விஜய்யின் செயல்பாட்டை பழமொழி கூறி விமர்சித்த அமைச்சர் கோவி.செழியன்
- நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.170.22 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு கட்டப்பட உள்ள சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படும். தமிழக மக்களை வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறுகிறார்.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் செயல்பாடு கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என்பது போல உள்ளது.
அவர் முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான்.
தொடர் மழையால் டெல்டாவில் எந்தெந்த பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
பயிர் பாதிப்பிற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான வழிவகைகளில் நாங்கள் முயற்சி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.