பா.ம.க. உட்கட்சி பிரச்சனைக்கும் பா.ஜ.க. விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது- நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது.
- அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் யார்? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.
நெல்லை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பும் கிடையாது. பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது.
பா.ம.க. மோதல் விவகாரத்தை சமாதானம் செய்ய நாங்கள் முயற்சி எடுக்கவில்லை. உட்கட்சி பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது.
நெல்லையில் மட்டுமல்ல எல்லா மாநகராட்சிகளிலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருகிறது. கொரோனா 3-வது தொற்றும் வருவதாக கூறுகிறார்கள்.
எல்லா மாநகராட்சிகளிலும் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஒரு கவுன்சிலரை கைநீட்டி அடிப்பது போன்ற புகைப்படங்கள் வந்துள்ளது.
ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. காவல்துறையினர் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதலமைச்சர் மார்தட்டி பேசுகிறார்.
இது போன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நெல்லையில் 200-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.
தாமிரபரணி கூட்டுக் குடிநீரை 30 நாட்களுக்குள் அமைச்சர் சரி செய்து தருகிறேன் என்று கூறினார். இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். எல்லா குளங்களில் உள்ள மணல்களையும் தூர்வார வேண்டும். தூர்வாரினால் தான் அதிக அளவு தண்ணீர் பிடிக்கும்.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு பிரச்சனை வந்தது என்று கூறியுள்ளார். இது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்வீகத்தை எடுத்துப் பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகள் வரும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றபோது அங்கே இருப்பவர்கள் ஜெயலலிதாவிடம் கன்னடம் வாழ்க என்று கூற சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் ஜெயலலிதா உயிரே போனாலும் சொல்லமாட்டேன் என்று கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். இதை விதிமுறைகள் பின்பற்றி முதலமைச்சரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் யார்? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.