என் மலர்tooltip icon

    பைக்

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.


    2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    அதன்படி புதிய கிளாசிக் 350 தோற்றம், அம்சங்கள் என பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது. இதன் ஹெட்லைட் புதிய ஜெ பிளாட்பார்மை சார்ந்து உருவாகி இருக்கும் என தெரிகிறது. ராயல் என்பீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த மீடியோர் 350 மாடல் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது ஆகும். 

    இந்த மாடலில் 349சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     ராயல் என்பீல்டு மீடியோர் 350

    இத்துடன் மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சம் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் 2021 கிளாசிக் 350 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமையும். 

    இந்தியாவில் கிளாசிக் 350 விலை ரூ. 1,79,782 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி அதிகபட்சம் ரூ. 2,06,962 (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது. 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 

    ஓலா எஸ்1 மற்றும் எஸ் 1 ப்ரோ அம்சங்கள்

    ஓலா எஸ்1 மாடலில் 2.98kWh பேட்டரி, ஹைப்பர்டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11 பி.ஹெச்.பி. திறன், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

     ஓலா எஸ்1

    ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 121 கிலோமீட்டர் வரை செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். ஹைப்பர்சார்ஜரில் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

    எஸ்1 ப்ரோ மாடலில் 3.97kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதனை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 

    ஓலா எஸ்1 சீரிஸ் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் அக்டோபர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    டுகாட்டி நிறுவனத்தின் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்-டையவெல் டார்க் மாடல் விலை ரூ. 18 லட்சம் ஆகும். எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் விலை ரூ. 22.60 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டுகாட்டி எக்ஸ்-டையவெல் சீரிசில் டையவெல் 1260 மாடலில் உள்ளதை போன்றே 1262சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 157.8 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     டுகாட்டி எக்ஸ்-டையவெல்

    போஷ் ஐ.எம்.யு., டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை செயல்திறன் வெளிப்பாடு, திராட்டிள் மற்றும் ஏ.பி.எஸ். இயக்கத்தை ஒவ்வொரு மோடிற்கும் ஏற்ப மாற்றியமைக்கிறது.

    புதிய டுகாட்டி எக்ஸ்-டையவெல் டார்க் மாடலில் டார்க் ஸ்டெல்த் பெயின்ட், மேட் பிளாக் வீல்கள், கார்பன் பிளாக் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் மாடலில் மேட் கிரே, மேட் பிளாக் மற்றும் ரெட் ஸ்டிரைப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் வினியோகம் துவங்கிவிட்டது.

    கவாசகி நிறுவனத்தின் 2022 இசட்650 மோட்டார்சைக்கிள் புதிதாக கேன்டி லைம் கிரீன் டைப் 3 நிறத்தில் கிடைக்கிறது.


    கவாசகி நிறுவனம் 2022 இசட்650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 6 ஆயிரம் அதிகம் ஆகும்.

     கவாசகி இசட்650

    புதிய 2022 இசட்650 மாடல் கேன்டி லைம் கிரீன் டைப் 3 நிறத்தில் கிடைக்கிறது. இதில் கிரீம் மற்றும் பிளாக் நிற பெயின்ட், கிரே நிற கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    கவாசகி இசட்650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67.31 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவனத்தின் 2022 நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.


    கவாசகி நிறுவனம் 2022 நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நின்ஜா 650 விலை ரூ. 6.61 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும். 2022 நின்ஜா 650 இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     2022 கவாசகி நின்ஜா 650

    2022 நின்ஜா 650 மாடலில் புல் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட், 4.3 இன்ச் புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த என்ஜின் 66.4 பி.ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என தெரிகிறது.


    எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஹீரோ நிறுவனம் தாய்வானை சேர்ந்த இ.வி. கியான், கோகோரோ போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

     ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    லீக் ஆன புகைப்படத்தில் இருப்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த தோற்றம் சந்தையில் தற்போது கிடைக்கும் மாடல்களை விட பெரியதாக இருக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பு ஹீரோவின் பெட்ரோல் மாடல்களை விட வித்தியாசமாக இருக்கிறது.

    அந்த வகையில் புதிய எலெக்ட்ரிக் மாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைதவிர ஸ்கூட்டரின் இதர அம்சங்கள் மர்மமாகவே உள்ளது. புதிய ஸ்கூட்டரின் வெளியீடு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெறும் என தெரிதிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது ஜிG310 சீரிஸ் மாடல்கள் விலையை இரண்டாவது முறையாக மாற்றியமைத்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்தியாவில் G310R மற்றும் G310GS  மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களாக G310R மற்றும் G310GS இருக்கின்றன.

