2 நாள் தாராளமாக தாங்கும்... பெரிய பேட்டரியுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்
- இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.
சீன சந்கையில் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படும் புதிய ஸ்மார்ட்போனில் சுமார் 10,080mAh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அளவில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இது ஹானர் பவர் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. முந்தைய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிரிவில் முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக ஹானர் நிறுவனம் 8300mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் X70 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் 1.5K 120Hz AMOLED 120Hz டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.
Saber என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னோ ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஹானர் பவர் 2 அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை 2199 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,360) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.