TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
விஜய் பெயரில் அர்ச்சனை-வழிபாடு
த.வெ.க. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்து சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களில் பெரும்பாலானோர் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம், பாண்டி கோவில் ஆகியவற்றில் வழிபாடு செய்த பக்தர்கள் த.வெ.க. மாநாடு வெற்றி பெறவும், 2026 தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறி விஜய் பெயரில் அர்ச்சனை செய்தனர்
100 அடி உயர கம்பம் சரிந்ததால் 40 அடியில் புதிய கொடிக்கம்பம்
மதுரையில் இன்று நடைபெறும் த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில், விக்கிரவாண்டியை போன்று 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் தயாரானது. இந்த கொடிக்கம்பம் மாநாட்டு திடலில் நிரந்தரமாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை இந்த இரும்பினால் ஆன கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்றது. பீடத்தின் மீது கொடிக்கம்பத்தை வைத்தபோது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மாறாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மட்டும் சேதமடைந்தது. மீண்டும் அதே இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவினால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடையின் முன்பாக 40 அடி உயரத்தில் மற்றொரு கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஏற்றி வைக்கிறார்.
த.வெ.க. மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜயின் பெற்றோர் வந்தடைந்தனர்.