     பி.எம்.டபிள்யூ. G310R

    இரு மாடல்கள் விலை முன்னதாக ரூ. 2.50 லட்சம் மற்றும் ரூ. 2.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது இவற்றின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 2.60 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இந்திய விற்பனையில் இரு மாடல்களும் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இரு மாடல்களில் G310GS அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் மூன்று வித நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

    டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 பி.ஹெச்.பி. திறன், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷன்

    பஜாஜ் டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள என்ஜின் கே.டி.எம். 250 டியூக் பிளாட்பார்மை சார்ந்து, சற்றே வித்தியாசமான டியூனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஒட்டுமொத்த தோற்றம் டாமினர் 400 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்குகிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி துவங்கி விட்டது! ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்படுகிறது. முதல் நாளில் இருந்தே நாடு முழுக்க வினியோகம், சர்வீஸ் உள்ளிட்டவை துவங்கும். விவரங்கள் ஆகஸ்ட் 15-இல். இந்த புரட்சியை நாம் ஒன்றிணைந்து நிகழ்த்துவோம்," என அவர் தெரிவித்தார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரின் பெரும்பாலான விவரங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்று வருகிறது. ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது அபாச்சி சீரிஸ் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி RTR 160 4V மற்றும் அபாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு துவங்கியது முதல் இந்த மாடல்கள் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத வாக்கில் இரு மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அறிவிப்பின்படி அபாச்சி RTR 160 4V மாடலுக்கு ரூ. 3 ஆயிரமும், அபாச்சி RTR 200 4V மாடலுக்கு ரூ. 3,750 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V

    புதிய விலை விவரம்

    டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V 

    டிரம் பிரேக் ரூ. 1,11,565
    டிஸ்க் பிரேக் ரூ. 1,14,615

    டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V

    சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,33,065
    டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,38,115

    முன்னதாக அபாச்சி RTR 200 4V மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டது. இந்த அப்டேட் மோட்டார்சைக்கிளில் மூன்று ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா முன்புற சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டன. 

    அபாச்சி RTR 160 4V மாடலில் உள்ள 160சிசி, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் 17.4 பி.ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. முன்னதாக இந்த என்ஜின் 15.6 பி.ஹெச்.பி. பவர், 14.12 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி தனது உற்பத்தி ஆலை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி சிம்பிள் எனர்ஜியின் ஆலை ஓசூரில் அமைகிறது. உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வினியோகம் செய்ய முடியும். இதற்காக சிம்பிள் எனர்ஜி சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஆலையை கட்டமைக்கிறது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது.

     சிம்பிள் ஒன்

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 350 கோடியை முதலீடு செய்ய சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் எனும் பெயரில் அறிமுகமாகிறது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார், ஸ்கூட்டரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வழங்கும். இந்தியாவில் சிம்பிள் ஒன் விலை ரூ. 1.10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.

    கவாசகி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கும் புதிய வவுச்சரை அறிமுகம் செய்து இருக்கிறது.


    கவாசகி இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல் விலையை இந்தியாவில் மாற்றியமைத்து இருக்கிறது. KLX சீரிஸ், நின்ஜா 300 மற்றும் Z H2 தவிர அனைத்து மாடல்கள் விலையையும் கவாசகி மாற்றிவிட்டது. விலை உயர்வை தொடர்ந்து கவாசகி நிறுவனம் குட் டைம்ஸ் வவுச்சரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முன்பை விட அதிக சலுகைகளை வழங்குகிறது. 

    புதிய வவுச்சர் தற்போதுள்ள எட்டு மாடல்களுக்கு வழங்கப்படும் சன்ரைஸ் வவுச்சருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய குட் டைம்ஸ் வவுச்சர் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    கவாசகி நின்ஜா 650 ரூ. 15 ஆயிரம் 
    கவாசகி Z 650 ரூ. 15 ஆயிரம்
    கவாசகி வல்கன் எஸ் ரூ. 25 ஆயிரம்
    கவாசகி Z900 ரூ. 10 ஆயிரம்
    கவாசகி நின்ஜா 1000SX ரூ. 40 ஆயிரம்
    கவாசகி வெர்சிஸ் 1000 ரூ. 40 ஆயிரம்
    கவாசகி வெர்சிஸ் 650 ரூ. 35 ஆயிரம்
    கவாசகி W ரூ. 35 ஆயிரம் 

    கவாசகி புதிய வவுச்சரை வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து தள்ளுபடியாக பெற முடியும். 
    ×