தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ்? - இ.பி.எஸ். எடுத்த அதிரடி முடிவு

Published On 2026-02-18 10:32 IST   |   Update On 2026-02-18 10:32:00 IST
  • தி.மு.க., அ.தி.மு.க.விடம் பா.ம.க. தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
  • தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

ராமதாஸ் தரப்பு பா.ம.க., தே.மு.தி.க. இரண்டு கட்சிகளும் இன்னமும் தங்களுடைய கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருகிறது. மோதலையடுத்து கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். ஆனாலும் பா.ம.க. தலைவர் நான்தான். என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது அன்புமணி என்று கூறி வந்தார்.

இதனையடுத்து தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். அதே நேரம் ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.

தி.மு.க., அ.தி.மு.க.விடம் அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

பா.ம.க. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாசின் பா.ம.க. தரப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இ.பி.எஸ். மறுப்பு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதாலும், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானமடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்று இ.பி.எஸ். தரப்பு மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News