என் மலர்
சினிமா செய்திகள்
இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் கௌதம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்? என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த நடிகையின் பிறந்த நாளுக்கு அவரது காதலர் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இவர் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் தனது நீண்டகால நண்பரான ஜோய்மோனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான். துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு இளைஞன் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார். ரெபாவும் அந்த புரோபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

லாக் டவுனால் ரெபாவை சந்திக்க முடியவில்லை என்றும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் அவரைப் பார்த்து உடனடியாக புரொபோஸ் செய்ய முடிவு செய்ததாகவும் ஜோய்மோன் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி இல்லாமல் படம் எடுக்க முயற்சி செய்தேன் என்று சூது கவ்வும், காதலும் கடந்து போகும் பட இயக்குனர் நலன் குமாரசாமி கூறியுள்ளார்.
சூது கவ்வும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார்.
இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் குறித்து நலன் குமாரசாமி கூறும்போது, ‘குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் உருவாக காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார்தான். இந்த படத்தில் 4 காதல் கதைகள். நான்குமே வித்தியாசமாக இருக்கும். நான் இந்த படத்திற்காக ஒரு நடிகையை பற்றி பேச விஜய் சேதுபதியிடம் சென்றேன். அப்போது, என்ன கதை என்கிட்ட சொல்லு என்றார். நானும் சொன்னேன். கதை கேட்டுவிட்டு நானே நடிக்கிறேன் என்றார்.

நானும் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தை இயக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார் இயக்குனர் நலன் குமாரசாமி.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் 'என்னோட பாஷா' என்கிற பாடல். இது 'தேவதாஸ் பார்வதி' என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.

இந்த 'தேவதாஸ் பார்வதி' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்றுள்ளது.

'தேவதாஸ் பார்வதி' ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார். அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம் பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.
இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாகவும் ஸ்மிருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வினோத் ராஜேந்திரன், மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.வி.அருண் இசையமைத்துள்ளார்.
பிரவீன், சுனைனா நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ட்ரிப் படத்தின் விமர்சனம்.
ஒரு ஜோடி காரில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது மர்ம மனிதர்கள் வழிமறித்து கொலை செய்கிறார்கள். அதே காட்டுப்பகுதிக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து பயப்படுகிறார்கள்.



அன்று இரவு யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

இறுதியில் சுனைனாவை நண்பர்கள் அனைவரும் காப்பாற்றினார்களா? நண்பர்களை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரவீன் புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். சுனைனாவை காப்பாற்ற நினைக்கும் போதும், நண்பர்களை இழக்கும் போதும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக லிடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்திருக்கிறார். நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லக்ஷ்மி பிரியா, ஜெனிபர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. இவரது டைமிங் காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. சீரியசான நேரங்களில் கூட கலகலப்பை கொடுத்திருக்கிறார். இவருடன் பயணிக்கும் கருணாகரன் தனக்கே உரிய பாணியில் காமெடிக்கு கைக்கொடுத்து இருக்கிறார். போலீசாக 2 காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.
சுற்றுலா செல்லும் நண்பர்கள் காட்டுக்குள் சிக்கும் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி திரில்லருடன் கலகலப்பையும் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் வரும் மனிதர்களின் நடிப்பை கொஞ்சம் ஏற்கும்படி கொடுத்திருக்கலாம்.

சித்துகுமாரின் இசையையும், உதயஷங்கரின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பின்னணியில் இசையும் கவனிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘ட்ரிப்’ சிறந்த பயணம்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித்தின் திரைப்படம் கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. இப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது.
தொடர்ந்து ‘ரைட்டர்’ மற்றும் ‘பொம்மை நாயகி’ படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் ‘சேத்துமான்’ எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இது எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் (IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக சேத்துமான் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அவர் நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள பகுதியை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார்.

இந்நிலையில், அதே தினத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீசாக உள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘உப்பென்னா’. தெலுங்கு படமான இதில் விஜய் சேதுபதி கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை பிச்சிபாபு சனா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜும், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.
அப்போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது: கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது.
அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது. விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். உரிமைக்காக போராடுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம் என பதிவிட்டுள்ளார்.
கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில், பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குகிறார். இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லாரன்சும், சரத்குமாரும் ஏற்கனவே 2011-ல் வெளியான காஞ்சனா படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளியுலகிற்கு தெரியாமல் இருந்த தன் சாதனைகள் ‘பிக்பாஸ்’ மூலம் வெளிப்பட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 20 ஆண்டுகளாக பின்னணி பாடல் மூலம் எனது குரல் பல இடங்களில் அறிமுகம் ஆகியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த பாடல்களை பாடியதால் எனது முகமும் தற்போது அனைத்து பகுதியிலும் நல்ல பரிட்சயம் ஆகியுள்ளது.
கலைமாமணி விருது, டாக்டர் பட்டம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் சென்றீர்கள் என கேட்கின்றனர். இதன் மூலம் எனது அடுத்தகட்ட இலக்கை முன்னெடுத்து செல்ல முடிந்துள்ளது.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்தியது பெருமையான ஒன்று. நடிகர் கமல்ஹாசன் வாயால் எப்பொழுதும் என்னை டாக்டர் என்று அழைத்ததோடு, வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த என் சாதனைகளை நிகழ்ச்சியில் என் மூலமே வெளிப்படுத்தி ஊக்கப்படுத்தியவர்.
தற்போது 4 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். கடந்த முறை வைத்தீஸ் வரன்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. பின்னர் வந்தபோது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வைத்தீஸ்வரன்கோவில் எப்பொழுதும் எனது வாழ்வில் திருப்பத்தை தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால், நடிகை ரீமா கல்லிங்கல் தான் நடத்தி வந்த நடன பள்ளியை மூடியுள்ளார்.
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ஜீவாவின் கோ படத்திலும் நடித்துள்ளார். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதும் பெற்றுள்ளார். மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரீமா கல்லிங்கல் நடன கலைஞர்.
சில வருடங்களுக்கு முன்பு சொந்தமாக மாமாங்கம் ஸ்டூடியோ என்ற பெயரில் நடன பள்ளி தொடங்கினார். அங்கு ஏராளமானோருக்கு குச்சிபுடி நடன பயிற்சிகள் அளித்து வந்தார். தற்போது கொரோனாவால் பயிற்சிக்கு யாரும் வரவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து நடன பள்ளியை மூடுவதாக ரீமா கல்லிங்கல் அறிவித்து உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடன பள்ளியை மூடுகிறேன். நடன வகுப்புகள், நடன பயிற்சிகள், திரைப்படங்கள் திரையிடுதல், கருத்தரங்கு என்று இந்த பள்ளியில் மறக்க முடியாத நினைவுகள் நிறைய உள்ளன'' என்று கூறியுள்ளார்.
மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளன்று வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தைப் போல இருப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் மாநாடு படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையிலேயே எனக்கு டெனெட் படம் புரியவில்லை. மாநாடு டிரெய்லருக்காக காத்திருங்கள். அதைப் பார்த்த பின் நீங்கள் வேறு ஏதேனும் ஒரு படத்தோடு ஒப்பிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.






