த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்த மதுரை மீனாட்சி அம்மன்- திருப்பரங்குன்றம் கோவில்கள்
- பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர்.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ் மூலம் தொண்டர்கள் வருகை தர தொடங்கினர். இன்று மாலை மாநாடு தொடங்குகிறது.
இதன் காரணமாக மதுரைக்கு வந்திருந்த த.வெ.க.வினர் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு படையெடுத்தனர். அதன்படி முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான த.வெ.க.வினர் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் கோவிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வேன், கார்களில் வந்தவர்கள் மாநாட்டு திடலுக்கு செல்லாமல் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் உள்ளூர் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று த.வெ.க.வினரும் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஏராளமான த.வெ.க. வினர் இன்று அதிகாலை முதல் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் த.வெ.க. வினர் அதிகளவில் காணப்பட்டனர். அங்கு மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோவில், கள்ளழகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாநாட்டு திட லுக்கு சென்றனர்.
இதே போல் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாண்டி கோவிலில் த.வெ.க.வினர் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் த.வெ.க. வினர் அதிகளவில் வருகை தந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் த.வெ.க. வினர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.