தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலை சந்திக்க விஜய்க்கு காத்திருக்கும் மூன்று வாய்ப்புகள்- எதை தேர்வு செய்வார்?

Published On 2025-11-25 12:20 IST   |   Update On 2025-11-25 12:20:00 IST
  • தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.
  • மூன்று வாய்ப்புகளில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

2026 தேர்தல் களம்...

இப்படித்தான் இருக்கும் என்று அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் கருதும் அளவுக்கு அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளன. கடந்த 1967-க்கு பிறகு தமிழக தேர்தல் களத்தில் பல தேர்தல்களில் மூன்று முனை போட்டிகள் உருவானாலும் கடைசியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகள் தான் இறுதிப் போட்டியில் இருக்கும். இதில் ஏதாவது ஒரு கட்சி தான் வெற்றிக் கோப்பையோடு ஆட்சியையும் பிடிக்கும். இதுதான் இத்தனை ஆண்டு காலம் அரசியல் களத்தில் தமிழ் நாட்டு மக்கள் பார்த்து வருவது.

ஆனால் வருகிற தேர்தல் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் விதைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தான்.

அவரை சுற்றித்தான் அரசியல் களம் சுழலும்.... என்பது மட்டும் தெளிவாகிவிட்டது. தனது கொள்கை எதிரியாக பா.ஜ.க.வையும் அரசியல் எதிரியாக தி.மு.க.வையும் அவர் சித்தரித்துள்ளதால் விஜய் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டார் என்பதும் உறுதி.

அதே நேரம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று அவர் சொன்ன வார்த்தை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதாவது கூட்டணிக்கு அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு தலைமை த.வெ.க.வாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. தற்போதைய நிலையில் விஜயின் முன் இருப்பது மூன்று வாய்ப்புகள் தான்

முதலாவது வாய்ப்பு தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்குவது. அவ்வாறு ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்றால் தி.மு.க. கூட்டணி உடைய வேண்டும். அந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் வெளியேற வேண்டும்.

ஆனால் இப்போது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. திரை மறைவில் த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மேற்கொண்ட முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதை காட்ட தி.மு.க.வுடன் பேச்சு நடத்த டெல்லி மேலிடம் தனியாக 5 பேரை கொண்ட குழுவையும் அமைத்து விட்டது.

இரண்டாவது வாய்ப்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது. அப்படி ஒரு கூட்டணி உருவானால் அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது.

இப்படி ஒரு கூட்டணி உருவாக பிள்ளையார் சுழி போடப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் விஜய்-அ.தி.மு.க. கூட்டணி ஏற்படப்போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க.வும் இருப்பதால் இதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது இப்போதைய நிலை. ஏனெனில் கொள்கை எதிரியோடும், அரசியல் எதிரியோடும் கூட்டணி கிடையாது என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார்.

மூன்றாவதாக எந்த கட்சி வராவிட்டாலும் பரவாயில்லை. தனித்து தேர்தலை சந்திப்பது. அப்படி விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது பலமான மும்முனை போட்டியை உருவாக்கும்.

தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளே வெற்றிக்கு போதுமானது. அதிருப்தி ஓட்டுகள் விஜய் பக்கம் போகும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று தி.மு.க. கருதுகிறது. ஆனால் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்கும்.

இந்த மூன்று வாய்ப்புகளில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். அரசியல் களத்தை பொறுத்தவரை கடைசி வரை கூட்டணி முயற்சிகள் நடக்கும். கடைசியில் ஒன்று கூட்டணி அல்லது தனியாக போட்டி என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுக்கு விஜய் தயாராக இருப்பார். அவரது முடிவின் அடிப்படையில் தான் தேர்தல் முடிவும் இருக்கும்.

Tags:    

Similar News