புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம்.
- தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். போட்டோ ஷூட் எடுப்பார். குழு அமைப்பார் அவ்வளவுதான். இதுவரை 52 குழு அமைத்து கிடப்பில் கிடக்கிறது. மக்களை ஏமாற்றுவதில் சாதனை படைத்திருப்பது தி.மு.க. அரசு.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டது. இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. எங்காவது காவல்துறை இருக்கிறதா?. இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் காவலர்களை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினுக்கு மக்கள் கூட்டம் வராது. அதனால் காவல்துறையை நிறுத்தி கூட்டத்தைக் காட்டுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் தொண்டர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து பணியாற்றினார்கள். அதையும் முறியடித்தோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கினோம்.
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அ.தி.மு.க. தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும்.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை கொடுத்தோம். ஒரு மருத்துவக் கல்லூரியை தி.மு.க. அரசால் கொண்டுவர முடிந்ததா?. வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.
தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள். காலோடு போனால் உயிரில்லாமல் வருகிறார்கள். கடலூரில் சளிக்கு சிகிச்சை பெற போன இடத்தில் நாய்க்கடி ஊசி போட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார். மக்களை காப்பதற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஓடுவதை நிறுத்துங்கள். மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்லுங்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும். மணமகளுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். தி.மு.க. எந்த கோரிக்கையையும் நிறைவேற்றிய வரலாறு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கன்னியாகுமரி-திருப்பதி கனரக தொழிற்வட்ட சாலைத் திட்டத்தில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், திருத்தணி வரை சாலை அமைக்க ரூ.350 கோடியில் டெண்டர் விடப்பட்டு, இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு.
அரக்கோணம் நகரத்துக்கு ரூ.110 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டப்பட்டது. அரக்கோணத்தில் ரூ.8 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. நெமிலி ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.
மேலும் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், பழனிபேட்டையில் உள்ள ரெட்டைக்கண் பாலத்துக்கு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், அரக்கோணம் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சுரங்கப்பாதை, நான்குவழிச்சாலை போன்ற கோரிக்கைகளை கொடுத்திருக்கிறீர்கள். அ.தி.மு.க. அரசு அமைந்ததும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.