என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காடன் படத்தில் யானைகளுடன் இணைந்து நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபுசாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யானைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. 

    சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு விஷால், யானைகளை பார்த்து பயம் இல்லை. மனிதர்களைப் பார்த்துதான் பயம் என்று கூறினார். இந்நிலையில், படப்பிடிப்பின் போது யானையுடன் அன்பாக பழகும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    காடன் திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது.
    பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்பத்’. 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார்.

    இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    சர்பத்

    இந்நிலையில், சர்பத் திரைப்படம் நேரடியாக டி.வி. வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, சமுத்திரகனி நடித்த ஏலே படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீசரை பார்த்து பிரபல இயக்குனர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை பற்றி இயக்குனர் சுப்ரமணியம் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    சுப்ரமணியம் சிவா

    அதில், தம்பி மாரி... #KarnanTeaser பார்த்தேன்... வேற லெவலா இல்ல... இதுக்கு பேரே வேற வைக்கனும்... ப்பா.. உன் #கர்ணன்... எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்... உன் குழு மொத்தத்திற்கும் மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, தவறி விழுந்து தனது கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
    விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.

    இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

    மேலும் ”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    உடல் நலக்குறைவால் மரணமடைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இன்று  காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்


    இயக்குனர் வெங்கட் பிரபு

    நடிகை கார்த்திகா நாயர்


    இயக்குனர் அறிவழகன்

    இயக்குனர் லெனின் பாரதி


    இசையமைப்பாளர் இமான்


    நடிகர் ஜெயம் ரவி


    இயக்குனர் ராஜேஷ்


    நடிகை குஷ்பு


    நடிகர் விஜய் சேதுபதி


    உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காசு கொடுத்தாதான் ஓட்டு என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாக ‘மண்டேலா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். 

    இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில், தேர்தலில் கள்ள ஓட்டுப்போட வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறார் யோகி பாபு. நெல்சன் மண்டேலா என்று பெயரிட்டிருப்பதால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

    யோகி பாபு

    ஒருகட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்கிய யோகி பாபு நோட்டாவைப் பார்த்து விட்டு மூன்றாவது ஒரு நபர் இருப்பதாகவும் யாராக இருந்தாலும் காசு கொடுத்தால் தான் நான் ஓட்டுப் போடுவேன் என்றும் நகைச்சுவையாக கூறுகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.
    முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61. தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை  இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    ‘லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

    எஸ்.பி.ஜனநாதன்

    உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.
    சிவகுமாரை தன் சொந்தத் தம்பி போல சிவாஜிகணேசன் கருதினார். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளது வழக்கம்.

    1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.

    நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.

    சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.

    இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.

    "சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.

    சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

    "உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.

    "அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.

    "அப்படியா நினைக்கிறே?''

    "இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.

    "எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

    தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.

    "நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.

    "மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.

    அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:

    "நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.

    "தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!

    "சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''

    இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.

    நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

    1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!

    மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.

    படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.

    துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.

    என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.

    அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
    புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார். 

    படத்தை பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: “மட்டி படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருந்தன. 14 கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.

    மட்டி படக்குழு

    எல்லோரும் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டிரைலரில் பார்த்த பிரமிப்பு படத்திலும் இருக்கிறது. படம் 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்”.
    ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்று பலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக சந்தானம் கூறினார்.
    சென்னை:

    கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி வருகிறார். இதற்காக ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ஹேஷ்டேக்குடன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். இது இணையதளங்களில் வைரலானது. இதனை நடிகர் சந்தானம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்திருந்தார். 
     
    ‘பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள்’ என சந்தானம் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கோவில் மீட்பு கோரிக்கை தொடர்பாக, சத்குருவுடன் நடிகர் சந்தானம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சந்தானம் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்று சத்குரு  ட்வீட் செய்திருந்தார். அதைப் பார்த்தேன். நான் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது,  நிறைய கோவில்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். இங்கு வரும் வருமானத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை, உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டனர். 

    எனவே, சத்குருவின் அந்த ட்வீட் எனக்கு சரி என்று பட்டது. ஆதரித்து நான் ட்வீட் போட்டேன். உடனே என்னையும் சங்கி என்று பலர் கமென்ட் செய்து திட்ட ஆரம்பித்தனர். ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள். 

    எனவே, இதுபற்றி சத்குரு என்ன நினைக்கிறார்? இதை என்ன மாதிரி செய்யப்போகிறோம்? என்பதை சத்குருவிடம் நேரடியாக கலந்துரையாடல் மூலம் அறிய விரும்பினேன். இதை ஊடகங்கள் வாயிலாக மக்களும் அறிந்துகொள்வார்கள். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பின்னர் கோவில் மீட்பு தொடர்பான கேள்விகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் எழுப்பினார் சந்தானம். இதற்கு உணர்ச்சிப்பூர்வமாகவும் தெளிவாகவும் சத்குரு பதில் அளித்தார்.
    ஆர்.டி.குஷால் குமார் இயக்கத்தில் கெவின், சாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் பூம் பூம் காளை படத்தின் விமர்சனம்.
    நாயகன் கெவின் - நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது. இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள். அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்று தடை போடுகிறார்.

    தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின் ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பூம் பூம் காளை விமர்சனம்

    நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

    போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது. 

    பூம் பூம் காளை விமர்சனம்

    கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

    பூம் பூம் காளை விமர்சனம்

    கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.

    மொத்தத்தில் ‘பூம் பூம் காளை’ அடங்கிய காளை.
    பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
    நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார். ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் சில நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருந்து வந்தார். எனவே சூர்யா இல்லாமலே சூர்யா 40 படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. 

    சூர்யா

    தற்போது சுய தனிமையில் இருந்து வந்த சூர்யா, மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
    ×