தமிழ்நாடு செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்க- இ.பி.எஸ். வலியுறுத்தல்

Published On 2026-03-01 10:57 IST   |   Update On 2026-03-01 10:57:00 IST
  • வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சென்னை:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இதனால் ஈரான், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களும் இந்தியாவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள்.

இதையடுத்து சவூதி அரேபியா, குவைத் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News