பொம்பள விஜய் சேதுபதியாக இருக்க ஆசைப்படுகிறேன். அவர் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறார். அதேபோல் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதித்ய வர்மா பட நடிகை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. பாலிவுட் நடிகையான இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    இந்நிலையில், நடிகை பனிடாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வந்த பனிடா, இந்தி பட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்துள்ளார். அப்போது அவருடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பனிடாவிற்கும் பரிசோதனை செய்ததில் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

    பனிடா சந்து

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம், ஆனால் அவர் அரசு மருத்துவமனை சுகாதாரமின்றி இருக்கும் எனக்கூறி செல்ல மறுத்ததால், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். அவருக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அவரது மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, திடீரென விலகியதால் அவருக்கு பதில் கிஷோர் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவரும் விலகியதால், அந்தக் கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

    விஜய் சேதுபதி, வெற்றிமாறன்

    இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதற்காக அவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்.

    முதலில் 'வடசென்னை' படத்திலேயே விஜய் சேதுபதி - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. பின்னர், அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறிப்பிடத்தக்கது.
    ×