2025 - ஒரு பார்வை
null

2025 REWIND: அமெரிக்க வல்லாண்மையை சல்லி சல்லியாக்கிய DeepSeek.. AI உலகின் மகத்தான புரட்சி - தொழில்நுட்ப விடுதலை!

Published On 2025-12-26 11:00 IST   |   Update On 2025-12-26 11:01:00 IST
  • உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர்.
  • பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான ஒரு ஏஐ தொழில்நுட்ப உலகையே ஆட்டம் காண வைத்தது.

2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).

இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில், டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களை விட பன்மடங்கு குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும்.

சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும்.

ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுங்கின. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த டீப்சீக் மற்ற ஏஐ செயலிகளை விட உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசும் அளவுக்கு டீப்சீக் அசுர வளர்ச்சி கண்டது.

ஜனவரி இறுதியில், அதாவது சரியாக ஜனவரி 27(திங்கள்கிழமை), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பூகம்பத்தை சந்தித்தன.

டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.

என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டது.

ஜனவரி இறுதியில் பங்குச்சந்தையை அதிரவைத்த டீப்சீக், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சவால்களைச் சந்தித்தது.

ஜனவரி 27-ல் புகழ் உச்சத்தில் இருந்தபோது, டீப்சீக் தளம் கடுமையான 'DDoS' சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் வலுவாகச் செயல்பாட்டுக்கு வந்தது.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் டீப்சீக் வளர்ச்சியை 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்று கருதியது. இதனால், அமெரிக்க அரசு நிறுவனங்களில் டீப்சீக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அதிநவீன 'என்விடியா' சிப்களைப் பெறுவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

இதற்கிடையே கூகுள் தனது Gemini 3 மாடலையும், OpenAI தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டன. இவை சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பது (Reasoning) மற்றும் கோடிங் செய்வதில் புதிய உச்சத்தை எட்டின.

அதேநேரம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது அடுத்தடுத்த பதிப்புகளை (V3 சீரிஸ்) வெளியிட்டது. இவை முந்தைய மாடல்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருந்தன.

குறிப்பாக, இது கணிதம் மற்றும் கோடிங் -இல் கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஓபன் ஏஐ-யின் புதிய மாடல்களுக்கு நிகராகப் போட்டியிட்டது.

ஆண்டின் இறுதியில், பயனர்களுக்காக வெறும் பதில்களை மட்டும் தராமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, காலண்டரில் வேலைகளைக் குறிப்பது போன்ற பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

டீப்சீக் வெறும் ஒரு செயலியாக மட்டும் இல்லாமல், ஏஐ உலகில் நிலவி வந்த அமெரிக்க ஏகபோகத்தை உடைத்தெறிந்த ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் செலவழித்தால்தான் சிறந்த ஏஐ-யை உருவாக்க முடியும் என்ற பிம்பத்தை வெறும் 6 மில்லியன் டாலரில் டீப்சீக் உடைத்துக் காட்டியது.

டீப்சீக் வருகையால் தங்கள் பிரீமியம் தன்மைகளை மற்ற ஏஐ நிறுவனங்கள் குறைத்து வெகு மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏஐ தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று என்பதை டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

2025-ம் ஆண்டு என்பது ஏஐ-யின் வளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும்போது அதில் 'டீப்சீக்' என்ற பெயர் புரட்சியின் வடிவமாக நிச்சயம் பதிவாகும். 

Tags:    

Similar News