என் மலர்tooltip icon

    பைக்

    • எல்எம்எல் நிறுவனம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுப்பதை சமீபத்தில் தான் உறுதிப்படுத்தியது.
    • எல்எம்எல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    எல்எம்எல் நிறுவனம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுப்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் உறுதிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து "ஸ்டார்" மற்றும் "ஹைப்பர்பைக்" பெயர்களை தனது வாகனங்களுக்கு பயன்படுத்த காப்புரிமை கோரியது. இந்த வரிசையில், எல்எம்எல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களில் இருப்பது கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளிக்கும் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. முன்புறம் மேக்சி ஸ்கூட்டர் போன்று பெரிய அப்ரன் மற்றும் மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற ஹேண்டில்பார் காணப்படுகிறது. பின்புறம் வழக்கமான ஸ்கூட்டர் போன்றே காட்சியளிக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், செவ்வக வடிவத்தில் எல்சிடி ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, கனெக்டெட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இருபுறமும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் எல்எம்எல் ஸ்டார் மாடல் பிரீமியம் எலெக்ட்ரிக் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த மாடல் ஒலா S1 ப்ரோ, ஏத்தர் 450X ஜென் 3, டிவிஎஸ் ஐகியூப் மற்றும் பஜாஜ் செட்டக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    Photo Courtesy: Rushlane

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
    • பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷனில் ஹீரோ கனெக்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பண்டிகை கால விற்பனையை ஒட்டி இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 738, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    புதிய ஸ்டெல்த் 2.0 எடிஷன் மாடலின் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பிரேம் மற்றும் பில்லியன் க்ரிப் பகுதிகளில் ரெட் நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இதே போன்ற ஹைலைட்கள் ஹெட்லைட் மாஸ்க், பியூவல் டேன்க், ரியர் பேனல், என்ஜின் கௌல் மற்றும் ரிம் டேப்களின் கிராபிக்ஸ்-இலும் செய்யப்பட்டுள்ளன. டிசைன் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஹீரோ கனெக்ட் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டோ-அவே அலெர்ட், ஜியோ பென்ஸ் அலெர்ட், பார்க்டு லொகேஷன், ட்லிப் அனலசிஸ், வெஹிகில் ஸ்டார்ட் அலெர்ட், லைவ் டிராக்கிங், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    எக்ஸ்டிரீம் 160R மாடலிலும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் 163சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.9 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிராண்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வீக்கெண்ட் நிகழ்வு நடத்தப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் யமஹா ரசிகர்கள் கலந்து கொண்டு, ரைடிங் மற்றும் யமஹா தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர்.

    "தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற பிராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடிஏ ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் (உணர்ச்சிமிக்க யமஹா உரிமையாளர்களின் சமூகம்) 500 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 1000 யமஹா ரசிகர்கள் இந்த வீக்கெண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம், ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் யமஹாவின் பிரீமியம் மாடல் வரம்பில் சிறந்த தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.

    நிகழ்ச்சியின் போது, ​​பங்கேற்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் சவாரி திறனை கூர்மைப்படுத்தும் நோக்கிலும் ஜிம்கானா ரைடு போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் உற்சாகத்தை உருவாக்க, டெஸ்ட் ரைடு செயல்பாடு, யமஹா தயாரிப்பு வரம்பின் காட்சி மற்றும் ஒரு அக்சஸரீக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் யமஹா பிராண்டின் அர்ப்பணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்வை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W175 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்தியாவில் புதிய கவாசகி W175 இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட W175 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி W175 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் எபோனி பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என துவங்குகிறது. இதன் பிரீமியம் வெர்ஷன் போல்டு கேண்டி பெர்சிமன் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய கவாசகி W175 மாடல் இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த திறன் கொண்ட ரோட்-லீகல் வேரியண்ட் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளில் 177சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.8 ஹெச்பி பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை கவாசகி W175 மாடலில் டபுள் கிராடில் சேசிஸ், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் 270 மில்லிமீட்டர் ரோட்டார், பின்புறம் 110 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இவற்றுடன் ஹாலோஜன் ஹெட்லைட், ஹாலோஜன் டெயில் லைட், கன்வென்ஷனல் இண்டிகேட்டர்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அல்ய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது சாலையில் அதிவேகமாக 50 லட்சம் வாகனங்கள் எனும் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 866 ஆகும்.

    இந்த ஸ்கூட்டரின் பெண்டர் கார்னிஷ், டிண்ட் செய்யப்பட்ட வைசர், மிரர் ஹைலைட் உள்ளிட்டவைகளை சுற்றி பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 3டி பிளாக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் எண்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரிச் டார்க் பிரவுன் பேனல்கள், பிரீமியம் லெதர் இருக்கை மேற்கவர்கள், பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன .இந்த ஸ்கூட்டர் மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்ப்பில் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை அலுமினியம், லோ-ஃப்ரிக்‌ஷன் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் சீரான செயல்திறன், பிக்கப் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இத்துடன் டிவிஎஸ் மோட்டார் காப்புரிமை பெற்ற எகனோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இகோ மோட் மற்றும் பவர் மோட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றில் இகோ மோட் அதிக மைலேஜ் வழங்கும்.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பிளாக்‌ஷிப் ஜூப்பிட்டர், என்டார்க், வீகோ மற்றும் பெப் பிளஸ் என நான்கு ஐசி என்ஜின் ஸ்கூட்டர்களும் தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஜூப்பிட்டர் மற்றும் வீகோ மாடல்கள் 3 லட்சத்து 64 ஆயிரத்து 095 யூனிட்களும், பெப் பிளஸ் 28 ஆயிரத்து 913 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 ஆயிரத்து 028 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    • கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பைக் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை வழங்குகிறது. இவை கவாசகி Z650, கவாசகி Z650 RS மற்றும் கவாசகி W800 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளை பயனர்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலலாம்.

