தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவனுக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான்- மத்திய மந்திரி எல்.முருகன் சாடல்

Published On 2025-08-17 13:32 IST   |   Update On 2025-08-17 13:32:00 IST
  • தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
  • பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 22-ந்தேதி வருகைதர உள்ளார். நெல்லையில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது பற்றி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

கேள்வி:- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. பயப்படாது என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும், 'நாங்கள் ஈடி-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என்று கூறி இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:-அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய 2 அமைப்புகளும் தன்னிச்சையான அமைப்புகளாகும். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தங்களது வேலைகளை அந்த அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இதுபோன்ற சோதனைகளை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அதுபற்றி மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமானதாக இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.

எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்தோடு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி மக்கள் ஆதரவுடன் அவரது பிரசார யாத்திரை எழுச்சி பெற்றிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளார். எனவே தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை அவரும், தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.

கேள்வி:-அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் விலகிச் சென்று தி.மு.க.வில் இணைந்திருப்பதால் அது கூட்டணியை பலவீனப்படுத்தி விடாதா?

பதில்:-2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வது வழக்கமானது தான். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த போது தி.மு.க.வில் இருந்து விலகி பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர்.

இப்போது தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் இணைவதற்காக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது போன்று யார்-யார் எங்களிடம் பேசுகிறார்கள், இணைப்பு விழா எப்போது நடைபெறும் என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக தி.மு.க.வில் இருந்து பலர் வெளியில் வருவார்கள்.

கேள்வி:-தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை கூறி இருக்கிறாரே?

பதில்:-தி.மு.க. கூட்டணியில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இதுபோன்று மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணியில் இருந்து எங்கே வெளியேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர் உள்ளார். அவருக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான். பட்டியல் இன மக்களை பற்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை எதற்குமே திருமாவளவன் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார். இன்றைக்கு பட்டியல் இன மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் உள்ளன.

நான் பட்டியல் இனத்தில் காலனியில் இருந்து வந்தவன். நான் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் நிலையை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி இருக்கிறேன். அதுபற்றியெல்லாம் திருமாவளவன் பேச மாட்டார்.

எனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தை பொறுத்தவரையில் தகுதியான நபர்களுக்கு மாற்றுப் பணிகளையும் வழங்க வேண்டும். அவர்களை தூய்மை பணியாளர்களாக மட்டுமே எப்போதும் வைத்திருக்கக் கூடாது.

உதாரணத்துக்கு ஓட்டுனர் வேலை தெரிந்தவராக தூய்மை பணியாளர் ஒருவர் இருந்தால் வாய்ப்பு வரும் போது அவருக்கு டிரைவர் பணியை வழங்கலாம். அதே நேரத்தில் கல்வியறிவு பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணிகளை வழங்கலாம்.

கேள்வி:-ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறதே?

பதில்:-ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரெயில்வே துறையிடம் எடுத்து கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News