2025 REWIND: AI எனும் ஜீ பூம் பா!.. கசக்கி எறியப்பட்ட ஊழியர்கள் - லட்சத்தை தாண்டிய பணிநீக்கம் - பட்டியல்
- 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.
இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.
சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்
1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.
5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.
7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.
9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.
10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.
இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது.