தி.மு.க. ஆட்சி தொடருமா? இளைஞர் வாக்குகளைத் தட்டிப் பறிக்குமா த.வெ.க?- வெளியான கருத்து கணிப்பு
- அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
- அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநில அளவில் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டனர்.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு 55 சதவீதம் பேர் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று பதில் அளித்துள்ளனர்.
தி.மு.க. அரசு கடந்த 4½ ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள தா? என்பதற்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் த.வெ.க. எந்த கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்பதற்கு தி.மு.க. முதல் இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 3-வது இடத்திலும் உள்ளன.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, 41 சதவீதம் பேர் வரவேற்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி அடையவில்லை என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். நன்றாக இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் இளம் வாக்காளர்களை கவரக் கூடியவர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அண்ணாமலை 2-வது இடத்தில் உள்ளார்.
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
விஜய்யின் சுற்றுப் பயணம் அரசியலில் தாக்கத்தை எற்படுத்தும் என்று 41 சதவீதம் பேரும், ஓரளவுக்கு ஏற்படுத்தும் என்று 27 சதவீதம் பேரும், இல்லை என்று 24 சதவீதம் பேரும் கருத்து கூறி உள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக த.வெ.க. உள்ளதா? என்பதற்கு இல்லை என்று 44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக விஜய்யை மக்கள் பார்க்கிறார்களா? என்பதற்கு இல்லை என்று 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சீமான் வருகிற சட்டசபை தேர்தலில் எம்.எல். ஏ.வாக வேண்டும் என்று 69 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வாக்குகள் சிதறும். இது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது தவறு.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளில் தி.மு.க. வலுவான கூட்டணியாக காணப்படுகிறது.
அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும். சீமான் 4-வது இடத்தையே பிடிப்பார்.
த.வெ.க. வலுவான கூட்டணி அமைத்தால் 2-வது இடத்தை பிடிக்க அ.தி.மு.க. கடுமையாக போராடும்.
தமிழகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் 76 சதவீதம் வாக்குகள் பதிவானால் கூட்டணி ஆட்சி ஏற்படும். இந்த சதவீதம் மாறினால் வெற்றி வாய்ப்புகளும் மாறும். இந்த தேர்தலில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் தி.மு.க. முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க. கூட்டணி 30.62 சதவீதம் ஓட்டுகளை பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 26.39 சதவீதமும், த.வெ.க.வுக்கு 21.07 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.