தமிழ்நாடு செய்திகள்

160 மின்சார ரெயில்கள் ரத்தால் பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்

Published On 2026-02-18 13:37 IST   |   Update On 2026-02-18 13:37:00 IST
  • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
  • மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும்.

சென்னை:

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வருகிற 20-ந்தேதி முதல் அனைத்து மின்சார ரெயில்களும் 5 மற்றும் 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு வழிகளில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 320 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது 164 மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் இயக்கப்பட்டு வந்த மொத்த சேவையில் பாதி சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரெயில் சேவையும், செங்கல்பட்டிற்கு 35 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் சேவையை விட மிக குறைவாகும். மின்சார ரெயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பை சந்திக்க கூடும். எனவே இந்த 45 நாட்களும் பயணத்தை திட்டமிடுவது அவசியமாகும்.

Tags:    

Similar News