என் மலர்tooltip icon

    பைக்

    • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புதிய ஸ்கூட்டர்கள் டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என்று அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வினியோக துறை சார்ந்த பணிகளுக்கானவை ஆகும்.

    புதிய டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

    ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பிரத்யேக தோற்றம் கொண்டிருக்கின்றன. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சமாகவே 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.

    மிக குறைந்த வேகத்தில் செல்லும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றுக்கு சாலை வரியும் செலுத்த வேண்டாம். ஹோண்டா டேக்ஸ் e: மாடலில் ஹை-சீட் ஹேண்டில்பார், வட்ட வடிவம் கொண்ட ஒற்றை ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூபுலர் ஸ்பைன், ஒற்றை சீட் மற்றும் பேட்டரி பேக் உள்ளது.

    ஹோண்டா ஜூமர் e: மாடலில் சற்றே தடிமனாக காட்சியளிக்கும் வெளிப்புற ஃபிரேம், வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சைடு ரியர் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.

    இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனினும், ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 வாக்கில் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350.
    • ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் இந்தியாவில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றி இருக்கிறது. இதில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெடிட்ச் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 191

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 094

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 852

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 டார்க் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 285

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 க்ரோம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 755

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பல்பு-டைப் பைலட் லேம்ப்கள், வளைவான ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • இந்தியாவில் தற்போது ஹோண்டா டியோ மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- ஆக்டிவா, ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட்ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிலாஷ் செய்யும். இத்துடன் ஸ்மார்ட்ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார், ஃபியூவல் ஃபில்லர் கேப் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்யும்.

    ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்தியாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருப்பது உறுதியாகி விட்டது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில், இதுவரை ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்படுவதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்த மானிய தொகை 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இது 40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் அறிவித்து இருந்த ரூ. 2 ஆயிரம் கோடி தொகை கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக மானியத்தை ரத்து செய்வது சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது வாகன உற்பத்தியாளர்கள் மானியத் தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 1500 கோடி நிதி ஆகஸ்ட் மாத வாக்கில் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது. 

    • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
    • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

     

    ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

    யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • ஹீரோ எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது.
    • 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள் உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2023 எக்ஸ்பல்ஸ் 200 4V மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 60mm அளவில் உயரமான விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பெரிய ஹேண்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள 200சிசி ஆயில் கூல்டு என்ஜின் புதிய OBD-2 விதிகள் மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் ரைடர் டிரையாங்கில் டுவீக் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் காக்பிட் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்டில் ரேலி கிட் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் ஆக வழங்கப்படுகிறது.

    • சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது.
    • இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி டெஸ்டிங்கில் உள்ள மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்திய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரானில் எல்இடி ஹெட்லைட் மவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இண்டிகேட்டர்கள், ஹேண்டில்பாரிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஒற்றை சீட், இளமையான தோற்றம் கொண்டிருக்கிறது.

     

    2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது. பின் சில மாதங்கள் கழித்து இதே மாடலில் மூன்றாவதாக மற்றொரு பேட்டரி பேக் வழங்கப்பட்டு, இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.

    சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் எல்இடி இலுமினேஷன், ப்ளூடூத் மற்றும் வைபை வசதி கொண்ட டிஎப்டி கன்சோல், 2 ஜிபி ரேம், நான்கு ரைடிங் மோட்கள்- இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: bikewale

    • எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும்.
    • இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், பல்வேறு நிலைகளில் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும் என்று தெரிகிறது. இந்த யூனிட்டில் H வடிவம் கொண்ட ரிடிசைன் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி - ரோடு, ஆஃப்-ரோடு மற்றும் ரேலி வழங்கப்படுகிறது.

    இதன் ரோடு வெர்ஷன் வழக்கமான டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இரண்டு முக்கிய மாற்றங்கள் தவிர, இந்த மாடலின் தோற்றம் அதன் தற்போதைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் 199.6சிசி ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றங்களின் மூலம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

    • இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும்.
    • ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் "இண்டர்செப்டார் பியர் 650" எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என்று தெரிகிறது.

    பியர் எனும் பெயரைக் கொண்டு இது இண்டர்செப்டார் 650 மாடலின் ஆஃப் ரோடு வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், டிரேட்மார்க் விவரங்களில் ஷெர்மா மாடலில் இண்டர்செப்டார் பிராண்டிங் வழங்கப்படவில்லை.

     

    அந்த வகையில் புதிய பியர் வேரியண்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இருக்கும் என்றும் இதில் ஸ்பெஷல் பெயிண்ட் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.

    அந்த வகையில், இந்த மாடல் 648சிசி பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய வேரியண்ட் பண்டிகை காலக்கட்டம் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

    டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

    2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

     

    முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ×