2025 REWIND: இந்த ஆண்டில் சரித்திர நாயகனாக வலம் வந்த வைபவ் சூர்யவன்ஷி
- ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசினார்.
- மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார்.
வைபவ் சூர்யவன்ஷி மார்ச் 27, 2011-ம் ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இடது கை துவக்க ஆட்டக்காரராக விளையாடும் இவர், 2025 ஆம் ஆண்டில் பல உலக சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார்.
இந்த ஆண்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்து இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
2025 ஏப்ரலில் 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் அறிமுகமான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே மூன்று சாதனைகளை படைத்தார்.
முதல் போட்டியில் செய்த மூன்று சாதனைகள்:
1. 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை, மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்கிற பெயரை சூரியவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 மட்டுமே (14 வயது 23 நாட்கள்).இதன் மூலம் 2019-ல் 16 வயது 157 நாட்களில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரயாஸ் ரே பர்மனின் சாதனையை சூரியவன்ஷி முறியடித்தார்.
2. ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றார். இந்த சாதனையை ஆர்ஆர் அணிக்காக விளையாடும் ரியான் பராக் வைத்திருந்தார். பராக் ஐபிஎல் போட்டியில் சிக்ஸர் அடித்த போது, அவருக்கு 17 வயது 161 நாட்கள்
3. ஐபிஎல்லில் பவுண்டரி அடித்த இளைய வீரர் என்ற பெருமையையும் சூரியவன்ஷி பெற்றுள்ளார். பிரயாஸ் ரே பர்மன் இந்த சாதனையை ஆறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார்.
மேலும் ஐபிஎல் தொடரில் வைபவ் செய்த சாதனைகள்:
1. டி20 வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் (வயது: 14 வருடம், 32 நாட்கள்)
2. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இரண்டாவது வீரர் (35 பந்துகள்)
3. ஐபில் தொடரில் விரைவாக சதமடித்த இந்திய வீரர் (35 பந்துகள்)
4. ஐபில் தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் (11 சிக்ஸர்)
5. அடித்த ரன்களில் அதிகப்பட்ச பவுண்டரி சதவீதம் (93 %)
6. ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்
அதனை தொடர்ந்து யூத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா U19-க்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் இந்திய U19 வீரர்களில் இதுதான் அதிவேக சதமாக பார்க்கப்படுகிறது. உலக U19 டெஸ்ட்டில் இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும்.
2025 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து, அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.
இந்தப் போட்டியில் வைபவ் அடித்த 171 ரன்கள், அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் அம்பத்தி ராயுடு - 177 ரன்களுடன் இருக்கிறார். அவர் 2002 ஆம் ஆண்டில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். மேலும், ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையையும் வைபவ் படைத்தார்.
அதனை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரில் சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-
வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)
ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)
ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)
மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.
இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:
35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024
36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று
40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010
41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023
42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021
ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-
59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)
64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)
65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)
பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு குழந்தைகளுக்கான இந்தியாவின் உயரிய விருது பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு. அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.