தமிழகத்தில் 20-ந்தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20-ந்தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 20-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.