2025 REWIND:நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட தலைவர்கள் வீழ்த்தப்பட்ட ஆண்டு
- சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
- 860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு "2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத பாரதம்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படைகள் நக்சலைட்டுகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
சுமார் 1,973-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பொதுவாழ்விற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அதிகளவில் நிகழ்ந்துள்ளது.
860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்த ஆண்டில் வீழ்த்தப்பட்டனர்.
மத்வி ஹித்மா: நக்சல் இயக்கத்தின் மிகவும் தேடப்பட்ட மற்றும் கொடூரமான கமாண்டர்களில் ஒருவரான இவர், நவம்பர் 2025-ல் சத்தீஸ்கர்-ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
கணேஷ் உய்கே: மத்திய குழு உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரான இவர், டிசம்பர் 2025-ல் ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.1.1 கோடி வெகுமதி இருந்தது.
கேசவ ராவ் (எ) பசவராஜ்: ஜூன் 2025-ல் மற்றொரு மூத்த தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சலபதி மற்றும் அருணா: ஜனவரி 2025-ல் சத்தீஸ்கர்- ஒடிசா எல்லையில் நடந்த தாக்குதலில் மத்திய குழு உறுப்பினர் சலபதி மற்றும் அவரது மனைவி அருணா உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
சத்தீஸ்கரின் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் 21 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த வேட்டையில், 27 கடினமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இங்கிருந்த மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலை மற்றும் பயிற்சி முகாம்களைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்தன.
நக்சல் பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்
அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2014-ல் 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025-ல் வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதில் மிகத் தீவிர பாதிப்புள்ள மாவட்டங்கள் வெறும் 3 மட்டுமே மிஞ்சியுள்ளன.
அபுஜ்மர் (Abujhmad) மற்றும் வடக்கு பஸ்தர் போன்ற பல ஆண்டுகளாக நக்சல் கோட்டைகளாக இருந்த இடங்கள் இப்போது "நக்சல் அற்ற பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன.
வெறும் ஆயுதப் போர் மட்டுமின்றி, "பேச்சுவார்த்தை - பாதுகாப்பு - ஒருங்கிணைப்பு" என்ற மும்முனை உத்தியையும் மத்திய அரசு கையாண்டது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை அரசு வழங்குகிறது.
நக்சல் பகுதிகளில் 17,500 கி.மீ சாலைகள், 5,000 மொபைல் கோபுரங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் 2025-க்குள் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபடி, 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற இலக்கை நோக்கி 2025-ம் ஆண்டின் வெற்றிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.