தொழில்நுட்பம்

மூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்

Published On 2019-01-01 08:08 GMT   |   Update On 2019-01-01 08:08 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone



ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் வடிவமைப்பை 2020 ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலும் மாற்ற இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களை வித்தியாசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சோனியுடன் இணைந்து புதிய ஐபோன்களில் 3D கேமரா வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் புகைப்படம், பாதுகாப்பு மற்றும் கேமிங் என மூன்று தளங்களில் புதிய வசதிகளை வழங்க வழிசெய்யும்.

“கேமராக்கள் மொபைல் போன்களில் புரட்சியை ஏற்படுத்தின, 3D கேமரா தொழில்நுட்பத்தை நானும் அதிகம் எதிர்பார்க்கிறேன்,” என சோனியின் சென்சார் பிரிவு தலைவரான சடோஷி யோஷிஹாரா தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதில் ஆப்பிளின் விருப்பம் பற்றி ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்ட நிலையில், சோனியின் யோஷிஹாரா இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். 



மேலும் “சோனி நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் பிரைமரி மற்றும் செல்ஃபி என இருவிதங்களில் வழங்க ஏதுவாக 3D கேமராக்களை தயார்படுத்தி, 2019 கோடை காலத்தில் இதன் பெருமளவு உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என யோஷிஹாரா தெரிவித்தார்.  

சோனியின் 3D கேமராக்கள் டைம் ஆஃப் ஃபிளைட் (Time Of Flight) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் கொண்டு முப்பறிமான படங்களை அதிக தெளிவாக பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்றும் அதிகபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களையும் தெளிவாக படமாக்க முடியும்.

புகைப்படங்களை இந்த தொழில்நுட்பம் அதிக தெளிவாக படமாக்கும், அதுவும் குறைந்தளவு வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் காட்சிகள் தெளிவாக இருக்கும். பாதுகாப்பிற்கு இந்த தொழில்நுட்பம் ஃபேஸ் அன்லாக் வசதியை செயல்படுத்த பயனரின் முகத்தை முப்பறிமான முறையில் முன்பை விட அதிக தெளிவாக பதிவு செய்யும். 


புகைப்படம் நன்றி: Bloomberg

இதனால் சோனியின் 3D கேமராக்களுடன் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களில் இருப்பதை விட அதிக பாதுகாப்பானதாக மாறும்.

சோனியின் 3D கேமராக்கள் கொண்டு அறை மற்றும் பொருட்களை மேப் செய்து ஏ.ஆர். அல்லது வி.ஆர். அனுபவத்திற்கு அவற்றை பயன்படுத்த முடியும். இதை கொண்டு கேமிங் அனுபவமும் வித்தியாசப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிள் சாதனங்களில் ஏற்கனவே ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகலாம்.
Tags:    

Similar News