என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் எஸ்யுவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட்' நிறுவனத்தின் டஸ்டர், க்விட், டிரைபர் வரிசையில் தற்போது ரெனால்ட் கைகர் என்ற நவீன எஸ்யுவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரக கார் ஸ்போர்ட்டியான மற்றும் வலிமையை எடுத்துக்காட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. காரை இயக்குபவருக்கு ஏற்றபடி நெகிழ்வுத்தன்மையை வழங்கும் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகளை இந்த மாடல் கொண்டிருக்கிறது.

மேலும் காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
இதுகுறித்து ரெனோ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம் மாமிலப்பல்லே கூறும் போது..,
“இந்தியாவில் தொடர்ந்து ரெனால்ட் முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது. ரெனால்ட் கைகர் காரை அறிமுகம் செய்வதின் மூலம் இந்தியாவில் மற்றொரு முக்கிய நிலையை நாங்கள் எட்டியுள்ளோம். இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் ஆசைகள் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை'',
என தெரிவித்தார்.
பெனலி நிறுவனத்தின் புதிய 2021 டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் தனது அனைத்து பிஎஸ்4 மாடல்களையும் புதிய பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப பெனலி அப்டேட் செய்ய இருக்கிறது.
புதிய 2021 பெனலி டிஆர்கே 502 பிஎஸ்6 மாடலில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்விட்ச்கியர் அப்டேட் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. முன்புறம் பாடி-கலர்டு மட்கார்டு, வித்தியாசமான நக்கிள் கார்டு, புதுவித வடிவமைப்பு கொண்ட ரியர் மிரர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இவைதவிர புதிய மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் பிஎஸ்4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2021 பெனலி டிஆர்கே 502 மாடலின் பெரும் அப்டேட் ஆக மேம்பட்ட என்ஜின் இருக்கிறது. இந்த மாடலில் 499சிசி ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
இதே என்ஜின் பிஎஸ்4 மாடலில் 47.6 பிஹெச்பி பவர், 45 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய டிஆர்கே 502 மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்ய இருக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஹிமாலயன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 2021 ஹிமாலயன் மாடல் Make it Yours கஸ்டமைசேஷன் திட்டத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை கொண்ட மாடலில் பேணியர்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் பேணியர்களுக்கான கட்டணமும் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனால் புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், மிரேஜ் சில்வர் மற்றும் கிரானைடே பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் தற்போதைய மாடல்களை போன்றே லேக் புளூ,, கிராவெல் கிரே மற்றும் ராக் ரெட் நிறங்களிலும் இது கிடைக்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் உலகின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மோட்டார் கார்ப் உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனையில் டொயோட்டா நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகனை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
2020 ஆண்டு டொயோட்டா வாகனங்கள் விற்பனை சர்வதேச அளவில் 11.3 சதவீதம் சரிவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 95.28 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. போக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த ஆண்டு 15.2 சதவீதம் சரிவடைந்து 93.05 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை மற்றும் உற்பத்தி என அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், ஜப்பான் மற்றும் ஆசிய சந்தைகளில் குறைந்தளவு பாதிப்பை எதிர்கொண்டதால் டொயோட்டா நிறுவனம் பெருமளவு சரிவை தவிர்த்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் முன்பதிவு மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய டாடா சபாரி அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடலாக அறிமுகமாகிறது. இந்த மாடல் ஆறு வேரியண்ட் மற்றும் மூன்றுக்கும் அதிக நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக புதிய சபாரி மாடல் கிரவிடாஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இது ஹேரியர் எஸ்யுவி-யின் மூன்றடுக்கு வேரியண்ட் ஆகும். இதனால் இரு மாடல்களிடையே பெரும்பாலான அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் ஒரே மாதிரி காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய சபாரி மாடலில் டிரை-ஏரோ மெஷ் கிரில், பிளேர் செய்யப்பட்ட வீல் ஆர்ச்கள், பெரிய ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
ஜீப் நிறுவனத்தின் புதிய 2021 காம்பஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி துவக்க விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் அப்டேட்டகள் செய்யப்பட்டுள்ளன.
2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி ஸ்போர்ட், லாங்கிடியூட், லிமிடெட் மற்றும் மாடல் எஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் மாடல் எஸ் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 24.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் நான்கு வேரியண்ட்கள் தவிர ‘80th Anniversary Edition' மாடல் ரூ. 22.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்படப்பட்டு இருக்கிறது. 2021 ஜீப் காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் புதிய காம்பஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
2021 ஜீப் காம்பஸ் எஸ்யுவி 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி, 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ரூ. 16 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புது மோட்டார்சைக்கிள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய 2021 ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 2021 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் விலை ரூ. 16.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
20201 டிரையம்ப் மாடல் பல்வேறு புது அம்சங்கள், உபகரணங்கள், மேம்பட்ட டிசைன் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் துவங்கி உள்ளது.

ரோட்ஸ்டர் சீரிசில் புதிய பிளாக்ஷிப் மாடலாக 2021 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 ஆர்எஸ் அறிமுகமாகி இருக்கிறது. இந்த மாடலில் 1160சிசி, 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 178 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதுதவிர முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இவை 43எம்எம் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் டிடிஎக்ஸ்36 மோனோ-ஷாக் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320எம்எம் இரட்டை டிஸ்க், பின்புறம் 270எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் 35 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும்.

முன்னதாக நிசான் மேக்னைட் விலையில் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டது. எனினும், இந்த விலை உயர்வு மேக்னைட் பேஸ் மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. விலை உயர்வு காரணமாக நிசான் மேக்னைட் துவக்க விலை தற்சமயம் ரூ. 5.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
எனினும், இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் தொடர்ந்து குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யுவி ஆக இருக்கிறது. நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் புதிய கரோக் எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கோடியக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஸ்கோடா கரோக் 1000 யூனிட்கள் இந்திய விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டது.
விற்பனை துவங்கிய சில மாதங்களில் இந்த மாடல் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா நிறுவனம் தனது கரோக் எஸ்யுவி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கரோக் எஸ்யுவி அடுத்தக்கட்ட யூனிட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கென ஸ்கோடா நிறுவனம் கரோக் மாடலை CKD முறையில் பாகங்களை இறக்குமதி செய்யலாம். மேலும் இவை இந்தியா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. கரோக் எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாடா சபாரி மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் மாடலை தொடர்ந்து தற்சமயம் சபாரி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டாடா சபாரி மூன்றடுக்கு எஸ்யுவி மாடல் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய சபாரி மாடல் விற்பனையகத்துக்கு வந்தடைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்களில் புதிய சபாரி மாடல் சிக்னேச்சர் டார்க் புளூ நிறம் கொண்டிருக்கிறது. இதுதவிர புதிய கார் அசத்தலான கிரில், ஸ்ப்லிட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், சில்வர் பாக்ஸ் பிளேட் கொண்டுள்ளது.

பக்கவாட்டில் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெட்டல்-டைப் டிசைன், ஸ்டெப்டு-அப் ரூப் உள்ளிட்டவை காணப்படுகிறது. பின்புறம் புதிய ஹேரியர் மாடலில் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், கிளாஸ் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய டாடா சபாரி மாடலில் ஹேரியர் மாடலில் உள்ளதை போன்றே 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. ஹேரியர் மாடலில் இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய டாடா சபாரி மாடல் எம்ஜி ஹெக்டார் பிளஸ், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
மாருதி சுசுகியின் கார் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மாடலை 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் ஸ்விப்ட் மாடல் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் எனும் பெருமையை பெற்றது.
தற்சமயம் இந்திய விற்பனையில் மாருதி சுசுகி ஸ்விப்ட் 23 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. அறிமுகமான 15 ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் மூன்று தலைமுறை அப்கிரேடுகளை பெற்று இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் ஸ்விப்ட் மாடல் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

பின் 2013 ஆம் ஆண்டில் ஸ்விப்ட் மாடல் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதைத் தொடர்ந்து 2016-இல் 15 லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு 23 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்புக்கு மத்தியில் 1,60,700 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
“எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், ஸ்விப்ட் பிராண்டு மீது நம்பிக்கை வைப்பதற்கு இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதே ஆதரவு, நம்பிக்கை கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு மைல்கல் எட்டுவோம் என நம்புகிறேன்.” என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷாங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
டுகாட்டி நிறுவனத்தின் 2021 ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2021 ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ மாடல் மேட் பிளாக் மற்றும் அயோனைஸ் செய்யப்பட்ட பாகங்களை கொண்டிருக்கிறது. இதில் புல் எல்இடி லைட்டிங், பிளாட் ஹேன்டில்பார், கிளாசிக் ரியர்வியூ மிரர்கள், 10-ஸ்போக் அலாய் வீல்கள், டால்-செட் எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 1079சிசி, ஏர் கூல்டு, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84.48 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் ஆக்டிவ், ஜர்னி, சிட்டி என மூன்றுவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனிற்கு அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் ரோட்டார்களும், பின்புறம் ஒற்றை டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய 2021 ஸ்கிராம்ப்ளர் டார்க் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.






