ஜெயலலிதாவின் சொத்துக்களை தினகரன் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளார்- திண்டுக்கல் சீனிவாசன்
- முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
- யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.
சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார்.