உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-15 14:11 GMT

நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி, உக்ரைனுக்கு அதிக கனரக ஆயுதங்களை அனுப்புவது பற்றி விவாதித்தனர். இந்நிலையில், கிழக்கு நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் சரணடையும்படி ரஷியா விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு உக்ரைன் கீழ்ப்படியவில்லை. அங்கு சண்டை நீடிக்கிறது.

சீவிரோடோனெட்ஸ்கின் 80 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளை பிடிக்க தொடர் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டுள்ளது.

2022-06-15 07:18 GMT

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 2 கோடி டன் அளவிலான உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உலக நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் தானியங்களை ரெயில் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்து வந்து, பிறகு அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2022-06-14 23:00 GMT

உக்ரைன் நாடு முழுவதையும் கைப்பற்றும் திறன் ரஷியாவிடம் இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் கொலின் கால் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கணிசமான பகுதிகளை கைப்பற்றினாலும் அது முழுமையான நாடாக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த போர் மூலம் ரஷியா முழுமையான அந்த நோக்கங்களை அடைய முடியும் என்று தாம் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2022-06-14 22:54 GMT

நீண்ட தூரம் சென்று ரஷிய படைகளை தாக்கும் ஆயுதங்கள் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்திடம் போதுமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இன்னும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் தேவை என்றார். ரஷிய படைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு போதிய ஆயுதங்கள் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022-06-14 22:51 GMT

உக்ரைனின் கிழக்கு நகரமான சீவியரோடோனெட்ஸ்கில் 80 சதவீத பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷிய படைகள் மூன்று பாலங்களையும் அழித்தன. இடைவிடாத வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் போர் காரணமாக பொதுமக்களை பெருமளவில் அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. அந்த பகுதியில் சுமார் 12,000 பேர் உள்ளனர். அசோட் ரசாயன ஆலையில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அசோட் ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற மனிதாபிமான அடிப்படை பாதை அமைத்து தரப்படும் என்று ரஷிய ராணுவ ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.

2022-06-14 13:33 GMT

பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் வரும் 16-ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 தலைவர்களும் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022-06-14 08:04 GMT

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தாலும், அந்நாட்டில் இருந்துதான் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் போர் தொடங்கிய 100 நாட்களில் படிம எரிபொருட்கள் ஏற்றுமதி மூலமாக மட்டும் ரஷியா சுமார் ரூ.7 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-14 07:08 GMT

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் இந்த போர் குறித்து போப் பிரான்சிஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இந்த போர் சிக்கலானது. இந்த போரில் யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று எளிமைப்படுத்த முடியாது’ என கூறியுள்ளார். போர் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2022-06-13 23:56 GMT

ரஷிய படைகளால் சீர்குலைக்கப்பட்ட தலைநகர் கீவ்வை மீண்டும் உருவாக்குவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். வோல்னோவாகா முதல் சோர்ட்கிவ் வரை ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்ட அனைத்தையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம், ஏனெனில் இது உக்ரைன் என்று ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் ராணுவம், எங்களின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022-06-13 23:45 GMT

உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி குறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ்,அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கனுடன் விவாதித்துள்ளார். உக்ரைனில் தானிய கிடங்குகளை ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளது மற்றும் வடக்கு அயர்லாந்தில் வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் புதிய சட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News