தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-09-15 22:04 IST   |   Update On 2025-09-16 08:25:00 IST
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
  • அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்பு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

மாநிலத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.

திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறந்த உயர்கல்வி வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்படுகிறார். அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது.

திமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களும் தாக்கப்படுகிறார்கள்.

முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பதற்கு 2.0, 3.0 என பெயர் வைத்துவிட்டு கடைசியில் ஓ போட்டு சென்றுவிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்த உடன் முறையாக விசாரித்து டாஸ்மாக் ஊழல் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என செய்திகள் வந்துள்ளது. ஆனால், ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டார்கள். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா உணவு போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

அதிமுக ஆட்சியில் ரூ.60,000 கோடி முதலீடுகளை ஈர்த்தோம். மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா? அல்லது தொழில் தொடங்க சென்றாரா? என வரும் காலங்களில் தெரியும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.

கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?

அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டில் தான் நிற்பார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News