    சலுகைகளின் படி கவாசகி Z650 RS வாங்குவோருக்கு கே-கேர் பேக்கேஜ், குட் டைம்ஸ் வவுச்சர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு முறையே ரூ. 52 ஆயிரத்து 283 மற்றும் ரூ. 25 ஆயிரம் ஆகும். மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து இந்த வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    கவாசகி Z650 நேக்கட் ரோட்ஸ்டர் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள குட் டைம்ஸ் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதே போன்று கவசாகி W800 வாங்குவோருக்கும் குட் டைம்ஸ் வவுச்சர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ரெட்ரோ ஸ்டைல் மாடல் இந்திய சந்தையில் டிரையம்ப் T100 மற்றும் ஸ்பீடு ட்வின் 900 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சலுகைகள் தவிர கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிள் W175-ஐ செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மாடல் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் சோதனை செய்து வருகிறது. தற்போது இந்த மாடல் அக்சஸரீக்கள் பொருத்தப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், பிளாக்டு-அவுட் பிளை ஸ்கிரீன், எல்இடி இண்டிகேட்டர்கள், பெரிய கிராஷ் கார்டு வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் கார்டில் பார்-எண்ட் மிரர்கள், ஆக்சில்லரி லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடலில் உள்ள இருக்கை அகலமாக உள்ளது. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலிலும் இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினெண்டல் ஜிடி 650 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது.


    அந்த வகையில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் ட்வின் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஷாட்கன் 650 மாடலிலும் சிங்கில்-பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் ரீட்-அவுட் டிஜிட்டல் இன்செட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலின் நேவிகேஷன் பாட் விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரீயாக வழங்கப்பட இருக்கிறது.

    Photo Courtesy: GaadiWaadi | Zigwheels

    • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் 2025 வாக்கில் பத்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இடம்பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பற்றி புது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இதன் விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஆக்டிவா 110சிசி வேரியண்டை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆக்டிவா பெட்ரோல் மாடல் விலை ரூ. 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

     புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் வெர்ஷன் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் மிட்-ரேன்ஜ் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகமாகும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனத்தை மாற்று போக்குவரத்துக்காக வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் ஏற்றதாக இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் 60 முதல் 80 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W175 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது மோட்டார்சைக்கிள் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கவாசகி W175 இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய கவாசகி பைக் வெளியீட்டு தேதி கொண்ட டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி கவாசகி W175 மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகமானதும் இது கவாசகி நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெறும்.

    மற்ற W சீரிஸ் மாடல்களை போன்றே கவாசகி W175 மாடலிலும் வட்ட வடிவ ஹலோஜென் ஹெட்லேம்ப், வட்ட வடிவ அனலாக் ஸ்பீடோமீட்டர், முன்புற போர்க் கெய்ட்டர்கள், ஒற்றை இருக்கை, முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் கவாசகி W175 மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 பிஎஸ் பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் W175 மாடல் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜினை கொண்டிருக்கும். இதன் காரணமாக செயல்திறன் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம்.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கவசாகியின் W800 ரெட்ரோ ஸ்டைல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் டியர்டிராப் வடிவ பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உருவாக்கி வரும் புது பைக் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய பைக் மாடல் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் 100சிசி பிரிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிதாக கம்யுட்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 100சிசி பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 100 சிசி பிரிவில் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா பைக் ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இத்துடன் புதிய மாடல் நீண்ட பயணத்திற்கு ஏற்ற வகையில் சவுகரியமான சஸ்பென்ஷன் செட்டப் கொண்டிருக்கும் என்றும் இதன் எடை குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஹோண்டா பைக் சந்தையில் அதிக போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    ஹோண்டா இந்தியா நிறுவனம் CD 110 டிரீம் மற்றும் லிவோ உள்ளிட்ட மாடல்களை சிறிய மோட்டார்சைக்கிள் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களிலும் 109.51சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 70 ஆயிரத்து 315 மற்றும் ரூ. 75 ஆயிரத்து 002 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா விளங்குகிறது. பெட்ரோல் மாடல்கள் தவிர ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென இதன் அறிமுக தேதி மாற்றப்பட்டது.

    சிப்செட் குறைபாடு காரணமாகவே ஸ்கூட்டர் வெளியீடு தாமதமானது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வெளியீடு அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்வதற்கு மாற்றாக புது ஸ்கூட்டரை அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் அறிமுகம் செய்ய விடா பிராண்டு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதும் ஹீரோ விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தும் திட்டம் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.
    • தற்போது ஹோண்டா எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல் மற்றும் வெளியீடு விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்போது அறிமுகமாகும் இது எந்த மாடலாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் முதன்மை மாடலாக எலெக்ட்ரிக் மொபெட் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகடா தெரிவித்தார்.


    எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் மொபெட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என மூன்று பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த ஹோண்டா முடிவு செய்து இருக்கிறது. மூன்று பிரிவுகளிலும் அதிக வேகம் தான் வித்தியாசமாக இருக்கும். எலெக்ட்ரிக் பைக் பிரிவில் வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ- ஆக இருக்கும். இந்த வாகனங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    எலெக்ட்ரிக் மொபெட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் மொபெட் தான் என்றும் அடுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து அதிவேகமாக செல்லும் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்படும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனம் சமீப காலங்களில் அதிகரித்து வந்த போதிலும், கம்யுட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் பெட்ரோல் மாடல்களுக்கு இன்னமும் அதிக வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது, இதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஹோண்டாவின் முதன்மை கவனம் இந்த பிரிவின் மீது செலுத்தப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.

    ×