போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது
- தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.